சமூகநீதிக்கு குழிபறித்த ‘சொக்கத் தங்கம்’ சோனியாவின் ஆட்சி!

ஜனதா ஆட்சி காலத்தில் மொரார்ஜி பிரதமராக இருந்தபோது, பிற்படுத்தப்பட் டோருக்காக நியமிக்கப்பட்ட மண்டல் குழு பரிந்துரையை நாடாளு மன்றத்திலே வைக்க மறுத்த கட்சி - காங்கிரஸ்.

• கடும் போராட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் அறிக்கையை மட்டும் சமர்ப்பித்துவிட்டு, 10 ஆண்டுகாலம் அமுல்படுத்தாமல் அலமாரியில் தூசி படிய விட்ட கட்சி - காங்கிரஸ்.

• 1990 இல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, அதில் ஒரு பகுதியை (பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ஆணை) அமுலாக்கியபோது அதற்காக பாரதிய ஜனதாவோடு சேர்ந்து கொண்டு வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த கட்சி - காங்கிரஸ்.

• மண்டல் பரிந்துரையை எதிர்த்து, அன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி 10 மணி நேரம் தண்ணீர் குடித்துக் கொண்டே பேசினார்; பார்ப்பன சக்திகள் மகிழ்ச்சிக் கூத்தாடின.

• வி.பி.சிங் ஆட்சியை வீழ்த்திவிட்டு, ஆட்சிக்கு வந்த நரசிம்மராவ் காங்கிரஸ் பார்ப்பன - முன்னேறிய சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கி, பார்ப்பன சக்திகளையே திருப்தி செய்ய துடித்தது. (உச்சநீதிமன்றம் தான் அந்த உத்தரவை செல்லாது என்று அறிவித்தது)

• சோனியாவின் தலைமையில் உருவான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி குறைந்தபட்ச வேலைத் திட்டத்தில் தனியார் துறையில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவதாக கூறியது; செய்தார்களா? பெரும் தொழில் நிறுவனங்கள் - பன்னாட்டு நிறுவனங்கள் - பார்ப்பன பனியா சக்திகளின் மிரட்டலுக்கு பணிந்து தனியார் துறை இடஒதுக்கீட்டு முயற்சிகளை கிடப்பில் போட்ட கட்சி - காங்கிரஸ்!

• அரசு - பொதுத் துறை நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் - பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்வோம் - என்று குறைந்தபட்ச வேலைத் திட்டத்தில் உறுதி கூறினார்கள். நடைமுறைப்படுத்தினார்களா? இல்லை. கண்துடைப்புக்காக 2005 இல் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார்கள். அது சட்டச் சிக்கலில் மாட்டியது. அவ்வளவுதான், விட்டால் போதும் ஆளை விடு என்று ஒதுங்கிக் கொண்டது. சட்டச் சிக்கலிலிருந்து மீட்டு சமூகநீதி வழங்கிட எந்த முயற்சியும் எடுக்காத கட்சி - காங்கிரஸ்.

• தலித் மற்றும் பழங்குடியினரின் பாரம்பரிய உடைமைகளைப் பாதுகாக்கப் போவதாக குறைந்தபட்ச திட்டம் கூறியது; நடந்தது என்ன? 2006 இல் பரம்பரை வன வாழ் மக்கள் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. சட்டம் வந்ததே தவிர, அதை நிறைவேற்றாமல், கிடப்பில் போட்ட கட்சி - காங்கிரஸ்!• மெட்ரிக் படிப்பு முடித்த தலித் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டைக்கூட - கடந்த வரவு செலவு திட்டத்தில் கணிசமாகக் குறைந்தார் ப. சிதம்பரம்! நிதியைக் குறைத்துவிட்டு, கூடுதலாக 3 லட்சம் தலித் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப் போவதாகவும் அறிவித்த கட்சி - காங்கிரஸ்!

• ராஜீவ் காந்தி பெயரில் கொண்டு வரப்பட்ட கல்வி உதவித் தொகையையும் 87 கோடியிலிருந்து 79 கோடியாகக் குறைத்த கட்சி - காங்கிரஸ்!

• சாக்கடை எடுத்தல்; மலம் அள்ளுதல் போன்ற சுகாதாரத்துக்கு கேடு விளை விக்கும் இழிவு வேலைகளை செய்வோர் குடும்பத்தின் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி உதவித் தொகையைக் கூட முழுமையாக செலவிடாத கட்சி - காங்கிரஸ்! (ஒதுக்கப்பட்ட நிதியில் செலவிடப்பட்டதே 4.38 சதவீதம் தான்! மத்திய தணிக்கைத் துறையே தனது அறிக்கையில் இந்த அவலத்தை சுட்டிக் காட்டியது.)

• பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உயர் கல்வி நிறுவனங்களில் அமுல்படுத்துவதை பார்ப்பன சக்திகள் எதிர்த்தபோது, மிரட்டலுக்கு பணிந்தது. 27 சதவீதத்தை கூறுபோட்டு படிப்படியாக அமுல்படுத்தவும், அந்த எண்ணிகைக்கேற்ப திறந்த போட்டிக்கான இடங்களை உயர்த்தி, பார்ப்பன சக்திகளை மகிழ்விக்கவும் முன் வந்த கட்சி - காங்கிரஸ்!

• இதற்காக வீரப்ப மொய்லி தலைமையில் குழு ஒன்றையும் அமைத்தார்கள். இந்தக் குழு திட்டத்தை தந்து - அதை படிப்படியாக நிறைவேற்ற தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரைத்தது. பரிந்துரைத்தும், நிதி ஒதுக்கீடு செய்யாத கட்சி - காங்கிரஸ்!

• தலித் மக்கள் மீது இந்தியா முழுதும் நிகழும் சாதி வெறியாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கும் 18 நிமிடங்களுக்கு ஒரு முறை தலித் தாக்கப்படுகிறார். மூன்று நாளுக்கு ஒரு முறை தலித் பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார். 3 நாளுக்கு ஒரு முறை 11 தலித்துகள் தாக்கப்படு கிறார்கள். வாரந்தோறும் 13 தலித்துகள் கொல்லப்படுகிறார்கள்; 5 தலித் வீடுகள் எரிக்கப்படுகின்றன.

• பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி வாரி வழங்கிக் கொண்டு தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியையும் ஒதுக்க மறுக்கும் கட்சி - காங்கிரஸ்!

• நடப்பு அய்ந்தாண்டு திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 2,12,431 கோடி. இதில் தலித் மக்களுக்கு சட்டப்படியாக ஒதுக்கப்பட வேண்டியது ரூ. 34,413.82 கோடி. ஆனால், ஒதுக்கியிருப்பதோ ரூ. 15,280.18 கோடி மட்டுமே! சுமார் ரூ. 20000 கோடி தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட வேண்டியதை பறித்துவிட்ட கட்சி - காங்கிரஸ்!

• எல்லாவற்றுக்கும் மேலாக உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களில் அட்டவணை சாதியினருக்கு இருந்த இட ஒதுக்கீட்டை பறித்து விட்ட கட்சி - காங்கிரஸ்! அய்.அய்.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் - பார்ப்பனர்களின் கோட்டையாகவே இருக்கின்றன. இதில் - குறைந்த எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்டோர் ஆசிரியர்களாக இருப்பதைக்கூட சகிக்க முடியாத இந்நிறுவனங்களின் பார்ப்பன இயக்குனர்களின் கோரிக்கையை ஏற்று, மன்மோகன்சிங் 47 உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களில் தாழ்த்தப்பட்டோருக்குள்ள இடஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டார். இதற்கான மசோதா கடந்த கடைசி நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் எவ்வித விவாதங்களும் இல்லாமலே அவசர அவசரமாக நிறை வேற்றப்பட்டு விட்டது. (நாடாளுமன்றத்தின் முன் மீண்டும் வைக்கப்பட வில்லை; ஒரு வேளை விபத்தின் காரணமாக மன்மோகன்சிங் - பிரதமரானால், நாடாளு மன்றத்திலும் நிறைவேற்றிவிடுவார்கள்)

• உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் நியமனங்களில் ஏற்கனவே இருந்த தலித் இடஒதுக்கீட்டையும் பறித்த கட்சி - காங்கிரஸ்!

மத்திய அரசின் இந்த “சாதனைகளைத்தான்” மக்களிடம் பட்டியலிட்டுப் பிரச்சாரம் செய்யப் போகிறதா, தி.மு.க.?

ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு துணைப் போகும் - சோனியாவின் மத்திய காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை - “தமிழர் தலைவர்” கி.வீரமணியும், பிரச்சாரம் செய்யப் போகிறாராம்! - வெட்கக்கேடு!

தமிழர்களே!ஈழத் தமிழர் இனப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தாமல் -அதற்கு அனைத்து உதவிகளையும் வாரி வழங்கிக் கொண்டு -தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதியையும் நிறைவேற்றிடாமல் - சிங்களத்துக்கும், பார்ப்பனருக்கும் துணைப் போகும் காங்கிரஸ் கட்சியையும் அதனுடன் கை கோர்த்து வரும் தி.மு.க.வையும், தேர்தலில் தோற்கடித்து பாடம் புகட்டுவீர்!

அயர்லாந்து அன்னிபெசன்டிலிருந்து இத்தாலி சோனியா வரை...
காங்கிரஸ் வரலாறே - தமிழினப் பகைமை தான்!


காங்கிரஸ் கட்சி - பிரிட்டிஷ்காரரால் தொடங்கி யது முதல் இது நாள் வரை அது தமிழினத்தின் பகை சக்தியாகவே இருந்திருக்கிறது. இடையில் இந்திய தேசியத்திலிருந்து மாறுபட்டு, தமிழின அடையாளத் தோடு செயல்பட்ட காமராசர் காலம் மட்டுமே மாறு பட்டிருந்தது. மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் - தமிழினப் படுகொலைக்கு கரம் நீட்டிக் கொண்டிருக் கிறது. இளம் தலைமுறையினரே; இதோ, அந்த வரலாற்றிலிருந்து சில துளிகள்...

• 1885 இல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியவர் ஆலன் ஆக்டேவியன் ஹுயூம் என்ற பிரிட்டிஷ் அய்.சி.எஸ். (அந்தக்கால அய்.ஏ.ஸ்.) அதிகாரி. அதற்கான ஆலோசனையை வழங்கியவர் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த டஃப்ரின் பிரபு.

• பம்பாய், கல்கத்தா, சென்னையில் காங்கிரஸ் மாநாடுகள் கூடியபோது மாநாட்டுப் பிரதிநிதி களுக்கு பிரிட்டிஷ் ஆளுநர்கள் தேனீர் விருந்து கொடுத்தனர்.

• காங்கிரஸ் தொடங்கப்பட்டது - சுதந்திரம் கேட்பதற்காக அல்ல. அப்போது நிர்வாகம் நடத்திய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியாரின் அடக்குமுறைகளை எதிர்த்து எவரும் போரிடாமல் கட்டுக்குள் வைப்பதற்கே காங்கிரஸ் தொடங்கப்பட்டது. எனவேதான் காங்கிரசைத் தொடங்கிய ஹுயூம் என்ற பிரிட்டிஷ் அதிகாரியே அக்கட்சியின் செயலாளராக 20 ஆண்டுகாலம் இருந்தார்.

• ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியின் மாநாடும் தொடங்கும்போதும் - “பிரிட்டிஷ் அரசர் அரசிக்கு கடவுள் நீண்ட ஆயுளைத் தர வேண்டும்” என்று தீர்மானங்கள் போடுவது வழக்கம். 1886 இல் தொடங்கி 1914 வரை 8 மாநாடுகளில் இந்த ‘மன்னர் வழிபாட்டு’த் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

• கல்கத்தாவில் இரண்டாவது காங்கிரஸ் மாநாடு நடந்தபோது ‘மன்னர் வழிபாட்டுத் தீர்மானம்’ தேவையா என்ற கேள்வி எழுந்தது, மாநாட்டுத் தலைவரான தாதாபாய் நவ்ரோஜி “இந்த ஜனசபை (காங்கிரஸ் மாநாடு) பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு வலிமையான அடித்தளம் (அ°திவாரக்கல்) என்று பதில் தந்தார்.

• அப்போது - காங்கிரசுக்கு ‘ஆரிய ஜன அய்க்கியம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. ‘காங்கிரஸ் அல்லது ஆரிய ஜன அய்க்கியம்’ என்ற பெயரில் க. சுப்ரமணிய அய்யர் என்ற காங்கிரஸ் தலைவர் ஒரு நூலையே எழுதியுள்ளார்.

• காங்கிரசைத் தொடங்கிய ஹுயும் அப்போது காங்கிரசில் பெரும் எண்ணிக்கையாக இருந்த பார்ப்பனர்களிடம் மதம், ஆச்சாரம், வர்ணஸ்ரமப் பாதுகாப்பு போன்ற சமூகப் பிரச்சினை களில் கட்சி குறுக்கிடாது என்று ஒவ்வொரு மாநாட்டிலும் உறுதி தந்து பேசினார். இதை ‘அம்பேத்கர் தனது சாதியை ஒழிக்க வழி’ எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

• சென்னையில் கூடிய காங்கிரஸ் மாநாடு பற்றி ‘சுதேசமித்திரன்’ நாளேட்டில் காங்கிரஸ் ஒருவிளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அதில், “இந்த வருடத்துக் காங்கிரஸ் சபையில் ஒரு முக்கியமான புதுஅம்சம் - சாதி ஆச்சாரம் பார்க்கும் பிரதிநிதிகளுக்குப் (பார்ப்பனர்களுக்கு) பிரத்தியேகமான ஒரு பங்களாவை அவர் களுடைய சாதி ஆச்சாரங்களுக்கு ஏற்றபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன” என்று அந்த விளம்பரம் கூறியது.

• 1885 இல் நடந்த பம்பாய் காங்கிரசிலும் 1886 இல் நடந்த கல்கத்தா காங்கிரசிலும் ஒரு மு°லீம் பிரதிநிதிகூட பங்கேற்கவில்லை. காரணம் அப்போது பிரிட்டிஷாரை முழுமையாக எதிர்த்தது மு°லீம்கள்தான். ‘ஆரிய ஜன அய்க்கியம்’ என்று பெயர் சூட்டிக் கொண்ட கட்சியில் எப்படி மு°லீம்கள் வருவார்கள்?

• சென்னையில் கூடிய மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற 361 பிதிநிதிகளில் 138 பேர் பார்ப்பனர்கள். மற்றவர்கள், செட்டியார், ரெட்டியார், முதலியார் போன்ற முன்னேறிய சாதியினர். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை. கும்ப கோண சங்கர மடத்தின் சார்பில் சங்கராச்சாரி பிரதிநிதி கலந்து கொண்டார்.

• சமூகப் பிரச்சினையில் காங்கிரஸ் ‘தலையை நுழைக்காது’ என்ற கூறினாலும், சென்னை காங்கிரஸ் மாநாட்டில் பசுவதையை தடை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை பார்ப்பனர் களுக்காக நிறைவேற்றினார்கள்.

• 1900க்குப் பிறகு நடந்த காங்கிரஸ் மாநாடுகளில் - காலையிலே இந்து மகாசபை மாநாடும், மாலை யில் - அதே மேடையில் காங்கிரஸ் மாநாடும் நடந்த வந்தன. காங்கிரசார் இரண்டு அமைப்பு களிலும் இரட்டை உறுப்பினர்களாக இருந்து வந்தனர்.

• இதற்குப் பிறகுதான் 1906 இல் முஸ்லீம்கள் தங்களுக்கு என்று ‘அகில இந்திய மு°லீம் லீக்’ என்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டார்கள்.

