தலித் மக்கள் மீதான வன்முறைகளை எதிர்கொள்ள தாக்குதல் படை அமைப்போம்! தலைவர் கொளத்தூர் மணி


சாளரப்பட்டியில் அருந்ததி யினர் மீது நடத்தப்பட்ட வன் முறையைக் கண்டித்து, 5.3.2008 அன்று உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் குறிப்பிட்டதாவது:

இந்த சாதி ஒழிப்புக் கூட்டியக்கம் தொடர்ந்து தலித் மக்கள் மீதான வன் முறைகளை கண்காணிப்பதற்கு ஒரு நடவடிக்கைக் குழுவை தனக்குள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த சாளரப்பட்டி தாக்குதல் தொடர்பாக எந்தவொரு போராட்டத்தையும் யாரும் தனியாக எடுக்காமல், இந்த கூட்டியக்கமே நடத்துவது போல நாம் ஒரு முடிவு செய்து கொண்டு ஒரு குழுவை நியமித்து, அவர்கள் இந்த வழக்குகள் பதியப்படுவதை, நீதி மன்றம் நாம் செல்வதை அல்லது வன் கொடுமைத் தடுப்புச் சட்டம் அறிவிக்கின்ற இழப்பீடுகளை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதை அந்தக் குழுவிடம் ஒப்படைத்து அவர்கள் வழிகாட்டுதல்படி நாம் இயங்க வேண்டும் என்ற வேண்டு கோளை நான் முதலில் உங்கள் முன்னால் வைக்கிறேன்.
அம்பேத்கர் அவர்கள் நாக்பூரிலே கவர்னர் ஜெனரலுடைய நிர்வாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஒரு மாதத்தில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். அந்த மாநாட்டில் மூன்று மாநாடுகளை நடத்தினார். மக்களுக்கு ஒரு பொதுவான மாநாடு. பெண்கள் மாநாடு. தொண்டர்களின் சாதி ஒழிப்பு படை வீரர்கள் மாநாடு. அப்போது பல செய்திகளை பகிர்ந்து கொண்டார். அதில்தான் கற்பி, போராடு, ஒன்றுசேர் என்ற முழக்கத்தை வைத்தார். நாம் தவறாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம். கற்பி, ஒன்று சேர், போராடு என்று, அவர் வைத்த முழக்கம். மக்களிடம் செய்திகளை கொண்டு போய் சேர்க்க வேண்டும். அவர்களிடம் இதை உணர்த்த வேண்டும். போராட்டம் எடுக்க வேண்டும். போராட்டத்தின் வழியாக நாம் ஒன்று சேர வேண்டும். அதுதான் நம்மால் முடிந்தது. ஆதிக்க சாதிகள் தான் இணைந்து வந்து போராடுவார்கள். நாம் போராட்டத்தின் ஊடாக இணைவோம் என்பதைத்தான் அவர் கற்பி, போராடு, ஒன்று சேர் என்றார். நாம் மக்களிடம் கற்பித்து இப்பொழுது போராடிக் கொண் டிருக்கிறோம் என்பதனுடைய தொடக்கம் இப்பொழுது தொடங்கி இருக்கிறது.

அடுத்தது இன்னொன்றைச் சொல்ல வேண்டும். தோழர்கள் எல்லாம் சொன்னார்கள், நாம் எப்படி இந்தத் தாக்குதலை சந்திக்கப் போகிறோம் என்று. வரலாறு பல நிகழ்ச்சிகளை நமக்கு காட்டி இருக்கிறது. நம்முடைய தமிழ்நாட்டு வரலாற் றில் சென்னை பின்னி மில் போராட்டம் 1925 இல் நடந்த போது தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி இந்துக்கள் தாக்குதல் நடத்திய போது நீதிக்கட்சியின் சுந்தர்ராவ் நாயுடு என்பவர், தனது தலைமையில் ஒரு படையை அமைத் தார். தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படும் போது அவர்களுக்காக போய் போராடுவது, தாக்குவது என்று படை ஒன்றை உண்டாக் கினார். அதற்குப் பின்னால் தொடர்ந்து, அது நடந்து வந்தது.அப்படிப்பட்ட ஒரு அமைப்பை ‘சமதா சயினிக் தல்’ என்ற பெயரில் டாக்டர் அம்பேத்கர் நாக்பூர் மாநாட்டில் அறிவித்தார். அதில் அம்பேத்கர் பேசுகின்ற போது தான் சொன்னார். “நான் அகிம்சையை விரும்பு கிறேன். அகிம்சை என்பது தனியான ஒன்று அல்ல. அகிம்சை என்பதே தனிச் சொல் அல்ல. இம்சைக்கு எதிரான அனைத்தும் அகிம்சை தான்” என்று சொன்னார். வன் முறையை எதிர்ப்பதற்காக நாம் வன்முறை யைக் கையாண்டால் அதுவும் அகிம்சை என்று சொன்னார். அந்த மாநாட்டில் தான் சொன்னார். அப்போது ‘சமதா சயினிக்தல்’ தொண்டர் களிடம் சொன்னபோது, நீங்கள் வன்முறையை உங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு கையிலெடுக்க வேண்டும் என்று சொன்னார். அதற்குப் பின்னால் வரலாற்றில் கேரளத் தில் அய்யன் காளி இரட்டைக் குவளை வைத்து தேனீர் கடைகளில் கள்ளுக்கடை களில் தாழ்த்தப் பட்ட மக்கள் அனுமதிக்க மறுத்தபோது வீதிகளில் வண்டிகள்கூட செல்லக் கூடாது என்று மறுத்த போது, உதைத்துவிட்டு உரிமைகளை கையிலெடுத் தார் அய்யன் காளி. புலையர்களுக்கு ஒரு பெரு வாழ்வைக் கொடுத்தவர் அவர். அமெரிக்க நாட்டில் மால்கம் எக்ஸ் தொடங்கிய நேஷன் ஆப் இஸ்லாம் என்ற அமைப்பு - அது எங்கெல் லாம் கறுப்பர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டதோ அங்கெல்லாம் போய்த் தாக்கி னார்கள். திருப்பித் தாக்கினார்கள். அப்படிப் பட்ட ஒரு அமைப்பை உண்டாக்க வேண்டிய அவசியம் வந்து விட்டதோ என்று நாம் எண்ணுகிறோம். நிச்சயம் அப்படியொரு அமைப்பு உருவாக வேண்டும். அது குறித்தும் இந்த இருபெரும் தலைவர்களும் உட்கார்ந்து அதைப்பற்றி யோசிக்க வேண்டும் - என்றார் கழகத் தலைவர்.


தேனியில் பதட்டம்

தேனியில் குடும்பத்துடன் சாலையில் நடந்து கொண்டிருந்தது ஒரு துப்புரவுத் தொழிலாளியின் குடும்பம். தேனி காவல்நிலைய போலீசார் அந்த குடும்பத்தை அழைத்து, இளம்பெண்ணை மட்டும் உள்ளே அழைத்து, பெற்றோரை வெளியே அனுப்பிவிட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி அந்தப் பெண் செய்த புகாரையும் பதிவு செய்ய மறுத்து வருகின்றனர்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், இரண்டு போலீசாரை மட்டும் இட மாற்றம் செய்துள்ளார். வழக்குப் பதிவு செய்யாததையும், பாலியல் வன்முறையையும் கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் தலித் அமைப்புகளோடு சேர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 18.3.2008 காலை தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது. காவல்துறை கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்பட ஆர்ப்பாட்டம் நடத்த வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெரியார் திராவிடர் கழகம், ஆதித் தமிழர் பேரவை மற்றும் தலித் அமைப்புத் தோழர்களை கைது செய்துள்ளது.

