தலித் எழுச்சிக்கு கழகத்தின் பங்களிப்பு

பிரன்ட் லைன்’ ஏடு படப்பிடிப்பு- தலித் எழுச்சிக்கு கழகத்தின் பங்களிப்பு

தலித் பிரச்சினையில் பெரியார் திராவிடர் கழகத்தின் பங்களிப்பை ‘பிரன்ட் லைன்’
(மார்ச் 28, 2008) ஆங்கிலப் பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது. ‘பிரன்ட்லைன்’ இதழில் தலித் பிரச்சினைகளை மிகவும் விரிவாகவும், ஆழமாக வும் எழுதி வரும் பத்திரிகையாளர் விசுவநாதன், சாளரப்பட்டியில் நடந்த சாதி வெறித்தாக்குதல் பற்றிய விரிவான கட்டுரையை எழுதியுள்ளார். அக்கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:
1990களில் தமிழ்நாட்டில் தலித் எழுச்சி உருவெடுத்தது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் ‘பறையர்’ சமூகப் பிரிவினரையும், தென் மாவட்டங்களில் ‘பள்ளர்’ சமூகப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக இந்த எழுச்சி அமைந்தது. ஆனால் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் (அருந்ததியினர் பெரும்பான்மையாக வாழக் கூடிய பகுதி), இந்த எழுச்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த சூழலில் - இப்போது மேற்கு மாவட்டத்தில் ‘தலித்’ மக்கள், ஒருங் கிணையத் தொடங்கியுள்ளார்கள். இது மேற்குப் பகுதி அரசியலில் புதிய சமுதாய எழுச்சி தொடங்கியுள்ளதன் அறிகுறியாகும். தலித் இயக்கங்கள், இடதுசாரி கட்சிகள், திராவிடர் இயக்கத்தின் பெரியாரிய முற்போக்காளர்கள் இந்த எழுச்சிக்கு ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள். சாளரப்பட்டி தலித் மக்களின் கோரிக்கைக்காக பெருமளவில் மக்களைத் திரட்டி, பெரியார் திராவிடர் கழகம், ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது. ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட முக்கிய தலித் அமைப்புகள், இடதுசாரி கட்சிகள், பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கியிருப்பது மேற்கு மாவட்ட தலித் எழுச்சிக்கு சான்றாக திகழ்கிறது என்று ‘பிரன்ட்லைன்’ கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கே.வி.கே. சாமி பிறந்த நாள் பொதுக் கூட்டம்

2008 மார்ச் 10 ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி சீரணி அரங்கில் மாலை 6 மணி அளவில் கே.வி.கே. சாமி பிறந்த நாள் விழா, பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு தூத்துக்குடி பெரியார் தி.க. மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்பு ரோசு தலைமையில் ஆழ்வை ஒன்றிய செயலாளர் நாத்திகன் இ. சேதுராமசாமி மற்றும் ஒட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் இரா. யேசுதாசன் முன்னிலையில் நகர துணைச் செயலாளர் செ. செல்லத்துரை நகரத் தலைவர் கோ.அ.குமார், ஆழ்வை ப. முருகேசன்,

மாவட்ட துணைத்தலைவர் வெ. பால்ராசு ஆகியோர் உரையாற்றினர்.

பின்பு பெரியார் தி.க. தலைமை கழக உறுப்பினர் தூத்துக்குடி பால். பிரபாகரன் தமிழர்களுக்கு எதிராக நின்று செயல்படும் பார்ப்பன கும்பல்களை அடையாளம் காட்டியும், பாசிச இந்துத்துவா சக்திகளே தமிழர்களுக் கெதிரான சக்திகள் என்றும் உரையாற்றினார்.