• வங்காளத்தை மத அடிப்படையில் இரண்டு மாகாணமாக பிரிட்டிஷார் பிரித்தபோது அதை எதிர்த்து ‘அய்க்கிய வங்காள இந்து இயக்கத்தை’ (United Bengal Hindu Movement) தொடங்கியது, காங்கிரசார் தான். அதே ஆண்டில் பஞ்சாபில் இந்து மகாசபையை காங்கிரசார் உருவாக்கி னார்கள். இதுவே பிறகு அகில பாரத இந்து மகா சபையாகியது. ஆக, அரசியலில் மதவாதத்துக்கு கால்கோள் நடத்தியதே காங்கிரஸ் தான்.

• லாலா லஜபதிராய், மதன்மோகன் மாளவியா இருவரும் ஒரே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் இந்து மகாசபைக்கும் தலைவர்களாக இருந்தனர். இருவருமே மோசமான வர்ணஸ்ரம வெறியர்கள். மு°லீம் எதிர்ப்பாளர்கள். ‘கடல் தாண்டுவது இந்துமத விரோதம்’ என்பதால், லண்டன் வட்ட மேஜை மாநட்டுக்கு சென்ற மதன் மோகன் மாளவியா, தன்னுடன் மண்ணை உருண்டையாக உருட்டி கையில் எடுத்துச் சென்றார். மண்ணை கையில் எடுத்துச் சென்றால், கடல் தாண்டி போனதாகாது என்பது அய்தீகமாம்! எனவே அவர் ‘மண்ணுருண்டை மாளவியா’ என்றும் அழைக்கப்பட்டார்.

• இப்போது - சென்னை காங்கிரஸ் அலுவலகம் ‘சத்திய மூர்த்தி பவனில்’ காங்கிரசார் கூடினாலே அங்கு கலவரம் வெடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். உண்மையில் காங்கிரசின் வரலாறே அப்படித்தான் இருந்திருக்கிறது. சூரத் நகரில் கூடிய காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ‘தீவிரவாதிகள்’ என்று அழைக்கப்பட்ட திலகர் தலைமையிலான ‘இந்து வெறியர்’ குழு கலவரத்தில் இறங்கியது எதிர்ப்பு அணி. திலகர் மீது செருப்பு வீசியது. பெரும் கலவரத்தினால் எந்த முடிவும் எடுக்காமல், மாநாடு கலைந்தது. அதன் பிறகு ஓராண்டு காலம் காங்கிரஸ் கூடவே இல்லை. அரசியலில் ‘செருப்பை’ ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்பதை, அப்போது தான், காங்கிரசார் உலகத்துக்கே அறிமுகப்படுத்தினர்.

• பொது மக்களிடம் திரட்டிய நிதிக்கு கணக்கு காட்டாமல் விழுங்கி ஏப்பம் விடும் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதும் காங்கிரஸ் தான். ‘திலகர் சுயராஜ்ய நிதி’ திரட்டி, கடைசி வரை காங்கிரஸ் அதற்கு கணக்கே காட்ட வில்லை. அதே ‘திலகர்’ நிதியை காந்தியார் வசூல் செய்தார். வசூல் செய்த பலரும் பணத்தை தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள். அதனால் தான் இப்போதும் “வசூல் பணம் என்னவா யிற்று?” என்று எவராவது கேட்டால் ‘காந்தி கணக்கில் எழுது’ என்று கூறும் வழக்கு உள்ளது. இது பொது வாழ்க்கை “ஒழுக்க”த்துக்கு காங்கிரஸ் வழங்கிய ‘அருட்கொடை’.

• அரசியலில் மதத்தை நுழைத்தவர் பாலகங்காதர திலகர் என்ற மராட்டிய காங்கிரஸ் பார்ப்பனத் தலைவர்தான். ‘பிள்ளையாரை’ அரசியல் குறியீ டாக்கியவரும் அவர்தான். சைவ - வைணவப் பிரிவுகளை ஒருங்கிணைக்க அவர் விநாயகனைப் பயன்படுத்தி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ‘விநாயகர்’ ஊர்வலங்களை மராட்டியத்தில் நடத்தினார். அதைத் தான் இப்போது இந்து முன்னணி நடத்திக் கொண்டிருக்கிறது.

• புனே நகரத்தில் எலிகளால் பிளேக் நோய் பரவி ஏராளமானோர் உயிரிழந்த போது நோயைத் தடுக்க எலிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளை பிரிட்டிஷ் நிர்வாகம் தீவிரப்படுத்தியது. அப்போது விநாயகன் வாகனம் எலி. எனவே எலியை ஒழிப்பது இந்து மத விரோதம் என்று கூறினார் திலகர். இதனால் எலியை ஒழிக்க வந்த இரண்டு பிரிட்டிஷ் அதிகாரிகள் கொல்லப் பட்டனர். இந்த வழக்கில் திலகர் தண்டிக்கப்பட்டு 18 மாதம் சிறைபடுத்தப்பட்டார்.

• ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிப்பதை எதிர்த்த திலகர், பெண்களுக்கு கல்வி தருவதையே எதிர்த்தார். குழந்தை திருமணங்களை (பால்ய விவாகம்) தடை செய்யும் சட்டத்தை பிரிட்டிஷார் கொண்டு வந்தபோது மதத்தில் தலையிடுவதாகக் கூறி, கடுமையாக எதிர்த்தார்.

• சென்னையில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் அரசியல் உரிமை கோரியபோது 1918 இல் திலகர் இவ்வாறு பேசினார்: “எதற்காக, செருப்பு தைக் கிறவனும், எண்ணெய்ச் செக்கு ஆட்டுபவனும், வெற்றிலை பாக்கு கடை வைத்திருப்பவனும், சட்டசபைக்குப் போக முயற்சிக்கிறார்கள்? யார், யார் எங்கே போக வேண்டும் என்று ஒரு வரைமுறை கிடையாதா?” - இந்த நிகழ்வுகளை அம்பேத்கர் தனது நூலில் (காந்தியும் - காங்கிரசும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன? நூலில்) பதிவு செய்துள்ளார்.

• அரசியலில் மதத்தைப் புகுத்தியதில் காந்திக்கு பெரும் பங்கு உண்டு. ‘ராம பஜனையோடு’ அவரது அரசியல் நடவடிக்கைகள் கலந்து நின்றன. தனது ‘அந்தராத்மா’வுடன் அடிக்கடிப் பேசுவதாக அவர் கூறிக் கொண்டார். இந்தியாவில் ‘ராம ராஜ்யம்’ அமைய வேண்டும் என்றார். ‘தீண் டாமை’ ஒழிய வேண்டும். ஆனால், நால்வர்ணப் பிரிவாகிய வர்ணா°ரம அமைப்பு நீடிக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு ‘வர்ணமும்’ தங்களுக்குரிய தொழிலை செய்வதே நல்லது என்றார்.

• ‘தீண்டப்படாத’ தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை வழங்க பிரிட்டிஷ் அரசு முன்வந்த போது அதை எதிர்த்து சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடங்கினார் காந்தி. மிரட்டலுக்கு பிரிட்டிஷ் அரசு பணிந்தது. தலித் மக்களுக்கு கிடைத்த உரிமையை காந்தி பறித்தார்.

• மயிலாப்பூரிலுள்ள சீனிவாச அய்யங்கார் என்ற பிரபல காங்கிரசார் வீட்டில் காந்தி தங்குவது வழக்கம். அப்போதெல்லாம் அவர் வீட்டுத் திண்ணையில்தான் காந்திக்கு இடம்; உள்ளே போக முடியாது; இதை காந்தியே கூறியிருக்கிறார்.

கறைபடிந்த காங்கிரஸ் வரலாற்றுப் பக்கங்கள்!

• வர்ணஸ்ரமத்தையும், மதத்தையும் நம்பிய காந்தி, கடைசியில் மதவெறியர்களாலே சுட்டுக் கொல்லப்பட்டார். கடைசி காலங்களில் பார்ப்பனர்களை எதிர்க்கத் தொடங்கியதும், இஸ்லாமியர்களின் நியாயங்களைப் புரிந்து கொள்ளத் தொடங்கியதுமே இதற்குக் காரணம்.

• பத்துக்கு மேற்பட்ட முறை - காந்தியாரை கொலை செய்யும் முயற்சிகள் நடந்தாலும், ‘சுதந்திர’ இந்தியாவில் உள்துறை அமைச்சராக இருந்த பட்டேல், காந்திக்கு உரிய பாதுகாப்பை வழங்கவில்லை. சுதந்திரப் போராட்ட வீரரும், முதுபெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன், காந்தி யின் மரணத்துக்கு பட்டேலின் அலட்சியமே காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். ‘சுதந்திரம்’ பெற்ற காலத்தில் காங்கிரசின் தலைவராக இருந்த மவுலானா அபுல்கலாம் ஆசாத் எழுதிய தனது சுயசரிதையில் (ஐனேயை றுiளே குசநநனடிஅ), உள்துறை அமைச்சர் பட்டேல் அலட்சியம் காட்டியதுதான் - காந்தி மரணத் துக்கு காரணமாகிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

• காந்தியை கொலை செய்யப் போவதாக முன் கூட்டியே பம்பாய் மாகாண உள்துறை அமைச்சராக இருந்த காங்கிரஸ் தலைவர் மொரார்ஜி தேசாய்க்கு கடிதம் எழுதியதாக காந்தியார் கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே (இவர் நாதுராம் கோட்சேயின் தம்பி) விடுதலையான பிறகு ‘பிளிட்°’ பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அது பற்றி விசாரிக்க அப்போது மத்திய காங்கிரஸ் ஆட்சி ஜி.எஸ். பாதக் என்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைத்தது. ஆனால் அந்த விசாரணை ஆணையம் செயல்படு வதில் காங்கிரஸ் அலட்சியமே காட்டியது. நீதிபதி பாதக் விசாரணையை முடிப்பதற்கு முன்பே வேறு பதவிக்கு மாற்றப்பட்டார். பிறகு எதிர்க் கட்சிகள் காட்டிய எதிர்ப்பால் நீதிபதி கபூர் என்பவர் தலைமையில் மற்றொரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையத்தின் முன் சமர்ப்பிக்க காந்தி கொலை தொடர்பான அரசு ஆவணங்கள் டெல்லியி லிருந்து விமானத்தில் பம்பாய் கொண்டு போகப் பட்டன.

• ஆனால், விமானத்திலே அந்த ஆவணங்கள் திருட்டுப் போய்விட்டதாக மத்திய காங்கிரஸ் ஆட்சி ஆணையத்தின் முன் கூறிவிட்டது. கபூர் ஆணையம் ஆர்.எஸ். எஸ் சைக் காப்பாற்றக்கூடிய ஓர் அறிக்கையை தந்து விசாரணையை முடித்துக் கொண்டது. இப்படி, தேசத் தந்தை காந்தியின் கொலையைப் பற்றியே அக்கறை காட்டாத கட்சிதான் காங்கிரஸ்.

• கேரள காங்கிரஸ் தலைவர்கள் தொடங்கிய வைக்கம் - தீண்டாமை ஒழிப்புப் போரைத் தொடர முடியாத நிலையில் அவர்களின் அவசர அழைப்பையேற்று தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார், வைக்கம் விரைந்து, தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரமாக தொடர்ந்தார். ஆனால், காங்கிரஸ் தலைவர்களான காந்தியும், ராஜகோபாலாச்சாரி யும் அதை ஆதரிக்கவில்லை. பெரியார் போராட் டத்திற்குப் போயிருக்கக் கூடாது என்று குறை கூறினர். போராட்டம் வெற்றி பெற்ற பிறகு, சமரசம் பேச காந்தியை தலையிட வைத்த ராஜ கோபாலாச்சாரி போராட்டத்தில் பெரியாரின் பங்கினைக் குறைத்தார். தனது சுயசரிதையில் வைக்கம் போராட்டம் பற்றி எழுதிய காந்தியும் பெரியார் பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிட வில்லை.

• ஹோம்ரூல் இயக்கத்தைத் தோற்றுவித்தவரும், பிரம்ம ஞானசபைக்கு தலைமை ஏற்றவருமான அன்னிபெசன்ட் என்ற அயர்லாந்து நாட்டுப் பெண்மணி. பார்ப்பனர்களின் செல்லப் பிள்ளையாகப் பாராட்டப்பட்டவர். இத்தாலியி லிருந்து வந்து, காங்கிரசுக்கு தலைமையேற்ற சோனியா, இன்று சிங்கள ராணுவத்தின் இனப் படுகொலையை ஆதரிப்பதுபோல், அன்று, அன்னிபெசன்ட், ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர் நடத்திய படுகொலையை நியாயப்படுத்தினார். ‘பஞ்சாபி, சீக்கியர்கள் செங்கல்லை வீசியதற்கும், அதற்கு ஜெனரல் டயர் பீரங்கிக் குண்டுகளைப் போட்ட தற்கும் சரியாகப் போய்விட்டது. இதுதான் அரசு தர்மம்’ என்றார்; அதேபோல் தான் ஈழத் தமிழர் படுகொலைக்கும் இன்று காங்கிரசும் தி.மு.க.வும் ‘இறையாண்மை தர்மம்’ என்கின்றன.

• அகில இந்திய காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தபோது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் செயலாளராக இருந்த ஏ.ரங்கசாமி அய்யங்கார், தலைவராக இருந்த ‘இந்து’ ஏட்டின் ஆசிரியர் கஸ்தூரி ரங்க அய்யங்கார், சுயராஜ்யக் கட்சி தலைவர் சத்தியமூர்த்தி அய்யர் ஆகியோர், பிரிட்டிஷ் அரசு நடவடிக்கைகளுக்கு பயந்து, பதவிகளிலிருந்து விலகல் கடிதம் கொடுத்து ஓடிவிட்டனர். அகில இந்திய மட்டத்தில் முன்னணித் தலைவராக இருந்தவரும், ‘சர்வாதிகாரி’ என்று வர்ணிக்கப்பட்டவருமான மற்றொரு தேசியத் திலகமான சீனிவாச அய்யங்கார், ஒத்துழையாமை இயக்கமே சட்ட விரோதம் என்று கூறிவிட்டார்.

• இந்து மதம் திணித்த குழந்தைப் பருவத்திலே திருமணம் செய்து வைக்கும் கொடுமையை நிறுத்த 1928 இல் அன்றைய சென்னை மாகாண சட்டசபையில் தீர்மானம் வந்தபோது, தமிழ்நாடு சுயராஜ்யக் கட்சி (சுய ராஜ்யக் கட்சி என்பது தேர்தலில் பார்ப்பனர்கள் போட்டியிடுவதற்காக காங்கிரசார் உருவாக்கிய பினாமி அமைப்பு) பால்ய விவாகத்தை ஒழித்து விட்டால், ‘கற்பு கெட்டு விடும்’ என்று சட்ட சபையில் எதிர்த்தது.

• கோயில்களில் பெண்களை ‘தேவதாசிகளாக்கும்’ இந்து மதக் கொடுமையை ஒழிக்க - 1930 இல் சென்னை சட்டமன்றத்தில் தீர்மானம் வந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்தவர், காங்கிரஸ் தலைவரான சத்திய மூர்த்தி அய்யர். இந்த சட்டத்தை எதிர்த்து சிறைக்குப் போவேனே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நரகத்துக்குப் போக மாட்டேன்; சட்டத்தைவிட சா°திரமே முக்கியம் என்று பேசினார்; அவர் பெயரைத் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு, இப்போது சூட்டியுள்ளார்கள்.

• பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் நலனுக் காக சட்டசபையில் கேள்வி கேட்க அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு கேள்விகளை கேட்பது சத்தியமூர்த்தி வழக்கம். இதை அவரே ஒப்புக் கொண்டும் எழுதியுள்ளார். இப்போதும் நாடாளுமன்றத்தில் பெரும் தொழில் நிறுவனங் களுக்காக, அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, உறுப்பினர்கள் சிலர் கேள்வி கேட்கும் முறைக்கு வழிகாட்டியதே காங்கிரஸ் கட்சி தான்.