(இதழ் அச்சாகும் நேரத்தில் கிடைத்த செய்தி: தேனியில் பதட்டம் நிலவுகிறது.)

பெரியார் - அம்பேத்கர் - மனித உரிமை அமைப்புகள் ஒன்று பட்டுப் போராடுவோம்!


உடுமலையில் 5.3.2008 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் பேசுகையில் குறிப் பிட்டதாவது:

சாதி ஒழிப்பு கூட்டியக்கம் கோபி நம்பியூரிலே மாரி யப்பனுக்கு திருமண மண்டபம் தர மறுத்ததில் தொடங்கிய இந்த கூட்டியக்கம் பேரெழுச்சியோடு இன்றைக்கு சாளரப்பட்டி அருந்ததிய மக்களுக்காகவும் இந்த ஆர்ப் பாட்டத்தை இங்கு நடத்துகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்திலே தலைவர் அதியமான் சொன்னது போல தமிழ்நாட்டி லிருக்கக்கூடிய எல்லா தலித் இயக்கங்களையும், சுய மரியாதை இயக்கங்களையும் மனித உரிமை இயக்கங் களையும் ஒன்றிணைத்து இன்றைக்கு ஒன்றுபட்டு விட்டோம்; ஒன்றுபட்டு விட்டோம் என்கிற குரலோடு இங்கே கூடியிருக்கிறோம்.

சாளரப்பட்டிக் கலவரம் தாக்குதல் கொடூரமான நிலையில் நடந்திருக்கின்றது. அந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் அங்கே ஆதிக்க சாதியினராக இருப்பவர்கள் பத்து தேனீர் கடைகளிலே தனிக் குவளைகள் இருக்கின்ற தென்று நீண்டகாலமாக காவல்துறைக்கு புகார் செய்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது அவர்கள் பத்துக் கடைகளையும் மூடி விடுவோம் என்று மூடி விட்ட நிலையிலே இரண்டு கடைகள் மட்டும் அதிலே அங்கு இருக்கக்கூடிய ஆதிக்க சாதியிலே வேறு பட்ட சமூகத்தைச் சார்ந்த வர்கள். அவர்கள் இரண்டு கடைகளை திறந்தபோது இன்றைக்குத் தாக்குதல் நடத்திய எட்டு கடைக்காரர் களும் அந்த ஊர் மக்களும், ஆதிக்க சாதியினரும் அந்த இரண்டு தேனீர் கடைகளையும் தாக்கியிருக்கிறார்கள். அந்த தாக்குதல் நடத்திய போது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்குமேயானால், வன்கொடுமை சட்டத்திலே அன்றைக்கே அப்போதே நடவடிக்கை எடுத்திருக்கு மானால் இவ்வளவு பெரிய, நூற்றுக்கணக்கான அருந்ததிய மக்கள் - 80 வயது வேலம்மாள் முதல் 5 வயது சிறுவன் வரைக்கும் தாக்கப்பட்டு இருக்க மாட்டார்கள். அப்போதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தாக்குதல் நடந்த போதும் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. அதை நான் சொல்லவில்லை. காவல்துறையே பத்திரிகைக்கு செய்தி கொடுத்து இருக்கிறது. நாங்கள் குறைவானவர்கள் இருந்தோம். ஆகவே ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்லு கிறார்கள் என்றால், அப்போது காவல்துறை ஒப்புக் கொள்கிறது. அங்கு தாக்குதல் நடந்தது உண்மை. நாங்கள் அங்கு ஒன்றும் செய்ய முடியவில்லையென்று சொல்கின்றார்கள். ஏன் இவர்கள் 20 பேர் இருந்தால், அங்கே தாக்குதலை சமாளிக்க முடியாதா? டி.எஸ்.பி.க்கு எதற்காக துப்பாக்கி தரப்பட்டிருக்கிறது? காவல்துறை ஆய்வாளருக்கு எதற்காக துப்பாக்கி தரப்பட்டிருக்கிறது? ஒரு சந்தேகம். ஏன் என்று சொன்னால், தமிழ்நாட்டில் அதுவும் கோவை மாவட்ட மக்களுக்கு மிகுந்த சந்தேகம் வந்துவிட்டது. இனி அந்தத் துப்பாக்கிகள் அவர்களுக்கு தரப்படுமா? அல்லது சந்தனக் கடத்தல்காரர்கள் கத்தியைக் காட்டிய உடனே தரக்கூடிய காவல்துறை ஆயிற்றே! இவர்களுக்கு எதற்கு துப்பாக்கி என்று பறித்துக் கொள்வார்களா என்ற நிலை இருக்கிறது. அங்கே 20 பேர் பார்த்துக் கொண்டு இருந்தோம் என்று பதிவு செய்திருக்கிறார்கள். அதே நேரத்திலே பொய்யான வழக்குகள் ஆதித் தமிழர் பேரவை பொறுப்பாளர்கள் மீது. என்னவென்று கேட்டால் கோயிலுக்குள் நுழைய முயன்றதால் என்று சொல்லி பொய்யாக பதிவு செய்து, இந்தத் தாக்குதல் தொங்கியதற்கு இவர்கள் காரணம் என்பதுபோல ஒரு பொய்யான காரணத்தை காவல்துறையே உருவாக்கி பத்திரிகையிலே செய்திகள் தருகிறார்கள்.

அதோடு மட்டுமல்ல, இங்கே காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர் வீட்டிலே, அவர் சமூகத்திலே அவர் என்ன சாதியினராக வேண்டுமானாலும் இருக்கலாம். காவல்துறையிலேயும் அவர்கள் வீட்டிலே என்ன சாதியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அவர்கள் காக்கிசட்டை போட்ட பின்னால் அவர்கள் மக்கள் நலப் பணியாளர்கள். அவர்களுக்குள் சாதி இருக்கக் கூடாது. ஆனால், அந்த துணைக் கண்காணிப்பாளர் நான் இந்த சாதி தான் என்று குறிப்பிட்டுச் சொல்லி, இங்கே தன்னை அடையாளப்படுத்துகிறார். அதனுடைய விளைவு, இதே உடுமலையிலேயே அந்த துணை கண்காணிப்பாளர் ஈசுவரன் அவர்கள் வந்த பின்னால் துங்காவி, அனுப்பட்டி, வல்லக்குண்டாபுரம், கொங்கல் நகரம், சாளையூர், தும்பலப்பட்டி - ஐந்து கிராமங்களிலே இதே போல தாக்குதல்கள் தலித்துக்கள் மீது நடந்திருக்கிறது. அந்த அய்ந்து கிராம நிகழ்ச்சிகளிலும் இதே நிலையை அவர் கையில் எடுத்து நியாயம் வழங்கவில்லை. தலித்துக்களை முடக்கி அவர் உயர்சாதியினருக்கு துணைப் போயிருக் கின்றார்கள். ஆகவே, அரசு உடனடியாக அந்த துணைக் கண்காணிப்பாளரை இங்கிருந்து மாற்ற வேண்டும். இன்னும் சொல்லப் போனால், எந்த ஆதிக்க சாதிகள் அதிகமாக இருக்கிறார்களோ அந்த பகுதியிலே அவர்கள் சார்ந்த அதிகாரிகளை நியமிக்கக் கூடாது. நியமித்தால் அவர்கள் சாதிக்கத்தான் துணைப் போகின்றார்கள். அதனால் தான் இந்த முழக்கத்திலே அதை மய்யமாக வைக்கப்பட்டது.