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து சிறப்புரை யாற்றுகையில், திராவிட நாடு கிடைக்குமானால் கவர்னர் ஜெனரலாக தூத்துக்குடி கே.வி.கே. சாமியைத்தான் நியமிப்போம் என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்ட கே.வி.கே. சாமியின் வரலாற்றினை நினைவு கூர்ந்தார். ஆழ்வார் திருநகரி ரூ. பெருங்குளம் போன்ற பகுதிகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கக் கோட்டை உடைவதற்கு திராவிட இயக்கங்கள் ஆற்றிய பணிகளையும் தற்போது செயலலிதா தொடங்கி டிராஃபிக் இராமசாமி வரை தமிழர்களுக்கு செய்யும் துரோகங்களையும் தமிழருக்கெதிரான கருத்துப் பரப்பல்களையும் விளக்கி சுமார் 2 மணி நேரம் உரையாற்றினார்.

தூத்துக்குடி பெரியார் தி.க. மாவட்ட செயலாளர் ச.கா. பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். நகர செயலாளர் பால். அறிவழகன், நெல்லை மாவட்ட செயலாளர் சி.ஆ.காசிராசன், நெல்லை இராசா, பிரபு, நகர துணைத்தலைவர் சா.த. பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் க. மதன், குமாரசிங் மற்றும் கழகத்தோழர்களும் திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

செய்தி : வ. அகரன்


அப்பா - மகன்
மகன் : நவீன தொழில் நுட்பத்துடன் இராமாயணத் தொடர் ‘சன்’ தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறதாமே!
அப்பா : ஆம், மகனே!
மகன் : நவீன தொழில் நுட்பத்துடன் ‘இராமாயணம்’ வருவதை எதிர்க்காத பா.ஜ.க.வினர், நவீன தொழில் நுட்பத் துடன் ‘இராமன் பாலம்’ வருவதை மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும், அப்பா?
அப்பா : எனக்குத் தெரியாது மகனே!



சிங்களம் நடத்தும் பெயர் சூட்டாத யுத்தம்- ஈழத்தில் - என்ன நடக்கிறது?

தமிழ் ஈழத்தில் ஒவ்வொரு நாளும் ஏராளமான விடுதலைப் புலிகளை சாகடித்துவிட்டதாக இலங்கை பிரச்சாரம் செய்வது உண்மையா? வன்னிப் பகுதியில் - இப்போது என்ன நடக்கிறது?

நாள்தோறும் சண்டைகள் நடக்கும் கடுமையான சமர்க்களமாக வன்னிப் போர்க் களம் உள்ளது. இன்றைய நிலையில் உல களாவிய ரீதியில் மரபு வழிச் சண்டைகள் தீவிரமாக நடைபெறும் சமர்க்களமாக வன்னிக் களமே உள்ளது.
கடந்த எட்டு மாத காலமாக பல்வேறு தாக்குதல் தந்துரோபாயங்களை பயன் படுத்தி நிலம் பிடிக்க சிங்களப் படைகள் முயற்சிக்கின்றன. எனினும், குறிப்பிட்டு கூறும் அளவிற்கு அதனால் ஒரு நில ஆக்கிரமிப்பு வெற்றியை பெற முடியவில்லை.
இதே வேளை எடிபல, றணகோச, ஜெய சிக்குறு, தீச்சுவாலை என்ற ஒவ்வொரு சமர்களுக்கும் பெயர் சூட்டிய சிங்களப் படைத் தலைமை; கடந்த 8-9 மாத காலமாக வன்னியில் நடக்கும் சண்டைகளுக்கு பெயர் சூட்டவில்லை. வெற்றி பற்றிய நம்பிக்கை யீனங்களால்தான் சண்டைகளுக்கு பெயர் சூட்டலைச் செய்ய இராணுவத் தலைமை முன்வரவில்லை.
எனினும்பெயர் சூட்டப்படாத பெரும் சண்டைகள் வன்னிச் சமர்களில் நடந்த படியே உள்ளன. வன்னிச் சமரின் இராணுவப் பரிமாணம் பரந்து விரிந்தது. வடபோர் முனை -மன்னார்க்களம் - வவுனி யாக்களம் - மணலாற்றுக் களம் என்று வன்னிப்போர் அரங்கம் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சமர் அரங்கிற்கும் பொறுப் பாக தகுதி வாய்ந்த தளபதிகளை நியமித் துள்ள பிரபாகரன் தமிழர் சேனையின் மரபுப் போர்ப் படைப் பிரிவுகளையும் அங்கு நிலைகொள்ள வைத்துள்ளார்.