• காந்தி - பிரிட்டிஷாருக்கு எதிராக ‘ஒத்துழை யாமை இயக்கம்’ அறிவிக்கப்பட்ட போது, சட்ட மன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியது, சத்திய மூர்த்தி அய்யர், ரங்கசாமி அய்யங்கார், சீனிவாச அய்யங்கார் பதவியை விட விருப்ப மின்றி அரைமனதோடு பதவி விலகினார்கள். போராட்டத்தில் பங்கேற்காமல் ஒதுங்கிக் கொண்டார்கள்.

• 1931 இல் கராச்சியில் (இன்று பாகிஸ்தானிலுள்ள நகரம்) அகில இந்திய காங்கிரஸ் மாநாடு கூடியது. அதில் பொது கிணறு, பொது வீதி, பொது இடம் ஆகியவற்றை எல்லோரும் பயன்படுத்த உரிமை உண்டு என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதுபற்றி சத்தியமூர்த்தி அய்யர் - அவசர அவசரமாக ‘இந்து’ ஏட்டில் ஒரு விளக்கம் எழுதினார். ஒரு வகுப்பினருக்கு உரிமையான இடம் (அதாவது அக்ரகாரம்) கோயில் மற்றும் அது தொடர்புடைய இடங்களுக்கு இந்தத் தீர்மானம் பொருந்தாது என்பதே தேசியத் திலகம் சத்தியமூர்த்தி அய்யர் தந்த விளக்கம்!

• பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது, காந்தி பிரிட்டிஷ் அதிகாரி இர்வின் என்பவருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். சட்டமறுப்பு இயக்கத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வது பற்றி அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டாலும், பகத்சிங் தூக்கிலிடப்படுவது பற்றி - காந்தி, இர்வினுடன் எதையுமே பேச வில்லை. மாறாக, காந்தி தூக்கிலிடுவதை ஆதரித் துள்ளார். பகத்சிங்கை எப்போது தூக்கிடலாம் என்பது குறித்து, விவாதித்துள்ளதோடு, காங்கிரஸ் மாநாடு நடக்கும் நேரத்தில் தூக்கிலிட நேரம் குறித்தார்கள். வழக்கமாக விடியற்காலையில்தான் தூக்கு போடப்படும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக பகத்சிங்கும், அவரது தோழர்கள் ராஜ குரு, சுகதேவ் ஆகியோரும் மாநாடு நடக்கும் நேரத்தில் இரவு 7.30 மணியளவில் தூக்கிலிடப் பட்டார்கள்.

• பிரிட்டிஷாரின் 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின் கீழ் 1938 இல் பிரிட்டி ஷாரோடு சமரசம் செய்து கொண்டு, தமிழ் மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முன் வந்தது. காங்கிரஸ் முதல்வராக பதவிக்கு வந்த ராஜகோபாலாச்சாரி பார்ப்பனர் (ராஜாஜி) - பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக இந்தியைப் புகுத்தினார். 10 பேர் கொண்ட அமைச்சரவையில் 4 முக்கியப் பொறுப்புகளில் பார்ப்பனர்களை நியமித்தார். ஒழுக்கக் கேடாக செயல்பட்டார் என்று காங்கிரஸ் கட்சியிலிருந்து 5 ஆண்டுகள் நீக்கப்பட்டிருந்த டி. எஸ். எஸ். ராஜன் என்ற பார்ப்பனரை அழைத்து அமைச்சராக்கினார். இலவசக் கல்வித் திட்டத்தை ரத்து செய்தார். வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை முடக்கப் பட்டது. உயர் பதவிகளில் பார்ப்பனர்களே நியமிக்கப்பட்டனர். அரசு கடிதம் - பதிவேடு களில் ‘திரு’ என்று போடுவதற்கு பதிலாக ‘ஸ்ரீ’ என்றே போட உத்தரவிட்டார். விசுவ கர்ம சாதியார் பெயருக்குப் பின்னால் ‘ஆச்சாரி’ என்று போடக்கூடாது. ‘ஆசாரி’ என்றே போட வேண்டும் என்று உத்தரவிட்டார். (ஆச்சாரி என்றால் பார்ப்பனரைக் குறிக்கும் என்பதால்) பார்ப்பன மனுதர்ம ஆட்சியையே அன்று காங்கிரஸ் ஆட்சி நடத்தியது.

• மீண்டும் ‘சுதந்திர’ இந்தியாவில் 1952 இல் காங்கிரஸ் பதவிக்கு வந்தபோது, ராஜகோபாலாச் சாரியே முதல்வர். 15000 ஆரம்பப்பள்ளிகளில் 6000 பள்ளிகளை நிதி இல்லை என்று கூறி மூடினார். குழந்தைகள் அப்பாவின் தொழிலை பள்ளியில் கற்றுக் கொள்ள உத்தரவிட்டார். அரை நேரம் படிப்பு; அரை நேரம் அப்பாவின் தொழிலை கற்கவேண்டும்; மீண்டும் குலத் தொழில் செய்யும் நிலையை உருவாக்கினார்.

• “சாதி முறை ஒழிய வேண்டும் என்று பலர் குறை கூறுகிறார்கள். அதை ஒழிக்க முடியாது. நன்கு யோசித்துத்தான் நமது முன்னோர்கள் வர்ணஸ்ரம முறையை வகுத்துள்ளார்கள். அதன்படி அவரவர்கள் தங்கள் முறைக்கேற்றவாறு நடந்து மக்களுக்கு தொண்டு புரிய வேண்டும்” என்று கரூரில் காங்கிரஸ் தலைவர் ராஜகோபாலாச்சாரி வெளிப்படையாகவே பேசினார். (‘சுதேச மித்திரன்’ 29.1.61) பெரியார் போராடி பார்ப்பன ஆட்சியை ஒழித்தார்.

• பிறகு பெரியார் ஆதரவுடன் காமராசர் முதல்வரா னார்; அவரது ஆட்சிதான் தமிழரின் பொற்கால ஆட்சியாக இருந்தது. தமிழ் மண்ணின் உளவியலைப் புரிந்து, தமிழர்களுக்கான ஆட்சி நடத்தினார். டெல்லி ஆட்சியின் உத்தரவுகள் தமிழகத்துக்கு எதிராக இருந்தால் செயல்படுத்த மறுத்தார். தமிழர் அடையாளத்தோடு இருந்த வரை வெற்றிகளைக் குவித்த காமராசர், மீண்டும் அகில இந்திய அரசியலுக்குள் நுழைந்தபோது, காங்கிரஸ் பார்ப்பனத் தலைமை அவரை அவமதித்தது; புறக்கணித்தது. இந்திரா அவரை கட்சியிலிருந்தே நீக்கினார். தமிழகத்தில் காமராசர் கட்டி எழுப்பிய ஆட்சியும் 1967 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது.

• எந்த அகில இந்திய தலைமை - இந்திராவின் தலைமை - காமராசரை புறக்கணித்தோ அந்தத் தலைமையுடன் கைகுலுக்கி, காமராசரின் காங்கிரசை வீழ்த்த, கலைஞர் கருணாநிதி, 1971 இல் இந்திராவுடன் கூட்டணி அமைத்தார்.

• அதே கலைஞர் கருணாநிதியின் ஆட்சியை இந்திராவின் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தான் கவிழ்த்து, ‘மிசா’வின் கீழ், தி.மு.க.வினரை கைது செய்து, ஓராண்டு சிறையில் அடைத்து, தி.மு.க. ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, சர்க்காரியா விசாரணை ஆணையத்தை அமைத்தது. தொடர்ந்து பதவிக்கு வந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா ஆட்சி, இரண்டு ஆண்டுகளில் கவிழ்ந்தவுடன், மீண்டும், காங்கிரசுக்கு நட்புக்கரம் நீட்டினார், கலைஞர் கருணாநிதி. ‘நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக!’ என்றார். அதே ‘துரோக மரபு’ இன்றும் தொடருகிறது.

• ஈழத் தமிழர் இனப்படுகொலைகளுக்கு காரணமான சிங்கள ராணுவத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்துவரும் சோனியாவை சொக்கத் தங்கம் என்கிறார்; கலைஞர் கருணாநிதி.

• சோனியா ஆட்சி அமைக்க தமிழர்களின் வாக்குகளைக் கேட்கிறார்;

• முல்லைத் தீவில் - ஒவ்வொரு நாளும் மரண ஓலங்கள்;

• கொத்து கொத்தாய் செத்து மடியும் தமிழர்கள்;

• உணவு இல்லை; மருந்து இல்லை; சிகிச்சை இன்றி - குண்டுவீச்சில் கைகால்களை இழந்தவர்கள் துடிதுடித்துச் சாவும் அவலங்கள்;

• இந்த கொடுமைகளுக்கு, இன அழித்தலுக்கு சிங்கள அரசுக்கு நிதியுதவியும், ஆயுத உதவியும், போர் பயிற்சியும் தரும் சோனியாவின் காங்கிரசு மீண்டும் பதவிக்கு வரவேண்டுமா?

• தமிழக ராமேசுவரம் மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு, கைது செய்வதையும், படகுகளை தாக்குவதையும், மீனவர் வாழ்வாதார உரிமைகளை நசுக்குவதையும், தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் - சிங்கள கப்பல் படைக்கு இந்தியா ஆயுத உதவி செய்யலாமா? இது பற்றி கவலைப்படாத சோனியாவின் காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வரலாமா?

தமிழர்களே! தமிழர்களே! காங்கிரஸ் பகையையும் அதற்கு துணைப்போகும் தி.மு.க. துரோகத்தையும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்து பாடம் புகட்டுவீர்!

போர் நிறுத்த’ அணி

ஏ.கே. அந்தோணிக்கு கருப்புக்கொடி: 50 கழகத்தினர் கைது

கோவை வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற கழகத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். ஈழத் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நிகழ்த்தி வரும் இனப் படுகொலையை நிறுத்தக் கோரி தமிழகம் வரும் மத்திய அமைச்சர்களுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப் படும் என்று பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஜன.8 ஆம் தேதி சென்னை வந்த பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற 1000க்கும் அதிகமான கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி வந்த மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனுக்கு கழகம் கருப்புக்கொடி காட்டியது.
இதற்கிடையில் ஜன.18 ஆம் தேதி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, கோவைக்கு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்தார். கோவை வரும் செய்தி அறிந்த கழகத்தினர், உடனே கருப்புக்கொடி போராட்டத்துக்கு தயாரானார்கள். அமைச்சர் ஏ.கே.அந்தோணி நிகழ்ச்சி முடித்து விமானம் மூலம் திருவனந்தபுரம் போக விமான நிலையம் போகும் வழியில் பகல் 12 மணியளவில் பீளமேடு ஹோப்° கல்லூரி அருகே கருப்புக் கொடி களுடன் திரண்டனர். ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டனர்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமையில் கோபால் (கோவை மாநகர செயலாளர்), திருப்பூர் துரைசாமி (கோவை-வடக்கு மாவட்டக் கழகத் தலைவர்), வெள்ளியங்கிரி (பொள்ளாச்சி நகர கழக செயலாளர்), பன்னீர்செல்வம் (தமிழ்நாடு மாணவர் கழகம்), திருப்பூர் முகில்ராசு, யாழ். நடராசன் (உடுமலை நகர கழகத் தலைவர்) உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் கருப்புக்கொடியுடன் திரண் டனர். தோழர்கள் கருப்புக்கொடியுடன் திரண்ட செய்தி அறிந்து, அமைச்சர் ஏ.கே.அந்தோணி வேறு பாதையில் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஈழத் தமிழர்கள் மீதான போரை நிறுத்தக் கோரியும், மத்திய அரசின் துரோகத்தையும் கண்டித்து தோழர்கள் முழக்கமிட்டனர். காவல்துறை அனைவரையும் கைது செய்தது. மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
கொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் பிணையில் விடுதலை
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன், இயக்குனர் சீமான் ஆகியோர் 31 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு உயர்நீதிமன்றம் 19.1.2009 அன்று பிணை வழங்கி உத்தரவிட்டது. பிணை மனுவை கழக வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, இளங்கோ ஆகியோர் தாக்கல் செய்தனர். தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது ஒரு குற்றமல்ல என்று வழக்கறிஞர் துரைசாமி வாதிட்டார்.

உயர்நீதிமன்ற நீதிபதி டி.சுதந்திரம் அவர்கள் முன் மனு விசாரணைக்கு வந்தது. ரூ.10 ஆயிரத்துக்கு சொந்த பிணைத் தொகையும், அதே தொகைக்கு இரு நபர் பிணை உறுதியும் வழங்கி, பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். காவல்துறை அழைக்கும் போது விசாரணைக்கு வரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி ஈரோட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சுகள் தேச விரோதமானவை என்று குற்றம்சாட்டப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டனர். டிசம்பர் 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் மூவரும் அடைக்கப்பட்டனர்.
ஈரோடு மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் இரு முறையும், மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு முறையும் பிணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப் பட்டது. செவ்வாய் அல்லது புதன் கிழமை சிறையிலிருந்து விடுதலையாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கூறுவதிலும் ‘நியாயம்’ இருக்கிறது!