அதேபோல, அந்த பள்ளியிலே தலைமையா சிரியர் - பள்ளியைப் போய் தாக்கப் போகின்றார்கள். என்ன கொடுமை என்று சொன்னால், சாதிவெறி தாண்டவம், தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமை எவ்வளவு கூர்மைப்பட்டு இருக்கிறது என்று சொன்னால், அந்த சாளரப்பட்டிப் பள்ளியிலே தாக்குதலுக்குப் போன வர்கள், அதே பள்ளியிலே அய்ந்தாம் வகுப்பு படிக் கின்ற தலித் மாணவனை அடிக்கப் போயிருக்கின்றார்கள். பேனாவை கத்தியாகப் பயன்படுத்திக் கொண்டு, “உன்னையெல்லாம் இதிலே குத்த வேண்டும்” என்று சொல்லி தாக்குதலுக்குப் போயிருக்கிறார்கள். பத்து வயது, பனிரெண்டு வயது சிறுவர்களெல்லாம், அவர்களுக்கு உண்மையாக உள்ளத்துக்குள் இருந்திருக்காது - பெரியவர்கள் செய்வதைப் பார்த்து அவர்கள் செய்திருக்க முடியும். ஆனால், அங்கு என்ன நிகழ்ந்திருக்கிறது என்று சொன்னால், தலைமையாசிரியர் அங்கே இவர்கள் தாக்கப் போகின்றபோது இப்போது வேண்டாம், நான் மணியடித்து விடுகிறேன்; அவர்கள் வெளியே வந்த பின்னால் தாக்குதல் நடத்துங்கள் என்று வழிவகை செய்திருக்கிறார் அந்த தலைமையாசிரியர்.

இப்படி பள்ளிக்கூடம் தாக்கப்பட்டிருக்கிறது. அவர் (தலைமையாசிரியர்) அந்த குழந்தைகளை காப்பாற்றி இருக்க வேண்டும்.அந்தப் பள்ளியிலே நூற்றுக்கணக்கான தலித் மாணவர்கள் இன்றைக்கு வரைக்கும் அச்ச உணர்வோடு படிக்க முடியாத, படிக்கப் போக முடியாத சூழல் இருந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு நாம் இங்கே கடலென கூடியிருக்கின்ற அனைத்து அமைப்புகளும் ஒன்றுபட்டு இருக்கிறோம். பெரிய மகிழ்ச்சி. நாம் ஒன்று சேருவதை யார் தீர்மானிக்கிறார்கள் என்றால் எதிரிகள் தான் தீர்மானிக்கிறார்கள். இன்றைக்கு திருமாவளவ னையும், அதியமானையும் ஒன்றிணைத்தது எதிரிகள் தான். எதிரிகள் தீர்மானிக்கிறார்கள் நாம் ஒன்றுபடுவதை. இந்த ஒற்றுமை தமிழ்நாடு முழுவதும் மலர வேண்டும். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடினார்; எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார். இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டேன் என்று. இப்போது நாம் பாடுவோம். எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார். இங்குள்ள தலித்துகள் ஒன்றாதல் கண்டே என்று நாம் புதிய கவிதை பாட வேண்டும். இந்த ஒற்றுமை மலர வேண்டும். சாளரப்பட்டில் தாக்க வந்த அந்த ஆதிக்க சாதிகள் யாரென்று பார்க்கவில்லை. அத்தனை பேரும் திரண்டு வந்தார்கள். நாம் நம் மக்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா? அதற்கு இந்த ஒற்றுமை வேண்டும். ஒன்றுபடுவோம்! ஒன்றுபடுவோம்!

பெரியார் இயக்கத்தின் நோக்கம் - இதுதான்!

இன்றைக்கு வடக்கும் மேற்கும் இணைந் திருக்கிறது. பிரிந்திருந்த நம்மையெல்லாம் ஆதிக்கசாதி எதிரிகள் ஒன்றுபடுத்தியிருக்கிறார் கள். அவர்களுக்கு ஆயிரங்கோடி நன்றிகள். இதற்காக 80 வயது பாட்டி வேலம்மாள் இரத்தம் சிந்தியிருக்கின்றார். 5 வயது விக்னேஷ் இரத்தம் சிந்தியிருக்கின்றார். அவர்கள் சிந்திய இரத்தம் நம்மை இன்றைக்கு ஒன்றுபடுத்தியிருக்கின்றது. அதிலும் இந்த மேடையிலே அதியமானையும், திருமாவளவனை யும் ஒன்றுபடுத்தியிருக்கிறது. (பலத்த கரவொலி) இந்த ஒற்றுமையில் பெரியார் கண்ட, பெரியார் இயக்கத்தின் நோக்கம் நிறைவேறு கின்றது.
- கு. இராமகிருட்டிணன் உரையிலிருந்து

தலித் எழுச்சிக்கு கழகத்தின் பங்களிப்பு

பிரன்ட் லைன்’ ஏடு படப்பிடிப்பு- தலித் எழுச்சிக்கு கழகத்தின் பங்களிப்பு

தலித் பிரச்சினையில் பெரியார் திராவிடர் கழகத்தின் பங்களிப்பை ‘பிரன்ட் லைன்’
(மார்ச் 28, 2008) ஆங்கிலப் பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது. ‘பிரன்ட்லைன்’ இதழில் தலித் பிரச்சினைகளை மிகவும் விரிவாகவும், ஆழமாக வும் எழுதி வரும் பத்திரிகையாளர் விசுவநாதன், சாளரப்பட்டியில் நடந்த சாதி வெறித்தாக்குதல் பற்றிய விரிவான கட்டுரையை எழுதியுள்ளார். அக்கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:
1990களில் தமிழ்நாட்டில் தலித் எழுச்சி உருவெடுத்தது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் ‘பறையர்’ சமூகப் பிரிவினரையும், தென் மாவட்டங்களில் ‘பள்ளர்’ சமூகப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக இந்த எழுச்சி அமைந்தது. ஆனால் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் (அருந்ததியினர் பெரும்பான்மையாக வாழக் கூடிய பகுதி), இந்த எழுச்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த சூழலில் - இப்போது மேற்கு மாவட்டத்தில் ‘தலித்’ மக்கள், ஒருங் கிணையத் தொடங்கியுள்ளார்கள். இது மேற்குப் பகுதி அரசியலில் புதிய சமுதாய எழுச்சி தொடங்கியுள்ளதன் அறிகுறியாகும். தலித் இயக்கங்கள், இடதுசாரி கட்சிகள், திராவிடர் இயக்கத்தின் பெரியாரிய முற்போக்காளர்கள் இந்த எழுச்சிக்கு ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள். சாளரப்பட்டி தலித் மக்களின் கோரிக்கைக்காக பெருமளவில் மக்களைத் திரட்டி, பெரியார் திராவிடர் கழகம், ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது. ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட முக்கிய தலித் அமைப்புகள், இடதுசாரி கட்சிகள், பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கியிருப்பது மேற்கு மாவட்ட தலித் எழுச்சிக்கு சான்றாக திகழ்கிறது என்று ‘பிரன்ட்லைன்’ கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கே.வி.கே. சாமி பிறந்த நாள் பொதுக் கூட்டம்