கிட்டு பீரங்கிப்படையணி - குட்டிசிறி மோட்டார் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி போன்றவற்றுடன் இம்ரான் பாண்டியன் படையணி - சாள்° அன்ரனி படையணி - சோதியா படையணி - மாலதி படையணி - ஜெயந்தன் படையணி போன்ற தாக்குதல் படையணிகளையும் இந்த சமர் அரங்குகளில் நிறுத்தி வைத்துள்ளார். இவற்றுடன் பொன்னம்மான் கண்ணி வெடிப் பிரிவு மற்றும் சினைப்பர் அணிகள் - ஆர்.பி.ஜி. கொமாண்டோ அணிகள் போன்ற சிறப்பு அணிகளையும் சமரரங்கப் பகுதிகளுக்கு நகர்த்தியுள்ளார்.

சுருக்கமாகச் சொன்னால் சிங்களத் தின் படைக்கட்டுமானங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழர் சேனையில் படைக்கட்டுமானங்களை உருவாக்கிய பிரபாகரன் வன்னிப்போர் இலங்கை சிங்களப் படையின் புதை குழியாக மாற்றும் போர் வியூகங்களுடன் தமிழர் படையை நெறிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

முன்னர் யாழ்-வவுனியா சாலையை பற்றுக்கோடாகக் கொண்டு ஜெயசிக்குறு படை நடவடிக்கையை சிங்களப் படையினர் நடாத்தியபோது அன்றைய முன்னரங்கப் பகுதிகளில் இருந்து தந்திரோபாய பின்னகர்வுகளை புலிகள் செய்திருந்தனர். பின்னர் வன்னிக்குள் நுழைந்த சிங்களப் படை மீது பொருத்தமான இடங்களில் வைத்துத் தாக்கி எதிரிக்கு பாரிய உயிரி ழப்புக்களை புலிகள் கொடுத்திருந்தனர். மாங்குளம் - ஒட்டிகட்டான் வரை வந்த சிங்களப் படை அகலக் கால்பரப்பி நிலை கொண்டபோது பிரபாகரன் ஓயாத அலைகள் 3 வலிந்த தாக்குதல் நடவடிக்கையை ஒட்டு கட்டாவில் தொடக்கி- ஜெயசிக்குறுவுக்கு சமாதி கட்டியிருந்தார்.
இப்போதைய போரில் புலிகளின் சண்டை வியூகம் வேறுபட்டது. முன்னரங்கப் பகுதிகளிலேயே சிங்களப் படையுடன் கடுமையாகச் சண்டையிடுகின்றனர். கடந்த 8-9 மாத காலமாக வன்னியின் முன்னரங்கப் பகுதிகளே சமர் அரங்காக நிலைத்திருக்கின்றன. இந்த முன்னரங்கத் தாண்டி உள்ளே வர முடியாது சிங்களப்படை திணறுகின்றது.
இந்த முன்னரங்க சண்டைகளில் சிங்களப்படை அதிக உயிரிழப்புக்களை சந்தித்து வருகின்றது. படையினர் பெரு மளவில் படுகாயம் அடைந்து வருகின்றனர். படையை விட்டோடும் தொகையும் அதிகரித் துள்ளது.
உள் நுழையும் முன்பே சிங்களப் படை இத்தகைய சிதைவு நிலையை அடைந் துள்ளது என்றால் உள் நகர்ந்து அகலக் கால்பரப்பும் நிலை எழுந்தால் சிங்களப்படை சந்திக்கவுள்ள அபாயம் கடுமையாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
“வன்னி பெருநிலப் பரப்பை ஆக்கிர மித்து - புலிகளை அழிப்பது” என்பதே வன்னிப்போரில் சிங்களப் படையின் இராணுவ நோக்கமாகும்.