காங்கிரஸ் கட்சி தொடங்கி 125 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அண்மைக்காலத்தில் தோன்றிய விடுதலை சிறுத்தைகளால் வீழ்த்த முடியாது என்று, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சன் பேசியுள்ளார்.
உண்மை தான். காங்கிரசை வெளியி லிருந்து வீழ்த்துவதற்கு அக்கட்சி எவரையும் அனுமதிக்காது. அந்த உரிமையை காங்கிரசாரே தங்களின் ‘ஏகபோகமாக’ வைத்துக் கொண்டுள்ள னர். தமிழ்நாட்டில் 1967 இல் கடையை கட்டிக் கொண்ட காங்கிர° கட்சி, இன்னும் கோட்டைக் கதவைத் தட்டிக் கொண்டுதான் நிற்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. என்று மாநில கட்சிகளின் தோளின் மீது சவாரி செய்து, அவர்கள் கருணையோடு வழங்கும் இடங்களில் தான் 125 ஆண்டு காங்கிர° போட்டி யிட்டு வருகிறது.
சத்தியமூர்த்தி பவன் வரலாற்றி லேயே முதல்முறையாக வேறு ஒரு அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுகூட அண்மையில்தான் நடந்திருக்கிறது. அந்த உரிமையையும் காங்கிரசாரே தங்கள் கைகளை விட்டுப் போய்விடா மல் தேசபக்தியோடு பாதுகாத்து வைத் திருந்தனர். சத்தியமூர்த்திபவனிலே நடந்த கட்சிக் கூட்டங்களிலே அரிவாள் வெட்டு விழுவதும், கட்சி மேலிடப் பார்வையாளர்களை உள்ளாடையுடன் உதை கொடுத்து ஓட வைப்பதும், தமிழக காங்கிரசாரின் தேசபக்தி திருப்பணிகளாகவே நிகழ்ந்து வந்துள்ளன.
இப்படி எல்லாம் ‘உட்கட்சி ஜன நாயகத்தை’ ஆயுதங்களுடன் கட்டிக் காத்து காங்கிரசை மக்களிடமிருந்து தனிமைப் படுத்தி வரும் காங்கிரசார், பிற கட்சியின் மூலம் அழிவதற்கு அனுமதிப் பார்களா? ஒரு போதும் மாட்டார்கள். அண்மையில் நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தல்களில்கூட, சில மாநிலங் களில் காங்கிர° கட்சி தோற்றதற்குக் காரணம் கட்சிக்குள் நிகழ்ந்த உட்பகை தான் என்று அவர்கள் கட்சியின் தலைவர் சோனியாவே கூறியிருக்கிறார்.
எனவே, தோழர் திருமாவளவன் - காங்கிரசை காணாமல் ஒழித்திடும். காங்கிரசாரின் முயற்சிகளைத் தட்டிப் பறித்துவிடக் கூடாது என்பதே நமது கோரிக்கை. பெரியவர் சுதர்சனத்துக்கு எவ்வளவு கோபம் வருகிறது, பாருங்கள்.
கைதைக் கண்டித்து திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் சீமான், தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் பெ. மணியரசன் ஆகியோரை விடுவிக்கக் கோரி திருச்சியில் வழக்குரைஞர்கள் ஜன.9, வெள்ளிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் பேரவை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞர் த. கங்கைசெல்வன் தலைமை வகித்தார். பேரவையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மதி, சோழர், இளமுருகு, பானுமதி, கனகராஜ், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 50 வழக்கறிஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி, பெ.மணியரசன், திரைப்பட இயக்குநர் சீமான் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி அளிப்பதை உடன் நிறுத்த வேண்டும். தமிழக மக்களை ஏமாற்றும் மத்திய அரசின் போக்கைக் கண்டிக்கிறோம்.
தீக்குளிக்க முயன்ற 3 கழகத்தினர் கைது
ஈழத்தில் தமிழர்கள் மீதான இனப் படுகொலைக்கு துணை போகும் இந்திய பார்ப்பன அரசின் துரோ கத்தைக் கண்டித்து, தீக்குளிக்க முயன்ற 3 கழகத் தோழர்களை போலீசார் சுற்றி வளைத்து, தடுத்து கைது செய்தனர். கடந்த 16 ஆம் தேதி பகல் 11 மணியளவில் நடந்த இந்த சம்பவம், கோவையில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. திடீரென்று, கோவை ஆட்சியர் அலு வலகம் முன் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்த மூன்று கழகத் தோழர்கள் கையில் பெட்ரோலுடன் வந்து உடல் முழுதும் கொட்டிக் கொண்டு, இந்திய பார்ப்பன அரசின் துரோகத்தை எதிர்த்து முழக்கமிட்டு தீக்குளிக்க முயன்றனர்.
300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பாய்ந்து சென்று தோழர்களை மடக் கிப் பிடித்து கைது செய்தனர். கழகத் தோழர்கள் ஈரோடு பெரியார் ஜெகன், திருப்பூர் கழகத் தோழர்கள் கோபிநாத், சம்பூகன் என்கிற சண்முகம் ஆகிய மூவரும் கைது செய்யப் பட்டனர்.
தோழர் திருமாவை ஆதரித்து கழகத்தினர் குவித்த தந்தி
மறைமலைநகரில் ஈழத் தமிழர் களுக்காக பட்டினிப் போராட்டத்தை நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து ஆடை போர்த்தி, ஆதரவினை வெளிப்படுத்தினர். புதுவை கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் தலைமை யில் 100க்கும் அதிகமான பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், தோழர் திருமாவளவனை நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர். தமிழ்நாடு முழுதுமிருந்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தோழர்கள் நூற்றுக் கணக்கான தந்திகளை தோழர் திருமா வளவனுக்கு அனுப்பினர்.
‘போர் நிறுத்த’ அணி
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தோழர் திருமாவளவன் ஈழத் தமிழர்களுக்காக கூட்டணி அரசியலை யும் கடந்து உண்மையான பங்களிப்போடு, தொடர்ந்து போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்தி வருகிறார். ஈழத் தமிழர் போராட்டம் கடும் நெருக்கடிக் குள்ளாகியுள்ள சூழலில், பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி உருவாக்கி வைத்த தேக்கத்தை தகர்ப்பதிலும் வெற்றி பெற் றுள்ளார். இதற்காக தமிழின உணர்வாளர்கள் தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் என்றென்றும் நன்றி கூறி வாழ்த்துவார்கள்.
அய்ந்து நாள் பட்டினிப் போராட்டத்தை முடித்த நிலையில், ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தமிழக கட்சிகள், இயக்கங்கள் ஒரே அணியாகத் திரள வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்மொழிந் துள்ளார். இது பாராட்டி வரவேற்று செயல்படுத்த வேண்டிய ஆக்கப்பூர்வமான யோசனையாகும். இப்போது ஈழத் தமிழர்களுக்கு எதிரான துரோகத்தில் வெளிப் படையாக தங்களை அடையாளப்படுத்திடும் கட்சிகள் காங்கிரசும், ஜெயலலிதாவும் தான்! (ஜெயலலிதா கட்சி யிலுள்ள பல உணர்வுள்ள தமிழர்களே, ஜெயலலிதாவின் துரோகக் கருத்துகளை ஏற்கவில்லை என்பதே உண்மை)
ஜெயலலிதா தலைமையில் கூட்டணி சேர்ந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. ஆகியவை, ஜெயலலிதாவின் துரோகக் கருத்துகளை இந்தப் பிரச்சினையில் ஏற்காமல், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தங்களது உறுதியான கருத்துகளை வெளிப்படுத்தியும், போராடியும் வருகிறார்கள். வழக்கம் போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது பார்ப்பன அடையாளத்தையே இப்பிரச்சினையில் வெளிப்படுத்தி வருகிறது. காசா பகுதியில் இஸ்ரேல், பாலஸ்தீனர்களைக் கொன்று குவிப்பதும், ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவிப்பதும் ஒன்றுதான் என்ற பார்வை அக்கட்சிக்கு இல்லை. தேசிய சுயநிர்ணய உரிமைக்காக மக்களோடு போராடும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு பயங்கரவாத முத்திரை குத்திடும் ஏகாதிபத்திய நாடுகளின் குரலையே இக்கட்சியும் எதிரொலிக்கிறது.
தி.மு.க.வைப் பொறுத்த வரை அதன் இரட்டை வேடம் வெளிப்படையாகவே அம்பலமாகி வருகிறது. தமிழின உணர்வு என்ற தளத்தில் கால் பதித்து நிற்கும் தி.மு.க., அந்த உணர்வுகளுக்கு எதிரான துரோகம் காங்கிரசிலிருந்து வெளிப்படும்போது, ‘கூட்டணி ஆட்சி அதிகாரம்’ என்பதற்கே முன்னுரிமை தந்து, மீண்டும் மீண்டும் பழைய வரலாற்றுப் ‘பெருமை’களைப் பேசி, அதற்குள் தன்னை முடக்கிக் கொள்ளவே விரும்புகிறது.
இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி வெளிப்படையாக இழைக்கும் துரோகத்தைக் கண்டிப்பதற்கான வார்த்தைகளை முதலமைச்சர் கலைஞர் இன்னும் தேடிக் கொண்டே இருக்கிறார். தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருந்தும் என்ன பயன்? டெல்லிக்கு அடிமை ஆட்சியாகத் தானே இருக்க வேண்டியிருக்கிறது? இத்தனைக்கும் மத்தியில் நடப்பது கூட்டணி ஆட்சிதான். காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனாலும், பார்ப்பன ஆட்சி அதிகாரமே நாட்டை வழி நடத்துகிறது! முடிவுகள் எடுப்பதும், செயல்படுத்துவதும் ‘அவாள்’கள் தான்.
தமிழக முதல்வர் கலைஞர் தம்மிடம் உள்ள அதிகாரத்தை இந்திய தேசிய ஆட்சியின் துரோகத்துக்கு எதிராக வெடித்துக் கிளம்பும் எழுச்சிகளை அடக்கவே பயன்படுத்துகிறார். அவரிடம் உள்ள அதிகாரம் மத்திய அரசை பணிய வைக்க பயன்படவில்லை. உண்மையைச் சொன்னால் தி.மு.க. ஆட்சி - வரலாற்று துரோகத்தை சுமந்து நிற்கிறது. தி.மு.க.வின் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை.
இந்த நிலையில் - ‘வாழ்வா, சாவா’ போராட்டத்தில் நிற்கும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றும் உரிமைக் குரல் தமிழகத்திலிருந்துதான் எழுந்தாக வேண்டும். இதற்கு ஆதரவான மக்கள் எழுச்சியை மேலும் வலிமைப்படுத்த வேண்டும். வெளிப்படையான துரோக சக்திகள் ஒருபுறம்; ஆட்சி அதிகாரத்துக்காக அடங்கிப் போய் நிற்கவே விரும்பும் சக்திகள் மறுபுறம்; இந்தத் தடைகளுக்கு இடையே ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யவும், அவர்களின் விடுதலைக்கு ஆதரவாக இயக்கங்களை நடத்திச் செல்லும் அணுகுமுறைகளை உருவாக்கிடவும் வேண்டிய நேரம் இது. பிரச்சினையை தடம்புரளச் செய்துவிடாமல் போர் நிறுத்தம் கோரும் கட்சிகள், இயக்கங்கள், ஓரணியாகி - மக்கள் இயக்கத்தை நடத்துவதன் மூலம் துரோக சக்திகளை மக்கள் மன்றத்தில் பலமிழக்கச் செய்ய வேண்டும்! தோழர் திருமாவளவன் முன்மொழிந்துள்ள கோரிக்கை செயலாக்கம் பெற வேண்டும்.
சங்கராச்சாரி மடத்துக்குள் தலித் சிற்பிகளின் சிலை

தலித் சிற்பிகள் வடித்தசிலைகளே சங்கராச்சாரி மடத்துக்குள்ளும் இருக்கிறது. இந்த சாதனையை நிகழ்த்திய பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த சிற்பி ராசனின் சமூகப் புரட்சியை ஏடுகள் பலவும் வெளியிட்டு வருகின்றன. ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ ஏடு வெளியிட்டுள்ள அவரது பேட்டி இது.
கோயில்களுக்குள் நுழைந்து சாமி கும்பிடக் கூட தலித்துகளுக்கு பல இடங் களில் தடையிருக்கும் இந்தக் காலகட்டத் தில் கருவறைகளுக்குள் கம்பீரமாக நிற்கும் தெய்வத் திருவுருவச் சிலைகளை இன்று தலித்துகள் தயாரிக்கிறார்கள் என்பது ஆச்சரியமூட்டும் தகவல் அல்லவா? அப்படி சிலை வடிக்கும் வேலைகளில் தலித்துகளைத் தயார்படுத்தி சைலண்டாக ஒரு புரட்சியை நடத்தி வருகிறார் ராஜன் என்பவர்.
தஞ்சை மாவட்டம் சுவாமி மலையி லிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள திம்மக்குடியில் சிலை செய்யும் பட்டறை வைத்திருக்கிறார் அந்த அற்புத மனிதர் ராஜன். சிலை செய்யும் தொழில் ஆன்மிகம் கலந்தது என்றா லும், ராஜன் ஒரு பழுத்த பெரியார்வாதி என்பது ஆச்சரியம் கலந்த ஆனந்தம். சிலை செய்வதில் இருக்கும் ஐதீகங்களை உடைத்து, முற் போக்காக சிலை வடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் இவர்.
அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதும் ஆச்சரியம் விலகாமல் திம்மக்குடிக்கு விரைந்தோம். இதோ அவரே நம்மிடம் பேசுகிறார்:
"திருச்சி ஸ்ரீரங்கம்தான் என் சொந்த ஊர். பதின்மூன்று வயதிலேயே பெரியார் கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டேன். யாராவது என்னிடம், ‘நீ என்ன சாதி? மதம்?’ என்று கேட்டால், ‘மனுஷ சாதி. திராவிட மதம்’ என்றுதான் சொல்வேன். ஆனால், என் குடும்பத்தவர்கள் ஆன்மிகத் தில் ஊறிப் போனவர்கள். அதனால் என்னை அவர்கள் கண்டிக்க, வீட்டில் தினம் தினம் சண்டை சச்சரவுதான்.
1978 இல், என் பத்தொன்பது வயதில், பி.யூ.சி. முடித்தேன். அப்போது சுவாமிலை யில் சிலை செய்யும் கலை செழிப்பாக இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கே போய் அந்தக் கலையைக் கற்றுக் கொள்ள ஆர்வமானேன். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த என் அப்பா, ‘இதற்காகவா உன்னைப் படிக்க வைத்தேன்?’ என தாம்தூமென்று குதித்தார். கோபமான நான், என் பி.யூ.சி. சான்றிதழைக் கிழித்தெறிந்து விட்டுக் கிளம்பத் தயாரானேன். ‘நீ எங்களை மீறிப் போனால் மீண்டும் திரும்ப வராதே’ என்றார் அப்பா. ‘சரிப்பா’ என்று செருப்பைக்கூட உதறித் தள்ளிவிட்டு இங்கே வந்து விட்டேன். இன்றைக்கு முப்பத்தொன்பது வருஷங்கள் ஆச்சு. இன்னும்கூட நான் வீட்டுக்குப் போக வில்லை" என்று கூறி நிறுத்திய ராஜன் தொடர்ந்தார்.
"78 இல் சுவாமிமலை வந்த நான் மூன்று வருட காலம் சிலை செய்யும் கலையைக் கற்றுக் கொண்டு 81 ஆம் வருடம் கும்பகோணத்தில் தங்கியிருந்து சிலை செய்ய ஆரம்பித்தேன். நான் செய்த சிலைகள் பிரபலமாகி மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளுக்குப் போக ஆரம்பித்தன. சிலைகளுக்கான தேவை அதிகமானதால் எனக்கு ஆட்கள் அதிகமாகத் தேவைப்பட்டார்கள். அப்போதுதான் சிலை வடிக்கும் தொழிலில் பெரியாரிசத்தைப் புகுத்தி சாதி ஒழிப்புச் செய்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது.
அதனால் தலித்துகளைப் பயன்படுத்தி சிலை வடிக்கத் தீர்மானித்தேன். அதுவரை விவசாயக் கூலிகளாக வெட்டியான்களாக, பறை அடிப்பவர் களாக இருந்த தலித்துகளை அழைத்து சிலை செய்ய சொல்லித் தந்தேன். ‘இந்தத் தொழில் நமக்கு ஒத்து வருமா?’ என்றுஆரம்பத்தில் தயக்கம் காட்டிய அவர்கள், பிறகு ஆர்வத்துடன் கற்றுக் கொண் டார்கள். ‘தலித்துகள் சிலை செய்வதா?’ என்று ஆரம்பத்தில் பலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, என் முயற்சியை மழுங்கடிக்கப் பார்த்தாலும் நான் மசிந்து கொடுக்கவில்லை.
இதுவரை முந்நூறு தலித்துகளுக்கு சிலை செய்ய கற்றுத் தந்திருக்கிறேன். அதில் முக்கால்வாசிப் பேர் இன்று தனிப் பட்டறை அமைத்து சிலை செய்து வருகிறார்கள். அவர்களை இந்தத் தொழிலைச் செய்ய விடாமல் தடுக்க முயன்ற சிலரது முயற்சி எடுபடாமலேயே போய்விட்டது. இன்று தலித் சிற்பிகள் தமிழகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். இதே சுவாமிமலையில் கண்ணன் என்பவரும், பட்டீ°வரத்தில் சுந்தர் என்பவரும் பெரிய அளவில் சிலை செய்யும் பட்டறை வைத்திருக் கிறார்கள். இவர்கள் இருவருமே தலித்துகள்.
கும்பகோணம் நீதிமன்றம் அருகிலுள்ள கோயிலில் உள்ள ஐயப்பன் சிலையை ஒரு தலித்து தான் செய்தார். பெருந்துறை சிவன் கோயில், சென்னை, கோவை, சேலம், மதுரையிலுள்ள கோயில் கள், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஜெர்மனி, மொரீஷியஸ் போன்ற நாடுகளிலுள்ள கோயில்களில் எல்லாம் என் பட்டறையில் பணிபுரிந்த தலித்துகள் செய்த சிலைகள் இருக்கின்றன. நாங்கள் சங்கராச்சாரி யாரின் ஸ்ரீ மடத்திற்கு நூற்றுக்கணக்கில் மகாமேரு செய்து தந்திருக்கிறோம். அந்தப் பணியில் பாதிக்குப் பாதி ஈடுபட்டவர்கள் தலித்துகள்தான்.

நடராஜரின் 108 தாண்டவத்தில், 103-வது தாண்டவமான அதோ தாண்டவத்தை’ சிலையாகச் செய்பவர்கள் செத்து விடுவார்கள் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது. அந்தத் தாண்டவத்தின் அமைப்பை ஒரு புத்தகத்தில் யதேச்சையாகப் பார்த்த நான், 83 ஆம் ஆண்டு நாலரை அடி உயரத்தில் மும்பை கோயில் ஒன்றுக்கு அதைச் செய்து கொடுத்தேன். ஆனால், இன்றுவரை நான் இறந்து போகவில்லை. அதே மாதிரி சில தலித்துகளும் அந்த தாண்டவச் சிலையைச் செய்திருக்கிறார்கள். அதில் ஒரு சிலை என் மியூசியத்திலும், இன்னொன்று என் பட்டறை யிலும் இருக்கிறது.
என் பட்டறை மற்றும் மியூசியத்தைப் பார்க்க உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த், நடிகர் முரளி, இசைஞானி இளையராஜா போன்றவர்கள் வந்திருக்கிறார்கள். இதில் இளையராஜா வந்தபோது நடராஜர் சிலையைப் பார்த்து அதிசயமாகி, ‘இதை நான் தொட்டுப் பார்க்கலாமா?’ என்றார். ‘தொடுவதற்குத் தானே சிலை?’ என்று நான் சொன்னதும் கண்கலங்கிப் போனார்.
தலித்துகளுக்கு நான் சிலை செய்யக் கற்றுத் தந்தததால் ஏதோ பூமியைப் புரட்டிப் போட்டு சாதனை செய்துவிட்டதாக நினைக்கவில்லை. மனிதர்களைப் பிடித்து ஆட்டி, அலைக்கழிக்கும் சாதிப் பேயை ஏதோ கொஞ்சம் வேப்பிலையடித்து விரட்டியிருப்பதாக நினைக்கிறேன். என் மியூசியத்தைப் பார்க்க வந்த ஒருவர், ‘இவ்வளவு நாத்திகம் பேசும் நீங்கள் ஏன் ஆத்திக சமாசாரமான சிலைகளைச் செய்கிறீர்கள்’ என்று கேட்டார். அதற்கு நான், ‘இவ்வளவு ஆத்திகம் பேசும் நீங்கள் சிலை செய்ய வேண்டியது தானே? ஏன் என்னைத்தேடி வருகிறீர்கள்? இது ஒரு தொழில். இதில்கூட நாத்திக கருத்து களைப் பரப்ப முடியும்’ என்று நான் சொன்னதும் வாயடைத்துப் போனார்.
கடவுள் விஷயத்திலும் மறை முகமாக இப்படி சாதிகளை ஒழிக்க முடிகிறபோது, மற்ற தொழில்கள், விஷயங்களிலும் மனம் ஒப்பி முயற்சி செய்தால் சாதியை முழுமையாக ஒழித்து விடலாம்" என்ற நமக்கு நம்பிக்கை ஊட்டினார் ராஜன்.
அவரது பட்டறையின் மேலாள ரான கார்த்திகேயனிடம் பேசினோம்.
"இங்கே வேலை பார்ப்பதை ஒரு பாக்கியமாக நினைக்கிறோம் சார். ராஜன் கல்யாணமே செய்து கொள்ள வில்லை. கேட்டால், ‘நான் பெரியார் கொள்கையைத் திருமணம் செய்து விட்டேன். எனக்கு எதற்கு இரண்டா வது தாரம்? என்பார். ஆரம்பத்தில் வீட்டில் வைத்துச் சிலை செய்து வந்த அவர், 1990 இல் இந்த இடத்தை வாங்கி இங்கே பட்டறை அமைத்தார். ‘இந்த இடம் நாலைந்து பேர் தூக்கு மாட்டிச் செத்த இடம். இங்கே அவர்களின் ஆவி உலவுது, பேய் பிறாண்டுது’ என்றெல் லாம் சிலர் கதைகளை அள்ளி விட் டார்கள். அதைப் புறந்தள்ளிவிட்டு இந்த இடத்தை வாங்கிப் பட்டறை அமைத்தார். ராஜனுக்கு ரேஷன் கார்டு கூட கிடையாது. ரேஷன் கார்டு வாங்கப் போனபோது, ‘என்ன மதம்?’ என்று கேட்டிருக்கிறார்கள். இவர், ‘திராவிட மதம்’ என்றிருக்கிறார். கடுப்பான அவர்கள், ‘ஒழுங்கா மதத்தைச் சொல்லுங்க. இல்லாவிட்டால்,ரேஷன் கார்டு கிடைக்காது’ என்றிருக்கிறார்கள். ‘அப்படியொரு ரேஷன் கார்டே எனக்கு வேண்டாம்’ என்று கூறிவிட்டு இவர் வந்துவிட்டார். அதுபோல வாக்காளர் பட்டியலிலும் இவரது பெயர் இல்லை. அதனால் ஓட்டுரிமை யும் இவருக்கு இல்லை.
பல நாட்டுச் சுற்றுலா கையேடு களில் ராஜன் சாரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. ஒரு முறை பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்து எங்கள் மியூசியத்தைப் பார்த்துவிட்டுச் சென்ற சிலர், அந்த நாட்டின் ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ராஜனைப் பற்றிய ஒரு பாடத்தை இடம்பெறச் செய்து விட்டார்கள். அதுபோல சென்னையில் உள்ள விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட் தரும் மாநில விருதை ஐந்து முறை இவர் வாங்கியிருக்கிறார். லண்டனில் 97 ஆம் ஆண்டு ‘ஆர்ட் அண்ட் ஆக்ஷன்’என்ற பெயரில் நடந்த சிலை வடிக்கும் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து எட்டாயிரம் பேர் கலந்து கொண்டார்கள். அதில் இந்தியா சார்பாகக் கலந்து கொண்டு ராஜன் சான்றிதழ் பெற்றிருக்கிறார்.
தற்போது மாநிலம் முழுவதும் உள்ள சமத்துவபுரங்களில் தமிழக அரசு நூறு பெரியார் சிலைகளை வைக்கப் போகிறது. அதில் தஞ்சை மாவட்டத் திலுள்ள ஆறு சமத்துவபுரங்களுக்கு பெரியார் சிலை செய்து தரும்படி எங்களிடம் கேட்டிருக்கிறார்கள்" என்றார் அவர்.
ராஜனின் பட்டறையில் பாண்டு ரங்கன் என்ற தலித்தும் சிலை செய்யப் பழகி வருகிறார். ஏகரத்தைச் சேர்ந்த அவரிடம் பேசினோம். "கூலி வேலை பார்த்து வந்த நான், இப்போது நான்கு வருடங்களாக இங்கே தொழில் கற்று வருகிறேன். அடுத்த வருடம் தனியாகப் பட்டறை போடப் போகிறேன். இந்தத் தொழிலைச் செய்வதை நினைத்தால் எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கும் சார். கோயில்களிலும் கருவறைகளிலும் நுழைந்து சிலை எப்படி இருக்கிறது என்று எங்களைப் பார்க்கக்கூட விடாத இந்த சமூகத்தில், என் இன ஆட்கள் செய்த சிலைகள் முக்கிய கோயில் களிலும், கோயில் கருவறைகளிலும் இருப்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நாங்கள் தொட்டுத் தடவி, செதுக்கி, கூர் நேர் பார்த்து அங்குல அங்குலமாக வடித்துத் தரும் சிலை களை மற்றவர்கள் வணங்குகிறார்கள் எனும்போது மனதுக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. எல்லா எதிர்ப்பையும் மீறி எங்களுக்கு ஒரு நம்பிக்கையும், திடமும் கொடுத்து இந்தத் தொழிலில் ஈடு படுத்தியவர் ராஜன் அய்யா தான். எங்களுக்கு அவர் இன்னொரு பெரியாராகத் தெரிகிறார்" என்றார் பாண்டுரங்கன் நெகிழ்வுடன்.
நன்றி : ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ 11.1.2009

தீஸ்டா செதல்வாட் - விளக்கம்
சட்டத்தின் பிடியிலிருந்து தப்பும் மதவன்முறையாளர்கள்

‘காம்பட் கம்யூனலிசம்’ ஆசிரியரும், மதவெறி சக்திகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் போராளியுமான தோழர் தீ°டா செதல்வாட் டிச.11 அன்று ‘மதச்சார்பற்றோர் மாமன்றம்’ சார்பில் சென்னையில் ஆற்றிய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி.

இப்போது டிசம்பர் 6, 1992க்கு வருவோம். பாபர் மசூதியின் இடிப்பு. அந்த ஒரேயொரு பயங்கரவாதச் செயல், மென்மேலும் பயங்கரவாதம் பரவுவதற்கும் தனிமைப் படுத்துதல் அதிகமாவதற்கும் வழி வகுத்தது. ஆனால் 1985க்கும் 1992-வுக்கும் இடைப்பட்ட காலத்தின் வரலாற்றை நாம் பார்ப்போமேயானால், ரத யாத்திரை நடத்தப்படட இடங்களிலெல்லாம், குறிப்பாக இரண்டு நிகழ்ச்சிகளை குறிப்பிட விரும்புகிறேன். மீரட்டில் ஹாஷிம் புரா என்ற இடத்தில் 1987, மற்றும் 89-ல் இரண்டு நிகழ்ச்சிகள் ரதயாத்திரையின்போது நடந்தன. ஐம்பத்தோரு முஸ்லிம் சிறுவர்கள் ஆயுதம் தாங்கிய உத்தரபிரதேச ஊர்க்காவல் படையினரால் துடிக்கத் துடிக்க சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. சாட்சிகள் தொலைந்து விட்டனர். எனினும் பாதிக்கப்பட்டவர்கள் நீதி வேண்டி குரல் எழுப்பிக் கொண்டுள்ளனர்.
ம.பி. மாநிலம் பகல்பூரில் சந்தேரி, லொகாயன் என்ற இரண்டு கிராமங்கள். ஒரே இரவில் எண்ணற்ற மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். சென்ற ஆண்டு சிலர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டனர். ஆனால் கத்தி, லத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டிருப்பவர்கள் யாரும் திட்டம் தீட்டியவர்களல்ல. வெறுப்பை உருவாக்கும் தலைவர்கள் அல்ல. அவர்கள் எய்யப்பட்ட வெறும் அம்புகள்தான்.
1992க்கு வருகிறோம். வெறுப்பு கர்நாடகத்தையும் விடவில்லை. இப்படிப்பட்ட மத வெறுப்பு உள்ளே வர தென்னிந்தியா அனுமதிக்காது என்றே என்னைப்போன்ற வரலாற்று மாணவர்கள் நம்புகிறோம். 1980களிலும், குறிப்பாக 1992லும் நாம் பார்த்தோம், டிசம்பர் 92லும், ஜனவரி 93-யிலும் மும்பை போன்ற ஒரு மாநகரில், காவல்துறையினரின் ஒரு சார்புத் தன்மை கொண்ட முகத்தை, பெரும்பான்மை சமூகத்தவருக்கு ஆதரவாக இருந்ததையும், சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த அப்பாவி மக்களுக்கு எதிராக இருந்தததையும் நாம் பார்த்தோம். 1980கள் முழுதும் இதுதான் நிகழ்ந்தது. அதன் பிறகு 92ல் மசூதி இடிப்பு. பின் திட்டமிடப்பட்ட படுகொலை பம்பாயில் நிகழ்ந்தது. அப்போது அது பம்பாய்தான். மும்பை ஆகவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்ற சிறீ கிருஷ்ணா விசாரணை ஆணையமும் கூறிவிட்டது.
நண்பர்களே, 1984, 1992, 2002களில் குஜராத். இடையே, 1998லிருந்து இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகத்தவர் தெளிவாகத் திட்டமிட்டு குறி வைக்கப்பட்டனர். 1998லிருந்தே, ஒரிசாவும் கர்நாடகாவும் குறிவைக்கப்பட்டன. ஒரே ஆண்டில் 48 தாக்குதல்கள் கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவ நிறுவனங்களையும், குறிவைத்து நிகழ்த்தப்பட்டது என்பதை அகில இந்திய கத்தோலிக்க ய+னியனோடு சேர்ந்து நாங்கள் பதிவு செய்தோம். 1998ல், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஏன் தமிழ்நாட்டின் ஊட்டியிலும் ஒரு தாக்குதல் நிகழ்த்தப் பட்டது. குஜராத்தில்தான் மிக அதிகமான எண்ணிக்கையில் அது நடந்தது. ஒவ்வொரு இடத்திலும் நிகழ்த்தப்பட்ட முறையில் வித்தியாசம் இருந்தது. ஆனால், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் கிறிஸ்தவ சமுதாயம் செய்து கொண்டிருக்கும் சேவைகளையெல்லாம் மீறி, தூரமாக இருக்கும் பகுதிகளில் கூட ஆதிவாசிகளுக்கு கிறிஸ்தவ சமுதாயத்தினர் செய்த சேவைகளையெல்லாம் கூட மதமாற்றம் செய்யப்படுகிறது என்று சொல்லி அந்த சமூகத்தை கொச்சைப்படுத்தும் வேலை நடந்தது. எல்லாத் துறைகளிலும் முஸ்லிம் சமுதாயத்தினரின் சேவைகள் இருந்தாலும், அந்த சமுதாயமும் மதமாற்றம் செய்கிறது என்று சொல்லி கேவலப்படுத்தப்பட்டது. மறுபடியும் சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறியது. குற்றவாளிகள் திரிந்து கொண்டிருக்க நாம் அனுமதித்தோம்.
2002ல் என்ன நடந்தது, தொடர்ந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் நாமனைவரும் அறிவோம். முடிந்துபோன கதை அல்ல இது. ஆண்டுதோறும், அதிக எண்ணிக்கையில் படுகொலைகள் ஒரு சமூகமும், அரசும், நாடும் அனுமதிக்குமானால், குற்றவாளிகளை தண்டனைக் குரியவர்களாக அடையாளம் காட்டாது விடுமானால், பெரிய அளவில் தனிமைப் படுத்துதலையும், காழ்ப்புணர்வையும் தேக்கி வைக்க உதவும். ஒரு சமூகம் என்ற அளவிலும், அரசாங்கம் என்ற அளவிலும் நாம் இதைச் சரி செய்யத் தவறிவிட்டோம். அப்படி ஒன்று நடந்தது என்று கூட நாம் ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை.
குஜராத்தில் வெகுகாலத்துக்கு திட்டமிட்டு சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்துதல், குஜராத் நகர்ப்புறத்தை ஒரு சமுதாயத்தினர் வாழும் பகுதியாக ஒதுக்கி வைத்தல், பாடப்புத்தகங்களில் சிறுபான்மை சமூகத்தினரை கேவலப்படுத்தி எழுதுதல்... இந்தக் காரியங்கள் யாவும் இனப்படுகொலை நிகழ்த்தப்படுவதற்கு குறைந்தது ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு செய்யப்படடன. இனப்படுகொலை ஒரு இரவில் நடப்பதல்ல. அது ஒன்றும் மேஜிக் அல்ல. அது ஒரு திட்டமிடப்பட்ட செயல். மௌனமாக இருப்பதன் மூலம் குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்ததை பெரும்பான்மை சமூகம் ஒத்துக்கொள்கிறது. குஜராத் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
கம்ய+னலிசம் காம்பாட் ஆங்கில பத்திரிக்கையின் இனப்படுகொலை பற்றிய இதழின் தமிழாக்கத்தை வெளியிட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது சென்னையில் இருக்கும் தோழர்களால் வெளியிடப்பட்டது. அதை நான் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு வேண்டுமென்றே தமிழில் கொடுத்தேன். ஏனெனில் குஜராத்தில் ஒரு நிவாரண முகாமில் அவர் முதல்வர் மோடிக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார். நிவாரண முகாமுக்குள் செல்லக்கூடாதென எனக்கு மாவட்ட அதிகாரி சொல்லி இருந்தார். எனவே, நான் புர்கா அணிந்து உள்ளே சென்று தமிழ் இதழை அப்துல் கலாமிடம் கொடுத்தேன்.
குஜராத் பெஸ்ட் பேக்ரியில் உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கு பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் எங்கள் குழு 67 வழக்குகளுக்காகப் போராடிக் கொண்டுள்ளது. நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இன்றுகூட, சிறப்பு புலனாய்வு குழு, முன்னாள் சிபிஐ இயக்குனர், சென்னையைச் சேர்ந்த திரு. ராகவன் அவர்கள் தலைமையில் கோத்ரா, குல்பர்க், நரோடாகாம், நரோடா பாட்டியா, ஓட், மற்றும் சர்தார் பூர் படுகொலைகளை மறுபுலனாய்வு செய்து கொண்டிருக்கிறது.
வழக்கை உயிருடன் வைத்திருக்க மூன்று நான்கு ஆண்டுகளாக நாங்கள் உச்ச நீதிமன்றத்தோடு போராட வேண்டியிருந்தது. காலம் கடந்து விட்டது, இந்த வழக்குகள் எல்லாம் குஜராத்திலேயே அழுகிச் சாகட்டும் என்று தடுப்பதற்கு தன் சக்தியையெல்லாம் பயன்படுத்தியது குஜராத் அரசு. ஆனால் குஜராத்தில் பயங்கரமான சூழலில் வாழும் 468 சாட்சிகள் இன்னும் துணிச்சலோடும் மனசாட்சியோடும் சாட்சி சொல்ல தயாராக இருக்கிறார்கள் என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறோம். அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் வசதி படைத்தவர்களும் அல்ல. தங்களது பண்ணை நிலத்தில் கூடாரம் அடித்துக் கொண்டு வசிக்கும் அவர்கள் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார்கள். அமைப்பு அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர்கள் துணிச்சல் நீடித்திருக்க எங்களில் சிலர் எங்களால் ஆனதைச் செய்து கொண்டிருக்கிறோம். இதுவரை அவர்கள் எந்த அச்சுறுத் தலுக்கும் பணிந்துவிடவில்லை. உங்களைப்போன்ற மக்களின் ஆதரவுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
பெஸ்ட் பாக்டரியில் குடும்பமே உயிருடன் எரிக்கப்பட்டபோது உயிர் பிழைத்த ஒரே பெண் - ஜாஹிரா தான் சாட்சி;. அவரை மிரட்டி, ஆட்சியாளர்கள் பொய் சாட்சி கூற வைத்தனர்.
ஜாஹிராவை நான் பழிசொல்ல மாட்டேன். பெரியதொரு விளையாட்டில் அவர் ஒரு பகடைக்காய் மட்டுமே. வடோதரா என்ற பி.ஜே.பி எம்.எல்.ஏ செய்த காரியம் அது. தூக்கி எறிவதற்கு ரொம்ப எளிமையானது பணம்தான். பலவீனமான இளம்பெண் என்ன செய்வாள்? உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான ஒரு முறையீடு என்னிடம் இன்னும் உள்ளது. பொய்சாட்சி சொன்னதற்காக அவளுக்கு ஒரு ஆண்டு தண்டனை கொடுத்தார்கள். ஆனால் அவளுக்கு லஞ்சம் கொடுத்த பா.ஜ.க. தலைவர் மது ஷிவாசுக்கு ஒரு மாதம் கூட தண்டனை கொடுக்கவில்லை. நமது அமைப்பில் எங்கோ தவறு உள்ளது. இப்படியெல்லாம் பேசியதால் நீதிமன்றத்தின் கோபத்துக்கு நான் ஆளாகி இருக்கிறேன்.
குஜராத்துக்குப் பிறகு, ஒரிசாவும் கர்நாடகாவும் வந்துள்ளன. ஒரிசாவில் பயங்கரம் இன்னும் தொடர்கிறது. 35000 பேருக்கு மேல் நிவாரண முகாமில் உள்ளனர். ஜூலை மாதத்திலிருந்து இதுவரை நான் மூன்று முறை அங்கு சென்று வந்துவிட்டேன்.
குஜராத்தில் இன்னும் கும்பல் கும்பலாக கல்லறைகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நேசத்துக்கு உரியவர்களின் உடல்களை கேட்டுப் பெறுவதற்கும் முடியாமல் இருக்கின்றனர். குஜராத்தில் படுகொலைகள் நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் கேமராக்கள் அங்கிருந்து நகர்ந்துவிட்டன. சிறுபான்மை சமூகத்தின் செல்வாக்குள்ளவர்கள் சமரசம் செய்து கொண்டுவிட்டனர். இதைச் சொல்வதற்கு வருந்துகிறேன். சாட்சிகளும், பாதிக்கப்படடவர்களும்தான் இப்போது களத்தில் தனியாக உள்ளனர். நாம் இதையெல்லாம் கேட்பதற்கு ஒரு மேடையைத் தயார் செய்தோமெனில், காயங்களை மறுபடியும் திறப்பதாக நாம் குற்றம் சுமத்தப்படுகிறோம். நான் கேட்கிறேன், ரத்தத்தை ஓடவிடாமல் தடுத்துவிட்டால், எந்தக் காயமாவது குணமடையுமா?
ஒரிசா பயங்கரவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசே முன் நின்று நடத்திய பயங்கரவாதம்தான் குஜராத்தில் அரங்கேறியது. கிறிஸ்தவர்கள் மீதும், தலித்துகள் மீதும் நடத்தப்பட்டது பயங்கரவாதச் செயல்பாடுகள். பெண் குழந்தைகளைக் கருவில் கொல்வதும் பயங்கரவாதச் செயல்பாடுதான். பயங்கரவாதம் பற்றிப் பேசுகிறோம் இன்று. ஆனால் நாம் எங்கே தொடங்கி எங்கே முடிக்கிறோம்?
கடந்த 15 ஆண்டுகளில் நான்கு முக்கிய சீர்திருத்தங் கள் வேண்டுமென்று நாம் கேட்டு கொண்டிருக்கிறோம். ஒன்று, காவல்துறை சீர்திருத்தம். அது தொடர்பான சட்டதிட்டங்கள் எல்லாம் நமது காலனிய முதலாளியாக இருந்த பிரிட்டிஷாரால் வகுக்கப்பட்டவை. அவை நமது அடிமை மனப்பான்மை கொண்ட மக்கள் தொகையை அடக்கியாள்வதற்காக, நம் அரசியல் சாசனம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது. நமது காவல் துறையை நாம் அரசியல் சாசன ரீதியாக அமைக்கவோ, ஜனநாயகப்படுத்தவோ இல்லை. எனவே காவல் துறையினர் மக்களுக்கு சேவை செய்யவில்லை. மாறாக, மக்களை அடக்கியாளவே அவர்கள் விரும்புகின்றனர். இந்த உறவு முறை மாற வேண்டும். சட்டம் மாற வேண்டும்.
ஓய்வு பெற்ற நமது மூத்த காவல்துறை அதிகாரிகளும், 1975லிருந்து 1999 வரையிலான நேஷனல் போலீஸ் கமிஷன் அறிக்கைகளும் காவல்துறையில் சீர்திருத்தங்கள் தேவை என்று பலமாக சிபாரிசு செய்துள்ளன. ஆனால் நமது அரசியல் கட்சிகள், அது யாராக இருந்தாலும், காவல்துறை மீது உள்ள கட்டுப்பாட்டை இழக்க விரும்பவில்லை.
காவல்துறை சீர்திருத்தத்துக்கான கோரிக்கையை மக்கள் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். இது ஒரு அறிவுஜீவித்தனமான கோரிக்கை அல்ல. இது நமது பாதுகாப்பு தொடர்பான விஷயம். சார்பு எதுவும் இல்லாமல் காவல்துறை நடக்க வேண்டும் என்பதற்காக. சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பதற்காக. காவல்துறையை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்பதற்காக. எனவே பொதுமக்கள் அமைப்புகள் இந்த கோரிக்கையை நிச்சயம் முன்வைத்துப் போராட வேண்டும்.
இரண்டாவது, நீதித்துறைச் சீர்திருத்தம். நீதித்துறை கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று நாம் இந்த சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தே ஆக வேண்டும். நிதிமன்ற அவமதிப்பு சட்டத்தை நீக்க வேண்டும். இந்திய நாட்டின் குடிமகன் எனற நிலையில், ஒருமுறை ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதென்றால், நீதிபதியின் நோக்கத்தில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லையெனில், அந்த தீர்ப்பை விமர்சனம் செய்யும் உரிமை எனக்கு இருக்க வேண்டும்.
(தொடரும்)

கோவை சிறையில் தா.பாண்டியன் தோழர்களை சந்தித்தார்

தேசிய பாதுகாப்புக்கு களங்கம் விளைவித்ததாகவும், கலவரம் ஏற்படும் வகையில் பேசியதாகவும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குனர் சீமான், தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச் செயலாளர் மணியரசன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் சிறையில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களை பார்த்துவிட்டு வெளியே வந்த தா. பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான், மணியரசன் ஆகியோர் தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் விதத்தில் பேசியதாக கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதமாக கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த 2 முறையாக பிணை மறுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு களங்கம் விளைவித்ததாகவும், கலவரம் ஏற்படும் வகையில் பேசியதாகவும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தந்த புகாரின் பேரில் சில நாட்கள் கழித்து இவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கொடுத்த புகாரை முறையாக விசாரித்து முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யவில்லை. புகாரை விசாரிக்காமலேயே பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்று கூறினார்.

லண்டனில் கடவுள் பிரச்சாரத்துக்கு பதிலடி
‘கடவுளை மறுத்தால் நரகத்தில் துன்பம் அனுபவிக்க வேண்டும்’ என்று மக்களை எச்சரித்து, கிறிஸ்தவ மத நிறுவனங்கள் லண்டனில் விளம்பரப் பலகைகளை வைத்திருந்தன.

இந்த மதவெறிப் பிரச்சாரத்துக்கு எதிராக பிரபல நகைச்சுவை பெண் எழுத்தாளரான ஏரியன்ஷெரைன் களமிறங்கினார். மக்களிடம் நன்கொடைகளை திரட்டினார். ஒவ்வொருவரிடமும் அவர் கேட்டது
5 பவுண்ட் மட்டும். "கடவுள் என்று ஒன்று இல்லை. எனவே கவலையை நிறுத்துங்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குங்கள்" என்ற வாசகங்களை பேருந்துகளில் விளம்பரமாக வெளியிட்டார். தனது உடையிலும் அதை பொறித்துக் கொண்டார். வாசகம் பொறித்த பேருந்து ஒன்றின் முன் அவர் நிற்கும் காட்சி.
மறைவு
மதுரை மாவட்ட பெரியார் பெருந் தொண்டர் கைவண்டி கருப்பு அவர் களின் மகனும், கழகத் தொண்டரு மாகிய க. திராவிடமணி (30) 8.12.2008 அன்று மரணமடைந்தார். மதுரை மாவட்ட கழகத் தோழர்களும், தோழமை அமைப்புத் தோழர்களும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். எந்த மூடச் சடங்குமின்றி உடல் அடக்கம் நடந்தது.
நன்கொடை
புதுச்சேரி மாநிலம் அரியாங் குப்பம், மணவெளி, கழகச் செயல்வீரர், இரா. வேல்முருகன்-அருணா இணை யர்களின் மகள் இரா. வெண்ணிலா முதலாம் ஆண்டு பிறந்த நாள் 15.12.2008 சிறப்பாக கொண்டாடப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.1000 அளிக்கப்பட்டது. (நன்றி-ஆர்)
வந்த கடிதம்
‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ 25.12.2008 இதழ் கண்டேன். பெரியார் நூல்கள் நாட்டுடைமையாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது என் நெஞ்சில் தேனாய் இனித்தது. பெரியார் நூல்களை அரசுடைமையாக்கிட நாம் மக்கள் இயக்கம் கட்ட வேண்டும். பெரியார் நூல்களை ஆதிக்கவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டியது ஒவ் வொரு உண்மையானப் பெரியார் தொண் டரின் நீங்காக் கடமையாகும். ‘வி.பி.சிங் ஆட்சிக்கு எதிராக அரங்கேறிய தீக்குளிப்பு நாடகங்கள்’ என்ற விடுதலை இராசேந் திரனின் இரங்கலுரை அற்புதம்.
- தங்க. சங்கரபாண்டியன்,
சென்னை - 600 103.
விடியல் எப்போது?
- தமிழேந்தி -

கொடுமைகள் முற்றும் தொலையுமா இங்கு?
கொஞ்சம்நீ எண்ணடா தோழா! - இந்த
அடிமைத் தமிழ்நாட்டில் வாழ்கின்ற வரைநம்
அல்லல்கள் தீருமா தோழா!
வாக்குப் பொறுக்கும் திராவிடக் கட்சிகள்
வஞ்சகம் கொஞ்சமோ தோழா! - நாளும்
தூக்கிச் சுமக்கிறார் காங்கிரசுக் கழுதையை
சொரணையே இல்லையே தோழா!
தேசிய இனங்களைச் சிதைப்பவ ரோடா
தேர்தலில் கூட்டணி தோழா! - விலை
பேசியே பெற்ற அன்னையை விற்றும்
பிழைப்பது பிழைப்போ தோழா!
அம்மவோ... எத்தனை உயிர்க்கொலை அங்கே!
அழுகுரல் தொடருதே தோழா! - சே... சே...
பம்மாத்து அரசியல் பண்ணிப் பிழைப்பதா?
பச்சை நரித்தனம் தோழா!
ஏங்கி ஏங்கியே ஈழத்திற் கழுகிறோம்
இங்கென்ன நிலையடா தோழா! - நாளும்
வீங்கிப் பெருக்கும் மார்வாரி குசராத்தி
வேட்டைக்குத் தீர்வென்ன தோழா!
துடிக்கிற சோதரன் கண்ணீர் துடைக்கவும்
சொந்தக்கை வேண்டுமென் தோழா! - முற்றி
வெடிக்கிற தேசிய விடுதலைப் புரட்சிஓர்
விடியலைக் காட்டுமென் தோழா!

மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி1000 கழகத்தினர் கைது
ஈழத்தில் போர் தொடருவதற்கு துணை நின்று தமிழகத் தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு, தமிழகம் வந்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பெரியார் திராவிடர் கழகம், கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை எழுச்சியுடன் நடத்தியது.
தமிழகம் முழுதுமிருந்தும் 1000 கழகத் தோழர்கள் கருப்புக்கொடி காட்ட திரண்டு வந்தனர். பெரியார் திராவிடர் கழகம் முதலில் போராட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, ஈழத் தமிழர் பாதுகாப்புக் குழுவின் சார்பில், அதன் அமைப்பாளர் பழ.நெடுமாறன், பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்தார். ஜன. 8 ஆம் தேதி காலை 7 மணியிலிருந்து கழகத் தோழர்கள் ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ள பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட சைதை பனகல் மாளிகை அருகே திரளத் தொடங்கினர்.
கோவை, பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர், சேலம், மேட்டூர், கொளத்தூர், ஏற்காடு, பவளத்தானூர், நெமிலி, தர்மபுரி, ஈரோடு, கோபி, பவானி, சத்தியமங்கலம், புதுவை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கழகத் தோழர்கள் திரண்டு வந்தனர். பகுதி முழுதும் கருஞ்சட்டைக் கடலாக காட்சி அளித்தது. துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் பொதுச்செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட 900 தோழர்கள் கருப்புக்கொடி ஏந்தி, ‘மன்மோகன்சிங்கே திரும்பிப் போ!’ என்ற முழக்கத்துடன் திரண்டனர். 20 பெண்களும் பங்கேற்றனர். ஈழத் தமிழர் ஆதரவு ஒருங்கிணைப்புக் குழு பழ. நெடுமாறன் தலைமையில் தோழர்கள் தியாகு, இராசேந்திர சோழன், தேனிசை செல்லப்பா, பாவலர் இராமச்சந்திரன், குமரிநம்பி, வைகறை, மெல்கியோர், கவிஞர் தமிழேந்தி, அற்புதம் அம்மாள், பா.ஜெயப்பிரகாசம் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் திரண்டிருந்தனர். அனைவரையும் காவல்துறை கைது செய்தனர். இரண்டு திருமண மண்டபங்களில் தோழர்கள் தங்க வைக்கப்பட்டனர். பிற்பகல் 3 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி வீழ்ச்சி நிலையானதா?
தமிழர்களின் அரசியல் தலைநகரமாக கம்பீர மாக நின்ற கிளிநொச்சி, இப்போது ராணுவத்தின் பிடியில். இலங்கை ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்தபோது, சில நாய்கள் மட்டுமே தென்பட்டன. மக்கள் முழுதும் வெளியேறி விட்டார்கள். மக்களும் புலிப்படையும் இல்லாத மண்ணைப் பிடித்துள்ளது, சிங்கள ராணுவம்.கிளிநொச்சியின் வரலாறு என்ன? முதலாவது ஈழப்போரில் யாழ் மாவட்டம் முழுதும் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தபோது, கிளிநொச்சி நகரம் மட்டும் ராணுவத்தின் வசம் இருந்தது. இலங்கை ராணுவ தளபதி டென்சில் கொப்பேகடுவ - 1984 இல் கிளிநொச்சியில் முகாமிட்டு, விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வழி நடத்தி வந்தார். 1985 இல் கிளிநொச்சியில் ராணுவம் முகாமிட்டிருந்த காவல் நிலையத்தில் குண்டுகள் நிரப்பிய வாகனங்களை செலுத்தி, புலிகள் பெரும் தாக்குதலை நடத்தினர். ராஜீவ் காந்தி தமிழர்களைக் கொன்று குவிக்க அனுப்பி வைத்த இந்திய ராணுவமும், கிளிநொச்சியில் கடும் பாதிப்புகளை உருவாக்கியது.
இந்திய ராணுவம் வெளியேறிய பிறகு, ஈழத்தில் இரண் டாம் கட்டப் போர் தொடங்கியது. கிளிநொச்சி யைப் பிடிக்க விடுதலைப்புலிகள் தீவிரமான தாக்குதல்களைத் தொடங்கியபோது, இலங்கை ராணுவம் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கி, ஆணையிறவுக்கு தப்பிச் சென்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் முழுப் பகுதியும் புலிகள் கட்டுப் பாட்டில் வந்தது.1996 இல் சந்திரிகா பிரதமராக இருந்தபோது கிளிநொச்சியை மீட்க ‘சஞ்ஜெய’ என்ற பெயரில் மூன்று கட்ட ராணுவ நடவடிக்கைகளை மேற் கொண்டார். கிளிநொச்சி மீண்டும் வரும் நிலையில் ஆக்கிர மிக்கப்பட்டது. 1997 இல் விடுதலைப் புலிகளின் கடற்படை வலிமை பெற்றது. ராணுவம் யாழ்ப்பாணக் கடல் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு புலிகள் தாக்குதல்கள் நடந்தன. எனவே யாழ்ப்பாணத்துக்கு தரைவழிப் பாதையைத் தேட ஆரம்பித்த ராணுவம், ‘ஜெயசிங்குறு’ என்ற ராணுவ தாக்குதலை மேற்கொண்டது. வவுனியாவி லிருந்து கிளிநொச்சி வரையுள்ள தரைவழிப் பாதையை விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்பதே, இந்தத் தாக்குதல் நோக்கம். ‘ஏ9’ பாதை வழியாக ராணுவம் தாக்குதலுக்கு வந்தபோது, விடுதலைப் புலிகள் எதிர்ப்பு தெரிவிக்காமல் உள்ளே அனுமதித்தனர். வழியிலுள்ள மாங்குளம் என்ற ஊரைக் கடந்து, கிளிநொச்சிக்கு ராணுவம் எதிர்ப்பே இன்றி நுழைந்து அங்கே முகாமிட்டது. ராணுவத்தின் மற்றொரு பிரிவு எதிர்ப்பே இன்றி மாங்குளம் வந்தது. உள்ளே நுழைய விட்டு ராணுவத்தினரை வெளியேற முடியாமல் சுற்றி வளைத்து, விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் ராணுவம் பலத்த உயிர்ச் சேதத்துடன் பின்வாங்கி ஓடியது. புலிகள் நடத்தி அத்தாக்குதலுக்கு ‘ஓயாத அலைகள்-2’ என்று பெயர்.
மீண்டும் கிளிநொச்சி புலிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1999 நவம்பரில் விடுதலைப்புலிகளின் ஓயாத அலைகள் - 3 தாக்குதல் தொடங்கியது. ஆணையிறவு புலிகள் வசமானது. விமானப்படை, தரைப்படை, கப்பல் படை என்று முப்படையினரும் முகாமிட் டிருந்தும், ஆனை யிரவை ராணுவத்தால் தக்கவைக்க முடியவில்லை.இந்தியாவின் ராணுவ உதவிகள், ராணுவ பயிற்சிகள், ராணுவ ரீதியான ஆலோசனைகளோடு ‘ராடார்’ கருவிகளைப் பொருத்தி, உளவுத் தகவல்களையும் சிங்கள ராணுவத்துக்கு வழங்கி வரும் நிலையில் சீனா, பாகி°தான், இந்தியாவின் ராணுவ உதவியோடு சிங்கள ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்துள்ளது.இந்திய ராணுவம் சென்றிருந்தபோது விடுதலைப்புலிகள் இடம் பெயர்ந்த முல்லைத் தீவில் மீண்டும் புலிகள் மக்களோடு இடம் பெயர்ந்துள்ளனர்.
கடலூரில் மாநாடுபோல் நடந்த கூட்டம்!
‘நெருப்பின் நடுவில் தமிழினம்’ என்கிற தலைப்பில் கூட்டம் கடலூரில் 28.12.08 ஞாயிறு மாலை 6 மணி யளவில் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத் தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் கு,.இராமகிருட்டிணன் தலைமை வகித்தார்.உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், இயக்குனர் மணிவண்ணன், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளருமான தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், பெரியார் திராவிடர் கழக புதுவை மாநிலத் தலைவர் லோகு. அய்யப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கடலூர் மாவட்ட கழகத் தலைவர் வெங்கடேசு நன்றி கூறினார்.
கூட்டம் தொடங்குவதற்கு முனபே அரங்கு முழுவதும் மக்கள் நிறைந்திருந்தனர். ஈழத் தமிழர் கண்ணீர் காட்சி குறுந்தகடு திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து கூட்டம் மிக எழுச்சியோடு நடைபெற்றது.கூட்டத்திற்கு சீர்காழியிலிருந்து 20-க்கும் மேற்பட்ட தோழர்கள் வேனில் வந்திருந்தனர். புதுவையிலிருந்து 25 தோழர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக வந்தனர். கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வடலூர் கலியமூர்த்தி, கடலூர் நகர மன்ற துணைத் தலைவர் தாமரைச்செல்வன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர்கள் திருமேனி, அறிவுடைநம்பி, கழகத் தோழர்கள் பொள்ளாச்சி பிரகாசு, விழுப்புரம் மாவட்ட தலைவர் நடராசன், சிற்பிராசன், மயிலாடுதுறை மகேசு, சீர்காழி பெரியார் செல்வம் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தலைமை செயற்குழு உறுப்பினர் கு. அழகிரி மிகச் சிறப்பாக செய்திருந்தார். கூட்டம் நடத்த தோழர் திருமால் பேருதவியாக இருந்தார். 50-க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் என்.ஆர். என்கிற என். இராமலிங்கம் இரவு உணவு அளித்தார்.
செய்தி : பொள்ளாச்சி பிரகாசு
இதன் பிறகும் இந்த அரசு இருக்கத்தான் வேண்டுமா...!
‘ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம்’ என்ற பெயரில், நிராயுத பாணிகளான அப்பாவித் தமிழர்களின் ரத்தத்தைத் தொடர்ந்து குடித்துக் கொண்டே இருக்கிறது இலங்கை ராணுவம். ‘ஒரு தமிழனைக் கொன்றால் நூறு சிங்கள ஓட்டு கிடைக்கும்’ என்பதே தங்கள் சூத்திரம் என இலங்கை அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இப்போது, ‘புலிகளின் கோட்டை எங்கள் கைவசம்’ என்ற கொக்கரிப்பையும் கேட்க முடிகிறது. கோட்டையைப் பிடிக்கும் அந்த முயற்சியில் அப்பாவித் தமிழர்கள் எத்தனை ஆயிரம் பேர் வேட்டையாடப்பட்டார்களோ!இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கப் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ராஜினாமா மிரட்டல், சர்வ கட்சிக் கூட்டம், டெல்லிப் பயணம் என்று தமிழகத் தலைவர்கள் எடுத்துக் கொண்ட எந்த முயற்சிக்குமே மத்திய அரசு கடைசி வரை செவி சாய்க்கவில்லை. நம் ராணுவ அதிகாரிகள் அங்கு சென்று பயிற்சி தரும் தகவலையும் மத்திய அரசு மறுக்கவில்லை.
‘மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்கிறோம்’ என்று கொடுத்த வாக்குறுதியைக்கூடத் தந்திர மாகத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறது டெல்லி.இதையெல்லாம் பார்க்கும்போது, ‘புலிகளை நாங்கள் முழுவதுமாக ஒடுக்கி விடுகிறோம். அதுவரை உங்கள் தேசத்து மக்களைத் திசை திருப்பும் வகையில் கண்ணாமூச்சி அரசியல் நடத்திக் காலத்தைக் கடத்துங்கள்’ என்று மத்திய அரசோடு எழுதப்படாத ‘புரிந்துணர்வு ஒப் பந்தம்’ ஒன்றைப் போட்டிருக்கிறதோ இலங்கை அரசு என்ற பலமான சந்தேகம் தான் எழுகிறது!நினைத்ததை எல்லாம் நிபந்தனைகளாக விதித்து, குறித்த நேரத்துக்குள் சாதித்துக் கொள்கிற தமிழக ஆளுங்கட்சி, இந்த விஷயத்தில் எள் முனையளவுகூட எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் வேதனையளிக்கும் நிதர்சனமான உண்மை!‘இதன் பிறகும் இந்த அரசு இருக்கத்தான் வேண்டுமோ?’ என்று பொதுக்கூட்ட மேடையில் முதல்வர் தழுதழுத்த குரலில் எழுப்பிய கேள்வி, தமிழ் மக்களின் காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது!
நன்றி: ‘ஆனந்த விகடன்’ தலையங்கம் 14.1.09
அமைச்சர் டி.ஆர்.பாலுவின் ஆணவப் பேச்சு
தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போகாமல் தமிழர்களை அவமதிப்பதை நியாயப் படுத்துகிறார். வெளிநாட்டுக்கு, “நினைத்தபோது போய் விட முடியுமா? கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து விட முடியுமா?” என்று காங்கிரசார் கூட பேசத் தயங்கும் வார்த்தைகளை தான்தோன்றித்தனமாக கூறி யிருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
நினைத்த போதெல்லாம் போய்விட முடியுமா? என்பது உண்மையானால், உடனடியாக இலங்கைக்குப் போய் போரை நிறுத்தச் சொல்ல வேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர், ஏன் டெல்லி சென்று வலியுறுத்தினார்? ஏன், அனைத்துக் கட்சியினர் தீர்மானம் போட்டார்கள்?டி.ஆர். பாலு, இந்த ஆணவமான பதிலால் அவருக்குப் ‘பதவி பிச்சைப்’ போட்டுள்ள தமிழக முதல்வர் கலைஞரைத்தான் அவமதித்திருக்கிறார். தலை இருக்கும்போது வால்கள் ஏன் ஆடுகின்றன?
டிராக்டர்கள் வேலை நிறுத்தத்தைச் சரியாகக் கையாளாமல் போனதற்காக குட்டு வாங்கி நிற்கும் டி.ஆர்.பாலு, பிரதமரிடம் நம்பிக்கையைப் பெறு வதற்காக இந்த துரோகக் குரலை ஒலிக்கிறாரா?
தீஸ்டா செதல்வாட் - விளக்கம்
வெறுப்பைத் திணிக்கும் மதவெறி கோட்பாடு