2008 மார்ச் 10 ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி சீரணி அரங்கில் மாலை 6 மணி அளவில் கே.வி.கே. சாமி பிறந்த நாள் விழா, பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு தூத்துக்குடி பெரியார் தி.க. மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்பு ரோசு தலைமையில் ஆழ்வை ஒன்றிய செயலாளர் நாத்திகன் இ. சேதுராமசாமி மற்றும் ஒட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் இரா. யேசுதாசன் முன்னிலையில் நகர துணைச் செயலாளர் செ. செல்லத்துரை நகரத் தலைவர் கோ.அ.குமார், ஆழ்வை ப. முருகேசன்,

மாவட்ட துணைத்தலைவர் வெ. பால்ராசு ஆகியோர் உரையாற்றினர்.

பின்பு பெரியார் தி.க. தலைமை கழக உறுப்பினர் தூத்துக்குடி பால். பிரபாகரன் தமிழர்களுக்கு எதிராக நின்று செயல்படும் பார்ப்பன கும்பல்களை அடையாளம் காட்டியும், பாசிச இந்துத்துவா சக்திகளே தமிழர்களுக் கெதிரான சக்திகள் என்றும் உரையாற்றினார்.

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து சிறப்புரை யாற்றுகையில், திராவிட நாடு கிடைக்குமானால் கவர்னர் ஜெனரலாக தூத்துக்குடி கே.வி.கே. சாமியைத்தான் நியமிப்போம் என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்ட கே.வி.கே. சாமியின் வரலாற்றினை நினைவு கூர்ந்தார். ஆழ்வார் திருநகரி ரூ. பெருங்குளம் போன்ற பகுதிகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கக் கோட்டை உடைவதற்கு திராவிட இயக்கங்கள் ஆற்றிய பணிகளையும் தற்போது செயலலிதா தொடங்கி டிராஃபிக் இராமசாமி வரை தமிழர்களுக்கு செய்யும் துரோகங்களையும் தமிழருக்கெதிரான கருத்துப் பரப்பல்களையும் விளக்கி சுமார் 2 மணி நேரம் உரையாற்றினார்.

தூத்துக்குடி பெரியார் தி.க. மாவட்ட செயலாளர் ச.கா. பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். நகர செயலாளர் பால். அறிவழகன், நெல்லை மாவட்ட செயலாளர் சி.ஆ.காசிராசன், நெல்லை இராசா, பிரபு, நகர துணைத்தலைவர் சா.த. பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் க. மதன், குமாரசிங் மற்றும் கழகத்தோழர்களும் திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

செய்தி : வ. அகரன்


அப்பா - மகன்
மகன் : நவீன தொழில் நுட்பத்துடன் இராமாயணத் தொடர் ‘சன்’ தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறதாமே!
அப்பா : ஆம், மகனே!
மகன் : நவீன தொழில் நுட்பத்துடன் ‘இராமாயணம்’ வருவதை எதிர்க்காத பா.ஜ.க.வினர், நவீன தொழில் நுட்பத் துடன் ‘இராமன் பாலம்’ வருவதை மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும், அப்பா?
அப்பா : எனக்குத் தெரியாது மகனே!



சிங்களம் நடத்தும் பெயர் சூட்டாத யுத்தம்- ஈழத்தில் - என்ன நடக்கிறது?

தமிழ் ஈழத்தில் ஒவ்வொரு நாளும் ஏராளமான விடுதலைப் புலிகளை சாகடித்துவிட்டதாக இலங்கை பிரச்சாரம் செய்வது உண்மையா? வன்னிப் பகுதியில் - இப்போது என்ன நடக்கிறது?

நாள்தோறும் சண்டைகள் நடக்கும் கடுமையான சமர்க்களமாக வன்னிப் போர்க் களம் உள்ளது. இன்றைய நிலையில் உல களாவிய ரீதியில் மரபு வழிச் சண்டைகள் தீவிரமாக நடைபெறும் சமர்க்களமாக வன்னிக் களமே உள்ளது.
கடந்த எட்டு மாத காலமாக பல்வேறு தாக்குதல் தந்துரோபாயங்களை பயன் படுத்தி நிலம் பிடிக்க சிங்களப் படைகள் முயற்சிக்கின்றன. எனினும், குறிப்பிட்டு கூறும் அளவிற்கு அதனால் ஒரு நில ஆக்கிரமிப்பு வெற்றியை பெற முடியவில்லை.
இதே வேளை எடிபல, றணகோச, ஜெய சிக்குறு, தீச்சுவாலை என்ற ஒவ்வொரு சமர்களுக்கும் பெயர் சூட்டிய சிங்களப் படைத் தலைமை; கடந்த 8-9 மாத காலமாக வன்னியில் நடக்கும் சண்டைகளுக்கு பெயர் சூட்டவில்லை. வெற்றி பற்றிய நம்பிக்கை யீனங்களால்தான் சண்டைகளுக்கு பெயர் சூட்டலைச் செய்ய இராணுவத் தலைமை முன்வரவில்லை.
எனினும்பெயர் சூட்டப்படாத பெரும் சண்டைகள் வன்னிச் சமர்களில் நடந்த படியே உள்ளன. வன்னிச் சமரின் இராணுவப் பரிமாணம் பரந்து விரிந்தது. வடபோர் முனை -மன்னார்க்களம் - வவுனி யாக்களம் - மணலாற்றுக் களம் என்று வன்னிப்போர் அரங்கம் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சமர் அரங்கிற்கும் பொறுப் பாக தகுதி வாய்ந்த தளபதிகளை நியமித் துள்ள பிரபாகரன் தமிழர் சேனையின் மரபுப் போர்ப் படைப் பிரிவுகளையும் அங்கு நிலைகொள்ள வைத்துள்ளார்.

கிட்டு பீரங்கிப்படையணி - குட்டிசிறி மோட்டார் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி போன்றவற்றுடன் இம்ரான் பாண்டியன் படையணி - சாள்° அன்ரனி படையணி - சோதியா படையணி - மாலதி படையணி - ஜெயந்தன் படையணி போன்ற தாக்குதல் படையணிகளையும் இந்த சமர் அரங்குகளில் நிறுத்தி வைத்துள்ளார். இவற்றுடன் பொன்னம்மான் கண்ணி வெடிப் பிரிவு மற்றும் சினைப்பர் அணிகள் - ஆர்.பி.ஜி. கொமாண்டோ அணிகள் போன்ற சிறப்பு அணிகளையும் சமரரங்கப் பகுதிகளுக்கு நகர்த்தியுள்ளார்.