இந்த நோக்கத்தை அடைய அது விரிவான நகர்வுத் திட்டத்தை நாடியுள்ளது. வன்னியின் கிழக்கு முனையான கொக்குத் தொடுவாயிலிருந்து; மேற்கு முனையான திருக்கேதீச்சரம் வரையுள்ள முன்னரங்க நிலப்பகுதி எங்கும் கம்பளம் விரிப்பது போலப் படையை நகர்த்தி வன்னியை ஆக்கிரமிப்பது என்ற இராணுவத் திட்டத் துடன் உள்ளது.

மாறி மாறி எல்லா முனைகளிலும் தொடர்ச்சியான சண்டைகளை நடத்துவது மற்றும் ஆழ ஊடுருவும் படையணிகளைப் பயன்படுத்தி புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் தாக்குதல்களை நடத்துவது என்ற சண்டைத் தந்திரங்களை சிங்களப்படைகள் கடைப் பிடிக்கின்றன.

வன்னிப்போரில் படையினரின் போர்த் திட்டமும், தந்திரங்களும் இது வரை சிங்களத்துக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை. மாறாக நீண்டதொரு போரில் சிங்களப் படைகள், வன்னியில் சிக்குண்டுள்ளன.
நீண்டு நிலைக்கும் தொடர்ச்சியான போரில் ஆக்கிரமிப்புப் படைகள் களைத்துப் போய் உளவுரன் உடைந்து தோல்வியைச் சந்திப்பது தான் போர் வரலாறாக உள்ளது.

ஆனால், ஒரு விடுதலைச் சேனையின் இராணுவ நிலை வேறு விதமாக இருக்கும். தனது மண்ணில், தனது மக்களின் ஊர்களில், கால நீட்சியுடன் போர் நடக்கும்போது, முழு வளத்தையும் திரட்டி மக்களை போர் மயப்படுத்தி, வெற்றிகரமாகப் போரை முன்னெடுக்கும் வாய்ப்புகள் விடுதலைச் சேனைக்கு இருக்கின்றன.

இந்த இராணுவ யதார்த்தத்தின் அடிப்படையில்தான் வீட்டிற்கு ஒருவன் நாட்டிற்காக என்ற கோசத்துடன் புலிகள் இயக்கம் ஆட்திரட்டலைச் செய்து - பல வளர்ச்சியைப் பெருக்கியுள்ளது.அதே சமயம், சமர் அரங்குகளில் சிங்களத்தின் டிவிசன் படைக் கட்டுமானங்களுக்கு நிகராக கட்டளைப் பீடங்களை நிறுவி, படைக் கட்டுமானங்களையும் உருவாக்கி, புலி களின் மரபுப் போர் ஆற்றலை பிரபாகரன் பெருக்கியுள்ளார்.

இப்போது வன்னிக்களம் என்பது ஸ்டாலின்கிராட் சண்டைக் களத்துக்கு நிகராக, போரியல் புத்தகங்களில் பதியப் படும் இராணுவ முக்கியத்துவத்துடன் காணப்படுகின்றது.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜெர்மனியப் படையைச் சிதைத்து, ஜெர்மனிக்குப் படுதோல்வியைப் பரிசளித்த °டாலின் கிராட் சண்டையை நினைவூட்டும் களமாக வன்னிப்போரரங்கம் காட்சி மாற்றம் கண்டு வருகின்றது. கிட்லரின் ஜெர்மனியப் படைகள் சந்தித்த படு தோல்விய மகிந்தரின் சிங்களப் படைகள் சந்திப்பது திண்ணம்.

0 comments: