சாளரப்பட்டியில் அருந்ததி யினர் மீது நடத்தப்பட்ட வன் முறையைக் கண்டித்து, 5.3.2008 அன்று உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் குறிப்பிட்டதாவது:
இந்த சாதி ஒழிப்புக் கூட்டியக்கம் தொடர்ந்து தலித் மக்கள் மீதான வன் முறைகளை கண்காணிப்பதற்கு ஒரு நடவடிக்கைக் குழுவை தனக்குள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த சாளரப்பட்டி தாக்குதல் தொடர்பாக எந்தவொரு போராட்டத்தையும் யாரும் தனியாக எடுக்காமல், இந்த கூட்டியக்கமே நடத்துவது போல நாம் ஒரு முடிவு செய்து கொண்டு ஒரு குழுவை நியமித்து, அவர்கள் இந்த வழக்குகள் பதியப்படுவதை, நீதி மன்றம் நாம் செல்வதை அல்லது வன் கொடுமைத் தடுப்புச் சட்டம் அறிவிக்கின்ற இழப்பீடுகளை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதை அந்தக் குழுவிடம் ஒப்படைத்து அவர்கள் வழிகாட்டுதல்படி நாம் இயங்க வேண்டும் என்ற வேண்டு கோளை நான் முதலில் உங்கள் முன்னால் வைக்கிறேன்.
அம்பேத்கர் அவர்கள் நாக்பூரிலே கவர்னர் ஜெனரலுடைய நிர்வாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஒரு மாதத்தில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். அந்த மாநாட்டில் மூன்று மாநாடுகளை நடத்தினார். மக்களுக்கு ஒரு பொதுவான மாநாடு. பெண்கள் மாநாடு. தொண்டர்களின் சாதி ஒழிப்பு படை வீரர்கள் மாநாடு. அப்போது பல செய்திகளை பகிர்ந்து கொண்டார். அதில்தான் கற்பி, போராடு, ஒன்றுசேர் என்ற முழக்கத்தை வைத்தார். நாம் தவறாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம். கற்பி, ஒன்று சேர், போராடு என்று, அவர் வைத்த முழக்கம். மக்களிடம் செய்திகளை கொண்டு போய் சேர்க்க வேண்டும். அவர்களிடம் இதை உணர்த்த வேண்டும். போராட்டம் எடுக்க வேண்டும். போராட்டத்தின் வழியாக நாம் ஒன்று சேர வேண்டும். அதுதான் நம்மால் முடிந்தது. ஆதிக்க சாதிகள் தான் இணைந்து வந்து போராடுவார்கள். நாம் போராட்டத்தின் ஊடாக இணைவோம் என்பதைத்தான் அவர் கற்பி, போராடு, ஒன்று சேர் என்றார். நாம் மக்களிடம் கற்பித்து இப்பொழுது போராடிக் கொண் டிருக்கிறோம் என்பதனுடைய தொடக்கம் இப்பொழுது தொடங்கி இருக்கிறது.