சுருக்கமாகச் சொன்னால் சிங்களத் தின் படைக்கட்டுமானங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழர் சேனையில் படைக்கட்டுமானங்களை உருவாக்கிய பிரபாகரன் வன்னிப்போர் இலங்கை சிங்களப் படையின் புதை குழியாக மாற்றும் போர் வியூகங்களுடன் தமிழர் படையை நெறிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

முன்னர் யாழ்-வவுனியா சாலையை பற்றுக்கோடாகக் கொண்டு ஜெயசிக்குறு படை நடவடிக்கையை சிங்களப் படையினர் நடாத்தியபோது அன்றைய முன்னரங்கப் பகுதிகளில் இருந்து தந்திரோபாய பின்னகர்வுகளை புலிகள் செய்திருந்தனர். பின்னர் வன்னிக்குள் நுழைந்த சிங்களப் படை மீது பொருத்தமான இடங்களில் வைத்துத் தாக்கி எதிரிக்கு பாரிய உயிரி ழப்புக்களை புலிகள் கொடுத்திருந்தனர். மாங்குளம் - ஒட்டிகட்டான் வரை வந்த சிங்களப் படை அகலக் கால்பரப்பி நிலை கொண்டபோது பிரபாகரன் ஓயாத அலைகள் 3 வலிந்த தாக்குதல் நடவடிக்கையை ஒட்டு கட்டாவில் தொடக்கி- ஜெயசிக்குறுவுக்கு சமாதி கட்டியிருந்தார்.
இப்போதைய போரில் புலிகளின் சண்டை வியூகம் வேறுபட்டது. முன்னரங்கப் பகுதிகளிலேயே சிங்களப் படையுடன் கடுமையாகச் சண்டையிடுகின்றனர். கடந்த 8-9 மாத காலமாக வன்னியின் முன்னரங்கப் பகுதிகளே சமர் அரங்காக நிலைத்திருக்கின்றன. இந்த முன்னரங்கத் தாண்டி உள்ளே வர முடியாது சிங்களப்படை திணறுகின்றது.
இந்த முன்னரங்க சண்டைகளில் சிங்களப்படை அதிக உயிரிழப்புக்களை சந்தித்து வருகின்றது. படையினர் பெரு மளவில் படுகாயம் அடைந்து வருகின்றனர். படையை விட்டோடும் தொகையும் அதிகரித் துள்ளது.
உள் நுழையும் முன்பே சிங்களப் படை இத்தகைய சிதைவு நிலையை அடைந் துள்ளது என்றால் உள் நகர்ந்து அகலக் கால்பரப்பும் நிலை எழுந்தால் சிங்களப்படை சந்திக்கவுள்ள அபாயம் கடுமையாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
“வன்னி பெருநிலப் பரப்பை ஆக்கிர மித்து - புலிகளை அழிப்பது” என்பதே வன்னிப்போரில் சிங்களப் படையின் இராணுவ நோக்கமாகும்.

இந்த நோக்கத்தை அடைய அது விரிவான நகர்வுத் திட்டத்தை நாடியுள்ளது. வன்னியின் கிழக்கு முனையான கொக்குத் தொடுவாயிலிருந்து; மேற்கு முனையான திருக்கேதீச்சரம் வரையுள்ள முன்னரங்க நிலப்பகுதி எங்கும் கம்பளம் விரிப்பது போலப் படையை நகர்த்தி வன்னியை ஆக்கிரமிப்பது என்ற இராணுவத் திட்டத் துடன் உள்ளது.

மாறி மாறி எல்லா முனைகளிலும் தொடர்ச்சியான சண்டைகளை நடத்துவது மற்றும் ஆழ ஊடுருவும் படையணிகளைப் பயன்படுத்தி புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் தாக்குதல்களை நடத்துவது என்ற சண்டைத் தந்திரங்களை சிங்களப்படைகள் கடைப் பிடிக்கின்றன.

வன்னிப்போரில் படையினரின் போர்த் திட்டமும், தந்திரங்களும் இது வரை சிங்களத்துக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை. மாறாக நீண்டதொரு போரில் சிங்களப் படைகள், வன்னியில் சிக்குண்டுள்ளன.
நீண்டு நிலைக்கும் தொடர்ச்சியான போரில் ஆக்கிரமிப்புப் படைகள் களைத்துப் போய் உளவுரன் உடைந்து தோல்வியைச் சந்திப்பது தான் போர் வரலாறாக உள்ளது.

ஆனால், ஒரு விடுதலைச் சேனையின் இராணுவ நிலை வேறு விதமாக இருக்கும். தனது மண்ணில், தனது மக்களின் ஊர்களில், கால நீட்சியுடன் போர் நடக்கும்போது, முழு வளத்தையும் திரட்டி மக்களை போர் மயப்படுத்தி, வெற்றிகரமாகப் போரை முன்னெடுக்கும் வாய்ப்புகள் விடுதலைச் சேனைக்கு இருக்கின்றன.

இந்த இராணுவ யதார்த்தத்தின் அடிப்படையில்தான் வீட்டிற்கு ஒருவன் நாட்டிற்காக என்ற கோசத்துடன் புலிகள் இயக்கம் ஆட்திரட்டலைச் செய்து - பல வளர்ச்சியைப் பெருக்கியுள்ளது.அதே சமயம், சமர் அரங்குகளில் சிங்களத்தின் டிவிசன் படைக் கட்டுமானங்களுக்கு நிகராக கட்டளைப் பீடங்களை நிறுவி, படைக் கட்டுமானங்களையும் உருவாக்கி, புலி களின் மரபுப் போர் ஆற்றலை பிரபாகரன் பெருக்கியுள்ளார்.

இப்போது வன்னிக்களம் என்பது ஸ்டாலின்கிராட் சண்டைக் களத்துக்கு நிகராக, போரியல் புத்தகங்களில் பதியப் படும் இராணுவ முக்கியத்துவத்துடன் காணப்படுகின்றது.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜெர்மனியப் படையைச் சிதைத்து, ஜெர்மனிக்குப் படுதோல்வியைப் பரிசளித்த °டாலின் கிராட் சண்டையை நினைவூட்டும் களமாக வன்னிப்போரரங்கம் காட்சி மாற்றம் கண்டு வருகின்றது. கிட்லரின் ஜெர்மனியப் படைகள் சந்தித்த படு தோல்விய மகிந்தரின் சிங்களப் படைகள் சந்திப்பது திண்ணம்.

கலைஞர் எதிர்ப்பை ‘திராவிடர் இயக்க’ எதிர்ப்பாகவே மாற்றிக் கொள்ள ‘சன்’ டி.வி. முன் வந்துள்ளது மிகப் பெரும் இனத் துரோகம்!



‘பாரத கலாச்சாரத்தைப் பறைசாற்றும் இதிகாசம்’ என்ற பூரிப்பான அறிவிப்புடன், ‘சன்’ தொலைக்காட்சி ஞாயிறுதோறும் இராமா யணத்தை மெகா தொடராக ஒளிபரப்பத் தொடங்கி யிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களுடன், ‘இராமாயணம்’ ஒளிபரப்பப்படுவதாக அறிவிப்பு வேறு. ஏற்கனவே ‘இராம பக்தி’யில் மூழ்கிக் கிடக்கும் வடநாட்டு மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு, ‘சங்பரிவாரங்களின்’ இராமன் அரசியலுக்கு அவர்களை தயார்படுத்த, ‘என்.டி.டி.வி.’ இந்தி மொழியில் இராமாயணத் தொடரைத் தொடங்கி விட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டு மண்ணையும், பார்ப்பனியமாக்க இதோ, என்னால் இயன்ற ‘அனுமான்’ உதவி என்று ‘விபிஷணராக’ அவதாரமெடுத்துள்ளது ‘சன்’ டி.வி.!

மெகா தொடர்களை அறிமுகப்படுத்தி பெண்களை அதில் மூழ்க வைத்து தமிழ்நாட்டில் குடும்ப - சமூக உறவுகளில் கடும் நெருக்கடிகளை உருவாக்கியதில் ‘சன்’ தொலைக்காட்சிக்கு பெரும் பங்கு உண்டு! அடுத்த கட்டமாக, இவர்கள், ‘இராமராஜ்யத்துக்கு’ தாவியுள்ளார்கள் இதற்கான காரணத்தை, ஆழமாக பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. கலைஞர் தொலைக்காட்சி மீதும் - கலைஞர் மீதும் - சன் தொலைக்காட்சிக் குள்ள குடும்ப பகை காரணமாக தனது கலைஞர் எதிர்ப்பை ‘திராவிடர் இயக்க’ எதிர்ப்பாகவே மாற்றிக் கொள்ள ‘சன்’ டி.வி. முன் வந்துள்ளது மிகப் பெரும் இனத் துரோகம்!

திராவிட இயக்க அரசியலை மூலதனமாக்கி, தொலைக்காட்சி நிறுவனத்தையும், தொழில் நிறுவனத்தையும் வளர்த்துக் கொண்டவர்கள் தான் இந்த ‘சன்’ டி.வி. குழுமத்தார்! தமிழினத்தை அவமதிக்கும் இராமாயணத்தை எரிக்கச் சொன் னார் அண்ணா! ‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்ற பெயரில் இராமனை ‘தேசியத்’ தலைவனாக்க முயன்ற பார்ப்பன இராஜகோபாலாச்சாரிக்கு பதிலடி தந்து, ‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்ற பெயரில் ராமனின் பார்ப்பன சுயரூபத்தை, கிழித்துக் காட்டினார் கலைஞர். ‘சன் டி.வி.’ குழுமத்தின் நாயகராகப் போற்றப்படும் முரசொலி மாறன் - 1995 ஆம் ஆண்டு ஜூனியர் விகடன் வார ஏட்டுக்கு அளித்த பேட்டியில் ‘நாங்கள் இராவணனின் பரம்பரை’ என்று பெருமிதத்தோடு அறிவித்தார். ஆனால் அவரின் வாரிசுகளோ, அந்த உணர்வுகளுக்கு சமாதி கட்ட துடிக்கிறார்கள்!

இந்திய அரசின் ‘தூர்தர்ஷன்’ ஆண்டுக்கணக் கில் ஒளிபரப்பிய ‘இராமாயணத் தொடரால் உந்தப்பட்ட மக்களின் மத உணர்வை - மத வெறி யாக்கி - ‘இராமன் கோயிலுக்கான’ அஸ்திவார மாக்கி, அதை ஆட்சி பீடமேறுவதற்கான படிக்கட்டு களாக மாற்றிக் கொண்டது பா.ஜ.க. கூட்டம்! மீண்டும் இப்போது அதிகாரத்தைப் பிடிக்க, இவர்களுக்கு ‘ராமன்’ தேவைப்படுகிறான். அதற்கான சதிவலை நாடு முழுதும் பின்னப்படு கிறது. சேது சமுத்திரத் திட்டத்தைப் பிடித்துக் கொண்டு, அதற்குள்ளே ‘ராமனை’த் தேடி, அந்த கற்பனை ராமனை தமிழகத்திலிருந்து இந்தியா முழுதும் தேர்தல் விற்பனைக்குக் கொண்டு போக முயற்சிக் கிறார்கள். அந்த விற்பனைக்கு மக்கள் சந்தையைத் தயார்படுத்தும் சதி வலைக்குள் ‘சன்’ தொலைக் காட்சி விருப்பத்தோடு இடம் பிடித்திருக்கிறது.

அயோத்தியில் - பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், நாடு முழுதும் மதக் கலவரங்கள் வெடித்தபோது, தமிழகம் மட்டும் ‘பெரியார் மண்ணாக’ தனது அமைதியை வெளிப்படுத்தி கம்பீரமாக எழுந்து நின்றது. பார்ப்பனர்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் - ராமாயணத்தை எடுத்துப் படியுங்கள் என்று தமது சமூகத்தினருக்கு அறிவுரை கூறினார். பார்ப்பனர் ராஜகோபாலாச் சாரி! அந்த எச்சரிக்கையை ‘வேதவாக்காகக்’ கருதி வரும் கூட்டம், இப்போது இராமாயணத்தைப் புரட்டத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் எப்போதுமே பார்ப்பனர் பார்ப்பனியத்தின் பக்கமே நிற்கத் துடிக்கும் சன் தொலைக்காட்சிக் குழுமம் - இப்போது பச்சை யாகவே வெளிவந்து விட்டது; வரலாறு இவர்களை மன்னிக்காது.

ஆனாலும் திட்டவட்டமாக கூறுகிறோம் - இது இராமாயன காலமல்ல; துரோகத்தை தமிழர்கள் சரியாகவே புரிந்து கொள்வார்கள்.


தீட்சதர்கள் மீது ஆறுமுக நாவலரின் கிரிமினல் வழக்கு

இந்து மக்கள் கட்சி என்ற அமைப்பின் தலைவர் அர்ஜுன் சம்பத் பெயரில் (இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்) ‘தினமணி’ நாளேட்டில் ஒரு கட்டுரை வெளி வந்திருக்கிறது. கட்டுரையின் தலைப்பு ‘ஆன்மீகத்துக்கு விடப்பட்ட சவால்!’: சென்ற இதழ் தொடர்ச்சி-

• “பாரம்பர்யமாக தேவாரம் பாடுவதற்கு அங்கே இடமிருக்கிறது என்பது மட்டு மல்ல, தேவாரம் தினமும் பாடவும்படு கிறது” என்கிறது கட்டுரை.
தேவாரம் எப்படிப் பாடப்பட்டது? ஆறுகால பூசைகளின் நிறைவில் தேவாரம், திருவாசகத்தில் சில வரிகளைப் பாடி, பூசையை முடிப்பார்கள். ஆறுகாலப் பூசைகளுக்கு இடைபட்ட நேரத்தில் - தேவாரம் பாட முடியாது. எனவே சிற்றம்பல மேடை மீதேறியும் பாட முடியாது. ஆறுகாலப் பூசையை நடத்தும் - தீட்சதப் பார்ப்பனர்களுக்குத் தான் பூசையை தேவாரம் பாடி முடிக்க உரிமை உண்டு. இதுதான் - தில்லை கோயிலில் தேவாரத்துக்கு கிடைத்து வந்த மரியாதை. ‘சைவத்தின் தலைநகரம்’ என்று கட்டுரையாளர் சொல்கிறாரே, அந்த தில்லையில் தேவாரத்துக்கு தரப்பட்ட மரியாதை இதுதான்! ஆறுகால பூசைகள் நடக்காத இடைப்பட்ட நேரத்தில், ஏன் தேவாரம் பாடத் தடை? அப்போது- தீட்சதப் பார்ப்பனர் அல்லாத ‘சூத்திரர்கள்’ பாடி விடுவார்களே; அதனால் தான் தடை!