அடுத்தது இன்னொன்றைச் சொல்ல வேண்டும். தோழர்கள் எல்லாம் சொன்னார்கள், நாம் எப்படி இந்தத் தாக்குதலை சந்திக்கப் போகிறோம் என்று. வரலாறு பல நிகழ்ச்சிகளை நமக்கு காட்டி இருக்கிறது. நம்முடைய தமிழ்நாட்டு வரலாற் றில் சென்னை பின்னி மில் போராட்டம் 1925 இல் நடந்த போது தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி இந்துக்கள் தாக்குதல் நடத்திய போது நீதிக்கட்சியின் சுந்தர்ராவ் நாயுடு என்பவர், தனது தலைமையில் ஒரு படையை அமைத் தார். தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படும் போது அவர்களுக்காக போய் போராடுவது, தாக்குவது என்று படை ஒன்றை உண்டாக் கினார். அதற்குப் பின்னால் தொடர்ந்து, அது நடந்து வந்தது.அப்படிப்பட்ட ஒரு அமைப்பை ‘சமதா சயினிக் தல்’ என்ற பெயரில் டாக்டர் அம்பேத்கர் நாக்பூர் மாநாட்டில் அறிவித்தார். அதில் அம்பேத்கர் பேசுகின்ற போது தான் சொன்னார். “நான் அகிம்சையை விரும்பு கிறேன். அகிம்சை என்பது தனியான ஒன்று அல்ல. அகிம்சை என்பதே தனிச் சொல் அல்ல. இம்சைக்கு எதிரான அனைத்தும் அகிம்சை தான்” என்று சொன்னார். வன் முறையை எதிர்ப்பதற்காக நாம் வன்முறை யைக் கையாண்டால் அதுவும் அகிம்சை என்று சொன்னார். அந்த மாநாட்டில் தான் சொன்னார். அப்போது ‘சமதா சயினிக்தல்’ தொண்டர் களிடம் சொன்னபோது, நீங்கள் வன்முறையை உங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு கையிலெடுக்க வேண்டும் என்று சொன்னார். அதற்குப் பின்னால் வரலாற்றில் கேரளத் தில் அய்யன் காளி இரட்டைக் குவளை வைத்து தேனீர் கடைகளில் கள்ளுக்கடை களில் தாழ்த்தப் பட்ட மக்கள் அனுமதிக்க மறுத்தபோது வீதிகளில் வண்டிகள்கூட செல்லக் கூடாது என்று மறுத்த போது, உதைத்துவிட்டு உரிமைகளை கையிலெடுத் தார் அய்யன் காளி. புலையர்களுக்கு ஒரு பெரு வாழ்வைக் கொடுத்தவர் அவர். அமெரிக்க நாட்டில் மால்கம் எக்ஸ் தொடங்கிய நேஷன் ஆப் இஸ்லாம் என்ற அமைப்பு - அது எங்கெல் லாம் கறுப்பர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டதோ அங்கெல்லாம் போய்த் தாக்கி னார்கள். திருப்பித் தாக்கினார்கள். அப்படிப் பட்ட ஒரு அமைப்பை உண்டாக்க வேண்டிய அவசியம் வந்து விட்டதோ என்று நாம் எண்ணுகிறோம். நிச்சயம் அப்படியொரு அமைப்பு உருவாக வேண்டும். அது குறித்தும் இந்த இருபெரும் தலைவர்களும் உட்கார்ந்து அதைப்பற்றி யோசிக்க வேண்டும் - என்றார் கழகத் தலைவர்.
தேனியில் பதட்டம்
தேனியில் குடும்பத்துடன் சாலையில் நடந்து கொண்டிருந்தது ஒரு துப்புரவுத் தொழிலாளியின் குடும்பம். தேனி காவல்நிலைய போலீசார் அந்த குடும்பத்தை அழைத்து, இளம்பெண்ணை மட்டும் உள்ளே அழைத்து, பெற்றோரை வெளியே அனுப்பிவிட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி அந்தப் பெண் செய்த புகாரையும் பதிவு செய்ய மறுத்து வருகின்றனர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், இரண்டு போலீசாரை மட்டும் இட மாற்றம் செய்துள்ளார். வழக்குப் பதிவு செய்யாததையும், பாலியல் வன்முறையையும் கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் தலித் அமைப்புகளோடு சேர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 18.3.2008 காலை தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது. காவல்துறை கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்பட ஆர்ப்பாட்டம் நடத்த வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெரியார் திராவிடர் கழகம், ஆதித் தமிழர் பேரவை மற்றும் தலித் அமைப்புத் தோழர்களை கைது செய்துள்ளது.
(இதழ் அச்சாகும் நேரத்தில் கிடைத்த செய்தி: தேனியில் பதட்டம் நிலவுகிறது.)
0 comments:
Post a Comment