தேவாரம் பாடத் தடை கோரி சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றத்தில் தீட்சதர்கள் தாக்கல் செய்த மனுவில், “தேவாரத்தை எந்த இடத்தில் பாடுவது என்பதை முடிவு செய்யும் உரிமை எங்களுக்குத் தான் உண்டு; சிற்றம்பல மேடையில் வள்ளலார், அப்பர் கூட ஏறியது கிடையாது” என்று திமிரோடு குறிப்பிட்டுள்ளனர்.

சிற்றம்பலம் மேடையில் நின்று தேவாரம் பாட வந்தவர்தான் ஓதுவார் ஆறுமுகசாமி. 8.5.2000 அன்று சிவடினயார் ஆறுமுகசாமி மேடை ஏறி பாட முயன்றபோது, தீட்சதர்கள் அந்த முதியவரை கொடூரமாகத் தாக்கி, கையை முறித்து, ரத்தக் காயங்களுடன் கோயிலுக்கு வெளியே தூக்கி வீசினார்கள். 55 நாட்கள் கழித்து தான் காவல்துறை முதல் தகவல் அறிக்கையையே பதிவு செய்தது. தமிழக அரசு முறையாக வழக்கை நடத்தாததால் தீட்சதர் கும்பல் விடுதலைப் பெற்றது.

1992 இல் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டில் கோயில் கருவறையில், தமிழில் வழிபாடு நடத்தலாம் என்று தீர்ப்பளித்தது. (17.6.1992 இல் நீதிபதி ஆர். லட்சுமணன் அளித்த தீர்ப்பு) ஆனால், கோயில் கருவறைக்கு வெளியே சிற்றம்பல மேடையில்கூட தேவாரம் பாடுவதைத் தடுக்கிறார்கள் தீட்சதர்கள்.

2006 ஆம் ஆண்டு ஆக°டில் - தி.மு.க. ஆட்சி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றிய நிலையில், சட்ட ரீதியான உரிமையோடு ஜூலை 15 முதல் 20 வரை திருச்சிற்றம் பலத்தில் தேவாரம் பாடப் போவதாக சிவனடியார் ஆறுமுகசாமி அறிவித்தார். உடனே தீட்சதர் கூட்டம் சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றத்துக்கு ஓடி தடையாணை வாங்கிவிட்டது. கட்டுரையாளர் கூறுவதுபோல் - தேவாரம் பாடுவதை தீட்சதர்கள் எதிர்க்கவில்லை என்றால், தீட்சதர்கள் ‘சுத்தத் தமிழர்கள்’ என்பது உண்மை என்றால், ஏன், நீதிமன்றம் ஓடித் தடையாணை வாங்கினார்கள்? தேவாரம் பாடப் போனது கடவுள் மறுப்பாளர்களா? இல்லையே! சிவனடியார் தானே!

• ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின் பற்றக்கூடிய மரபுகளை, சமய நம்பிக்கை களை, வழிபாட்டு முறைகளை மீறலாமா என்ற கேள்வியை எழுப்புகிறது, கட்டுரை!

தீண்டப்படாதவர்களையும், பெண்களையும், கோயிலுக்குள்ளே விடக் கூடாது என்பதுதானே கடந்த கால மரபு? கோயிலுக்கு ‘பொட்டுக்கட்டி’ பெண்களை தேவதாசிகளாக்கி விடுவதுதானே மரபு! இவையெல்லாம் அப்படியே தொடரலாமா? சரி; பழையகால மரபை மீறக் கூடாது என்றால், கோயிலுக்குள் மின்விளக்கு போடலாமா? தீட்சதர் ஸ்கூட்டரில் போகலாமா? சிறைக்குப் போய்விட்டு திரும்பிவந்து தீட்சதர் பதவியில் தொடரலாமா?

இவையெல்லாம் கூட ஒரு பக்கம் இருக்கட்டும்; கட்டுரையாளர் கசிந்துருகும் ‘ஆன்மீக’ப் பார்வையி லிருந்தே சில கேள்விகளை கேட்கிறோம்:

தீட்சதப் பார்ப்பனர்கள் தில்லை கோயிலில் நடத்தும் வழிபாட்டு முறையே சிவவழிபாட்டுக்கு நேர் எதிரானது என்று பழுத்த சிவ மதத்தவர்களே - எதிர்ப்பு தெரிவித்திருப்பது, கட்டுரையாளருக்கு தெரியுமா?

சைவ சித்தாந்தத்தைப் பரப்புவதற்காகவே வாழ்நாள் முழுதும் அர்ப்பணித்தவர், யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர். சைவத்தைப் பரப்பும் பாடசாலைகளை நிறுவியவர். 60-க்கும் மேற்பட்ட பழம் சைவ நூல்களை தேடிப் பிடித்து பதிப்பித்தவர். அவரது ஆளுமைக்காக திருவாடுதுறை ஆதீனத்தால் ‘நாவலர்’ பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டவர். யாழ்ப்பாணத்திலிருந்து அடிக்டி தமிழகம் வந்து போனவர். அப்போதெல்லாம் பெரும்பாலும் அவர் தங்குமிடம், அவர் போற்றி வணங்கும் சிதம்பரம் தான். தில்லை நடராசன் மீது அபார பக்தி கொண்டவர். சிதம்பரத்திலேயே ‘சைவப் பிரகாச வித்யாசாலை’யை நிறுவியவர். அத்தகைய பழுத்த சிவப்பழம் ஆறுமுக நாவலரே - சிதம்பரம் தீட்சதப் பார்ப்பனர்களை அங்கீகரிக்கவில்லை. சிவாகமத்தில் கூறியபடி சிவதீட்சை பெற்றவர்கள் மட்டுமே சிவாலயங்களில் அர்ச்சகராக இருக்கவேண்டும். ஆனால், தீட்சதப் பார்ப்பனர்கள் ஆகமங்களைவிட வேதங்களை உயர்வாகக் கருதக் கூடியவர்கள். சைவ கோயில்களில் ‘சிவ தீட்சை’ பெறாத வைதீக பார்ப்பனர்கள் கையினால் விபூதி வாங்கக் கூடாது. ஆகமக் கோயில்களில் சிவ தீட்சை பெறாதவர்களுக்கு இடமில்லை என்பது நாவலரின் உறுதியான கருத்து. அவர் வெளிப்படையாக தெரிவித்த கருத்துகளால் தீட்சதப் பார்ப்பனர்கள் நாவலர் மீது கடும் கோபமடைந்தனர்.

1868 இல் ஆறுமுக நாவலர் சிதம்பரம் வந்தபோது, தீட்சதப் பார்ப்பனர்கள் தில்லைக் கோயிலில் உள்ள பேரம்பலத்தில், நாவலருக்கு எதிராக ஒரு கூட்டத்தைக் கூட்டினர். 1869 ஆம் ஆண்டு இந்த கூட்டம் நடந்தது. அப்போது, கூட்டத்துக்கு தலைமை வகித்த தில்லை தலைமை தீட்சதப் பார்ப்பனர் சபா நடேசர் என்பவர் தனது இருக்கையிலிருந்து எழுந்து, ‘இப்போதே ஆறுமுக நாவலர் இருக்குமிடத்துக்குப் போய், அவரை இழுத்துக் கொண்டு வந்து, நையப்புடைப்பதற்கு விரும்புகிறேன். நீங்கள் எனக்கு உதவியாக வரவேண்டும்’ என்று அழைப்பு விடுக்கிறார். யாரும் முன்வரவில்லை. இதை கேள்விப்பட்ட ஆறுமுக நாவலா கடலூர் பஞ்சகுப்பம் நீதிமன்றத்தில் தீட்சதப் பார்ப்பனர் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். 1869 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. தலைமை நம்பூதிரி பார்ப்பனர் மீதான குற்றத்தை உறுதி செய்து ரூ.50 அபராதம்; கட்டத் தவறினால் ஒருமாத சிறை என்று நீதிபதி ‘றொபேர்ட்°’ அறிவித்தார். (ஆதாரம்: ஸ்பிரீமேன் பத்திரிகை 3-2-1870)

தில்லை தீட்சதப் பார்ப்பனர்கள் கட்டிக் காத்து வரும் - வழுவாத பாரம்பர்ய பழக்க வழக்கங்களுக்கு இது ஒரு உதாரணம்.
1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி, நீதிபதி மகாராசன் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. தமிழகக் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக - சிவாச்சாரியார்கள், பட்டர்கள் மற்றும் ஆன்மீக வழி வந்தவர்களைக் கொண்ட குழு அது. அந்தக் குழு, சிதம்பரம் நடராசன் கோயில் பற்றி தனது அறிக்கையில் இவ்வாறு கூறியிருக்கிறது:

“சிதம்பரம் நடராசர் பூஜை மகுடாகம பூசை. மகுடாகமமே தமிழுக்குச் சிறப்புப் பிரிவுகளாகிய இசை நாடகம் இரண்டையும் சிறப்பிக்க வந்த ஆகமம்...

14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டைப் புலவர்கள் தாங்கள் பாடிய தில்லைக் கல கம்பத்தில், நடராசப் பெருமான் மகுடாகமப் பூசை கொள்கிறார் என்று பாடியிருக்கின்றனர். ஆனால் தில்லையில் மகுடாகமப் பூஜை நடைபெறவில்லை.

பதஞ்சலிபத்ததிப்படி பூசை நடக்கிறது. இது வைதீக பூசை என்று தீட்சதர்கள் சொல்கிறார்கள். இவர்கள் கூற்று சரியானதாக ஏற்றுக் கொள்வதற்கில்லை. சிதம்பரம் கோயிலில் ஆகமப் பிரதிட்டையேயன்றி, வைதீய பிரதிட்டையல்ல. சிவாச்சாரியர்கள் (தீட்சதர்கள்) வேத மந்திரங்களை சேர்த்துக் கொள்வது அதிகப்படியானது. இங்கு வேதமந்திரம் இன்றியமையாத அங்கம் அல்ல. சிவாச்சாரிகள் வேறிடத்தில் கூறிய வேத ஆகம ஒருமைப்பாட்டு உணர்ச்சியின் விளைவாகத் தான் வேத மந்திரங்களைச் சேர்த்துக் கொண்டிருக் கிறார்கள். ஆதலால் தமிழ்நாட்டுக்கே உரிய வேறு எந்த நாடும் கண்டிராத, நடராசன் மூர்த்தியின் பூசை, வைதீக பூசை என்று கூறுவது பெரும் பிழை மட்டுமல்ல, தமிழ் மக்களுடைய புராதனமான கடவுள் கொள்கைக்கும், பண்பாட்டுக்கும் செய்த பெரும் தீமையும் ஆகும். ஆகம விதிப்படி இதுவும் புனிதம் கெடுவதாகும்.”

- இது மகாராசன் குழு பரிந்துரை. தீட்சதப் பார்ப்பனர்களின் வழியாக குறித்த கருத்து. வேதத்தின் மீதுள்ள பார்ப்பனப் பற்று காரணமாகவே, வழிபாட்டு முறையில் ஆகமத்தைப் புறக்கணித்து கோயில் புனிதத்தைக் கெடுத்து வருகிறார்கள் என்கிறது, மகாராசன் குழு பரிந்துரை. இவர்களைத் தான் பாரம் பர்யத்தைக் கட்டிக் காப்பாற்றி வருவோம் என பெருமை பேசுகிறது தினமணி’ கட்டுரை.
(தொடரும்)

கோவையில் போராட்டம் எதிரொலி சிங்கள தளபதிகள் ஓட்டம்!


இலங்கையின் படைத்தளபதிகள் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சிப் பள்ளிக்கு பயிற்சி பெற வந்த செய்தியறிந்து, கழகத் தோழர்களும், ஆதரவு அமைப்புகளும் தொடர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, இராணுவ அதிகாரிகள் குன்னூரி லிருந்து வெளியேறினர். அவர்களை ஆந்திர மாநிலம் அய்தராபாத் இராணுவப் பயிற்சி மய்யத்துக்கு அனுப்பி யுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. செய்தி விவரம்:

தமிழ்நாட்டின் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி மையத்துக்கு சிறிலங்காவின் முப்படைகளைச் சேர்ந்த 6 தளபதிகளை இந்திய அரசு அழைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
சிறிலங்காப் படையின் இணைத் தளபதி ரத்திநாயக்க, மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எல். பெர்னாண்டோ, கடற்படை யின் ரியர் அட்மிரல் தெனோனி, வான்படையின் பி.பி. பிரேமசந்திர உள்ளிட்ட 6 பேர் வெலிங்கடன் இராணுவப் பயிற்சி மையத்துக்கு இந்திய அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அரசாங்கத்தின் இந்தச் செயலைக் கண்டித்து கோவை லயன்ஸ் கிளப் அருகே 11.3.2008 அன்று மாலை பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்களை ஒன்று திரட்டி எழுச்சி மிக்க கண்டன ஆர்ப்பாட்டத்தை கழகம் நடத்தியது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைத்திருந்தது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், ஆறுச்சாமி, திருப்பூர் துரைசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கலையரசன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் முகிலன், தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சியின் தனசேகரன், ஆதித் தமிழர் பேரவையின் நந்தன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் முத்தமிழ் செல்வன், லோக் ஜனசக்தியின் குப்புராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்டு இந்திய அரசாங்கத்தின் விரோதப் போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிங்கள அரசின் தமிழினப் படு கொலைக்கு துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்தும் இனப்படுகொலை நடத்தும் சிங்கள அரசுக்கு ஆயுத உதவியை இந்தியா வழங்குவதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழின உணர் வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து 16.3.2008 அன்று வெலிங்டன் இராணுவப் பயிற்சியகம் முன்னிலையே ஆர்ப்பாட்டத்தை கோவை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் அறி வித்தது. தொடர் ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி யாக சிங்கள ராணுவ தளபதிகள் பயிற்சி பாதியில் நிறுத்தப்பட்டது. 14 ஆம் தேதியே சிங்கள படைத் தளபதிகள் குன்னூரிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டனர். 16 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த கழகத் தோழர்களும், ஆதரவாளர்களும் வெலிங்டன் இராணுவ பயிற்சி மய்யம் முன் திரண்டபோது சிங்கள இராணுவ தளபதிகள் ஏற்கனவே வெளியேறிய செய்தி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.

(கோவை ‘தினத்தந்தி’ நாளேடும் கழகப் போராட்டத்தினால் சிங்கள தளபதிகள் வெளியேறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.)