‘காம்பட் கம்யூனலிசம்’ ஆசிரியரும், மதவெறி சக்திகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் போராளியுமான தோழர் தீஸ்டா செதல்வாட் டிச.11 அன்று ‘மதச்சார்பற்றோர் மாமன்றம்’ சார்பில் சென்னையில் ஆற்றிய உரை.
நம் நாடு சுதந்திரம் அடைந்துவிட்ட நிலையில், ஒரு அறுபது ஆண்டுகள் அல்லது அதற்குக் கொஞ்சம் மேல் நாம் பின்னோக்கிப் பார்ப்போமேயானால், மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் உண்மையான சவால் என்ன என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோமேயானால், நம்முன் இருக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று, பெரிய அளவில் கட்ட விழ்த்துவிடப்பட்ட வன்முறைக்கு இலக்கானவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் ஏற்பட்ட தோல்வி தான். நம்முடைய நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு இருக்கும் இன்னொரு முக்கிய சவால் நம்முடைய எண்ண ஓட்டங்களும், நம்முடைய மதவெறி தத்துவங்களும் தான் என்று நான் நம்புகிறேன். அவை பெரும்பான்மை சமூகத்துக்கானதாக இருந்தாலும் சரி, சிறுபான்மை சமுதாயத்தினதாக இருந்தாலும் சரி. அது பிரிவினையையும், தனிமைப்படுத்துதலையும், தன் மதக் கொள்கைக்கு எதிரானவர்களை வெறுப்பதையும் தூண்டுகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த நாடு முழுவதும் இதனால் மிகவும் கசப்பான வேதனையை அனுபவித்துள்ளது. ஹிந்து வலதுசாரியினராலும் அவர்களுக்கு இணையான முஸ்லிம் எதிரிகளாலும் இந்த தேசம் பிரிவினையை சந்தித்தது. நாம் அதை 1947ல் எதிர்கொண்டோம். நீண்ட காலத்துக்கு முன்பு முக்கிய ஆங்கில செய்தித்தாள்களும், தொலைக்காட்சி சானல்களும் கொள்கை தத்துவம், சார்ந்த பிரச்சனைகளில் ஆர்வம் காட்டின.
நமது பத்திரிக்கையான கம்யூனலிசம் காம்பாட் இந்த வெறுப்பு சித்தாந்தத்தை துருவித் துருவி ஆராய்ந்தது. அந்த சித்தாந்தம்தான் காந்தியைக் கொன்றதா? அல்லது ஆப்கனில் பாமியான் புத்தர்களை அழித்த சித்தாந்தமா? நண்பர்களே, பாமியான் புத்தர் சிலைகளை அழிப்பதற்கு முன்னர், தாலிபான் தன் மக்கள் மீதே, தன் பெண்கள் மீதே வன்முறையை ஏவிவிட்டிருந்தது. எனவே, அடிப்படைவாதமும், சாதீயமும் அதன் மக்களுக்கே எதிரியாகும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஜாதியைப் புரிந்து கொள்ளாமல் வகுப்பு வாதத்தைப் பற்றிப் பேச முடியாது. திராவிட கலாச்சாரத்தின் இதயமாக இருக்கும் தமிழ்நாட்டின் மக்களுக்கு இந்த நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களைவிட இது மிக நன்றாகவே தெரியும். ஜாதியத்தின் பின்னால் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ள, ஒருங்கிணைக்கப்பட்ட ஹிந்து மத அமைப்பின் கொடூரமான தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் ஹிந்து மதத்தின் ஜாதீய அமைப்பு. அது நம் மக்களையே சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக தள்ளி வைத்தது. தான் மரியாதைக் குறைவாகக் கருதிய மிகக் கடுமையான தொழில்களை எல்லாம் அவர்கள் செய்யும்படிச் சொன்னது.எனவே ஜாதியும், ஜாதிக்கு அடிப்படையிலான வன்முறையும் ஒன்றேதான்.நமது பாராளுமன்றத்தைப் போலல்லாமல், நம் பஞ்சாயத் ராஜ் அமைப்பு பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு தருகிறது.
தலித் மற்றும் முஸ்லிம் பெண்கள், சமூகத்தின் மிகக்கீழ் நிலையில் இருந்த பெண்கள், கிராம அளவிலான அரசியலில் பங்கெடுக்கும் வாய்ப்பைக் கொடுத்தது. ஆனால் நமது மதச்சார்பற்ற ஜனநாயகம் எப்படிப்பட்டது?ஜனவரி 26 அன்று முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து அமைப்பைச் சேர்ந்த தலித் பெண் தேசியக் கொடியை ஏற்ற முயற்சித்தால், அவரை நிர்வாணப்படுத்தி அவர் மீது பாலியல் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது அவரது கிராமத்தில். அது ராஜஸ்தானாக இருந்தாலும் சரி, மகாராஷ்டிராவாக இருந் தாலும் சரி, மத்தியப் பிரதேசமாக இருந்தா லும் சரி, இதே கதை தான். ஏனெனில் ஒரு தலித் பெண்ணானவள் தேசம், தேசியம், தேச ப்பற்று இதிலெல்லாம் உரிமை கொண்டாடக் கூடாது என்று அது கருதுகிறது. சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டு களுக்கு மேலாகியும் உண்மையான, உயிர்த்துடிப்புள்ள ஜனநாயகத்தை அடைய நாம் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துகிறோம், நமது தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம். ஆனாலும் நமது சூழ்நிலை என்ன? முஸ்லிம் சமுதாய மக்கள் பொருளாதார, சமூக ரீதியாக உரிமைகள் மறுக்கப்படு கிறார்கள், கடந்த 55 ஆண்டுகளாக அவர்கள் நிலை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டு போகிறது என்பதை சச்சார் கமிட்டி அறிக்கை காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் 7000 குழந்தைகள் பசி, பட்டினியால் இந்தியாவில் இறந்துபோகின்றனர். பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றூம் குஜராத்தில் உள்ள வசதி படைத்த மேல்தட்டு மக்கள் பிரிவினரால் பெண் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரே, கருவறையிலேயே கொல்லப்படுகிறார்கள். மக்களில் பெரும்பான்மையானோருக்கு பொருளாதார, சமூக உரிமைகளை வழங்காத இந்த ஜனநாயகம் எந்த வகையானது? இந்த தருணத்தில் இதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.குற்றங்களுக்கு தண்டனை வழங்கி நீதியை நிலைக்கச் செய்யும் அமைப்பின் நீதித்துறை பற்றி இப்போது மறுபடியும் பார்ப்போம்.
நமது செஷன்ஸ் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், ஏன், உச்ச நீதிமன்றத்தில் கூட நிறைய வழக்குகள் இன்னும் தீர்ப்பு சொல்லப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. சராசரியாக, ஒரு சாதாரண குற்றவியல் வழக்கு முடிவுக்கு வர 15லிருந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. சொத்து தகராறு பற்றிய வழக்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு தலைமுறைகளுக்கு நடக்கின்றது. தாமதப்படுத்தப்பட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்று சொல்கிறோம். அப்படியானால், ஒவ்வொரு நாளும் நமது நீதி மன்றங்கள் குற்றம் சார்ந்த வழக்குகளில் நீதியை மறுத்துக்கொண்டே இருக்கின்றன.வரலாற்றில் கும்பல் கும்பலாக வன்முறைகள் நிகழ்த்தப்பட்ட சில முக்கியமான தேதிகளைப் பார்ப்போம். அத்தகைய வன்முறைகள் மக்களில் ஒரு பிரிவினர் மீது மட்டும் ஏன் கட்டவிழ்த்துவிடப்பட்டது? ஏனென்றால் அவர்கள் கூலிக்கு வேலை செய்யும் பிரிவினர், ஏனென்றால் அவர்கள் சிறுபான்மையினர், அவர்கள் தலித்துகள், வன்முறைக்கு இலக்கான அவர்களுக்கு நீதி வழங்கப்படவே இல்லை.1984ல், நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, டெல்லியில் 3006 பேர் கொல்லப் பட்டனர். நாடு முழுவதும் 7000 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் மூன்று பேர் மட்டும்தான் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டனர். கொல்லப்பட்ட சீக்கியர் ஒருவரின் விதவையான தர்பன் கௌர் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் எச்.கே.எல். பகத்தால் மிரட்டப்பட்டார். தனக்கு நீதி கிடைக்கும் என்று அவர் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார். 24 ஆண்டுகளுக்கு மேலாகியும்!புது டில்லியிலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் நடத்தப்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான போராட்டங்கள் முடிந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு போபால் விஷவாயுக்கசிவு துன்ப நிகழ்ச்சி நடந்தது.
சட்டத்துக்குப் புறம்பாக பன்னாட்டு கம்பெனியால் கசியவிடப்பட்ட மிதைல் விஷ வாயுவினால் 3000 ஊழியர்கள் இறந்தனர். இன்னும் உயிரோடு இருப்பவர் களும் விஷவாயுக் கசிவினால் ஏற்பட்ட கதிர்வீச்சுகளால் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இதுவரை எந்த இழப்பு ஈடும் தரப்பட வில்லை. பல அரசாங்கங்கள் மாறி மாறி வந்து போயின. இப்போது யூனியன் கார்பைடின் மறு அவதாரம் போன்ற இன்னொரு வகையான ரசாயனம் மகாராஷ்டிராவின் உள்ளே வர, விரிந்த கைகளுடன் அன்புடன் வரவேற்றுள்ளது. இதுதான் உலகமயமாக்கல், இதுதான் தாராளமயமாக்கல்.
ஜட்ஜர், திருநெல்வேலி போன்ற பகுதிகள் தலித்துகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். குற்றவாளிகள் எவ்வளவு பேர் பிடிபட்டுள்ளனர்? எவ்வளவு விழுக்காடு குற்றவாளிகள் கண்டுபிடித்து தண்டிக்கப் பட்டுள்ளனர்?
(தொடரும்)
ஏன்? ஏன்? ஏன்?
அன்றைக்குத் தமிழர்கள், ‘கங்கை கொண்டான்’, ‘கடாரம் வென்றான்’ என்பது மட்டும் பழங்கதையாக வில்லை. இரு மாதங் களுக்கு முந்தைய நம் ஆவேச மும், கொந்தளிப்பும், சவாலும்கூட ‘பழங்கதை’ ஆகிவிட்டதா?தமிழகத்திலும் இலங்கைப் பிரச்னைக்காக இன உணர்வை வெளிப்படுத்தி உண்ணாவிரதம் இருந் தார்கள். சட்டமன்றத்தில் மத்திய அரசுக்குக் ‘கெடு’ விதித்தார்கள். இன்னும் நான்கு மாதங்களுக்குள் நிறைவடையப் போகிற நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறக்கப் போவதாக வசனம் பேசினார்கள். நிதி திரட்டினார்கள். டெல்லிக்குச் ‘சுற்றுலா’ போய் வந்தார்கள். உணர்வு வயப்பட்டுப் பேசியவர் களைத் தூக்கிச் சிறையில்தள்ளினார்கள்.இன உணர்வைக் காப்பதாகச் சொல்லி கவிதையும் எழுதலாம். கூட்டணி தர்மம் அதைவிட மேலோங்கித் ‘தண்டனை’யும் அளிக்கலாம்.
இன உணர்வுக்கு வால்; கூட்டணி உறவுக்குத் தலை.இலங்கை ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்து விட்டதாக அறிவிக்கிறது. முல்லைத் தீவை நோக்கி முன் னேறிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான தமிழர்கள், ஒண்டியிருந்த கொஞ்சம் நிழலையும் இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரபாகரனைப் பிடிக்கும் முயற்சியில் நடக்கும் இந்த இனக் கொடூரத்தை விலகி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.இலங்கை பற்றி எரியும்போது இங்குள்ள கட்சிகள் திருமங்கலத்தில தங்களுக்குள் மோதி துணை ராணுவத்தை வரவழைக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கின்றன. புலி களுக்கு ஆதரவுக்குரல் கொடுப்பது என்பதுவேறு; இலங்கைத் தமிழர் களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது என்பது வேறு.இந்த இரண்டையும் சேர்த்துக் குழப்பி, ஈழத் தமிழர் களின் பிரச்சினையைப் பார்க்க மறுக்கிற எதிர்நிலையில் காங்கிரசுக்கு இங்குள்ள கட்சிகள் எந்தவிதத்திலும் சளைத் தவை அல்ல. இல்லை யென்றால் இவர்களின் மௌனத்திற் கும் செயலற்ற தன்மைக்கும், இயலாமைக்கும் என்ன அர்த்தம்?
நன்றி : ‘குமுதம்’ தலையங்கம் 14.1.2009
சிறை வைக்கப்பட்ட கொளத்தூர் தோழர்கள்
22.12.08 திங்கள் மாலை 5 மணியளவில் கொளத்தூர் பேருந்து நிலையத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான், த.தே.பொ.க. பொதுச்செயலாளர் பெ.மணியரசன் மற்றும் கைதைக் கண்டித்து காவல்துறையின் தடையை மீறி மாவட்ட தலைவர் மார்ட்டீன் தலைமையில், மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் ஆகியோர் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழின விரோதி கே.வி.தங்கபாலு, ஈ.வெ.கி.எஸ். இளங்கோவனின் உருவ பொம்மையை தீயிட்டு எரிக்கப்பட்டது.
தோழர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பெண்கள், மாணவர்கள், ஆதரவாளர்கள் தவிர கழகத் தோழர்கள் 55 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தோழர்களை மண்டபத்திலிருந்து அழைத்து செல்லும்போது தமிழின உணர்வாளர்கள் முழக்கமிட்டு, பட்டாசு வெடித்து பறையடித்து உற்சாகமுடன் வழியனுப்பி வைத்தனர். இந்நிகழ்வு கொளத் தூர் மக்களிடையே பெரும் பரபரப்பையும், வரவேற்பையும் ஏற்படுத்தியது.கைது செய்யப்பட்ட தோழர்கள் 25.12.08 அன்று பிணையில் விடுதலை செய்யப் பட்டனர்.
கைது செய்யப்பட்ட தோழர்கள்: மார்ட்டீன், சக்திவேல், டைகர் பாலன், சூரியகுமார், இளஞ் செழியன், விசயகுமார், இளவரசன், சம்பத் குமார், தர்மலிங்கம், அருள்செல்வம், பெ.சக்திவேல், பிரவின் குமார், கணேசன், ஆனந்தன், இரா.முத்து குமார், இரா.ரவிச்சந்திரன், குமரப்பா, சுரேசுகுமார், தேவராசு, முத்துராசு, பாஸ்கர், செல்வம், நல்ல தம்பி, இராசேந்திரன், சேகர், மந்திரி, குமரேசன், சின்னண்ணன், சக்திகுமார், விசுவநாதன், மூர்த்தி, குமார், சந்திரசேகர், சேட்டுகுமார், பூபதி, கண்ணன், ராமமூர்த்தி, சென்னியப்பன், சுரேசு, இராசன், முனுசாமி, ஆட்டோ செல்வம், முத்துசாமி, நாகராசன், கோவிந்தராசு, பூசாரி (எ) பெரியசாமி, சுப்பிரமணி, ரவி, மோகன்ராசு, வெள்ளையன், குமாரசாமி, எழிலன், குமார், துரை. சுந்தரம், மாது.

‘குடிஅரசு’ ‘விடுதலை’யை தேடுகிறார்களாம்!
இந்திய வரலாற்றில் பார்ப்பனியத்துக்கு எதிராக முதல் புரட்சியைத் தொடங்கியவர் புத்தர். பகுத்தறிவு பொருள் முதல்வாதக் கருத்துகளை முன் வைத்த புத்தத்தை கருத்து முதல்வாதத்தின் பக்கம் திருப்பிடும் பார்ப்பன சதிகள் நடந்தன. புத்தருக்குப் பிறகு ஹீனயான பவுத்தம், மகாயன பவுத்தம் என்று புத்த மார்க்கம் இரு பிரிவுகளாயிற்று.
நாகர்ஜுனன் எனும் பார்ப்பான், மகாயான பவுத்தப் பிரிவைப் பார்ப்பனிய கோட்பாடுகளுக்கு இசைந்ததாக மாற்றி அமைத்துவிட்டான். புத்தர் உருவாக்கிய சமூகப் புரட்சி தடம் புரண்டது.வேதங்களை மறுத்த கலகக் குரல்கள் பலவும் பார்ப்பனியத்தால் பல்வேறு சூழ்ச்சிகளால் வீழ்த்தப்பட்டதை வரலாறுகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
நீலகேசி என்ற சமண காப்பியத்தில் வரும் நீலகேசி என்ற பெண் வேதம் சுயம்புவாகத் தோன்றியது என்ற பார்ப்பன கருத்தியலை மறுத்தார். வேதத்தையும் யாகங்களையும் கடுமையாக சாடும் வாதங்கள் நீலகேசியில் இடம் பெற்றுள்ளன. இப்படி பார்ப்பனர்களை சாடும் வாதங்கள் அடங்கிய வாத சருக்கத்தில் பல செய்யுள்கள் காணாமலே போய்விட்டன.வேத, கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களின் இலக்கியங்களை எல்லாம் பார்ப்பனர்கள் திட்டமிட்டு அழித்தார்கள்.
‘லோகாயதம்’ என்ற தத்துவம், கடவுள் மறுப்பை பேசியது. பார்ப்பனர்களை எதிர்த்தது. லோகாயதவாதிகள் பல நூல்களை எழுதினார்கள். ஆனால், அவைகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. இந்திய தத்துவங்கள் பற்றிய பல ஆய்வு நூல்களை எழுதிய தேவிப் பிரசாத் சட்டோபாத்யாய இவ்வாறு குறிப்பிடுகிறார்:“லோகாயதர்களின் உன்னதப் படைப்பிலயக்கியங்களின் மூலப் படிகள் மீட்கவே முடியாதவாறு அழிக்கப்பட்டு விட்டன. துண்டு துண்டாக வெட்டப்பட்ட சில வரிகள் காணக் கிடைக்கின்றன. அவைகூட லோகாயத எதிர்ப்பாளர்களின் நூல்களில் தான் உயிர்வாழ்கின்றன. அதாவது லோகாயதக் கோட்பாடுகளை மறுத்துரைக்கவும், இகழ்ந்துரைக்கவும் பார்ப்பன நூலாசிரியர்கள் லோகாய வரிகளை மேற்கோள்களாகப் பயன்படுத்தியுள்ள இடங்களில் மட்டும் உயிர் வாழ்கின்றன” - என்று குறிப்பிடுகிறார். (‘லோகாயதா’ நூல்).
பார்ப்பனர்களுக்கு தானம் வழங்கிய நிலங்களையெல்லாம் பறிமுதல் செய்த களப்பிரர்கள் ஆட்சி பற்றிய வரலாற்றுக் குறிப்புகளே இல்லாமல் அழித்துவிட்டு, ‘களப்பிரர் காலம் இருண்ட காலம்’ என்று வரலாற்றை எழுதியவர்கள் பார்ப்பனர்கள்தான். இப்படி வேத பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களும், சிந்தனைகளும், தலைவர்களும் வரலாற்றில் சுவடு இல்லாமல் அழித்தொழிப்புக்கு உள்ளான அவலங்கள் வரலாற்றில் ஏராளம் உண்டு. இந்த வேத பார்ப்பனக் கொடுமைகளை எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மகத்தான பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தை நடத்திய பெரியார் சிந்தனைகளும் இதே விபத்துகளை சந்திக்கிறது என்பது மிகப் பெரும் அவலமாகும்!
பெரியாரும், அவருடைய இயக்கமும் கட்டுப்பாடாக பார்ப்பன ஊடகங்களால் இருட்டடிக்கப்பட்டே வந்த நிலையில்அந்த இயக்கத்தின் எதிர்நீச்சல் பயணத்தை உள்ளது உள்ளவாறே அறிவதற்கான ஒரே ஆதாரமாகத் திகழ்பவை பெரியர் நடத்திய ஏடுகள்தான். அவைகள் மறைந்து விட்டால், அக்கால கட்டங்களில் பெரியார் இயக்கத்தின் வரலாறுகளும் இருண்டு போய் விடுகிறது. பயணத்தின் பாதை தடைபட்டு விடுகிறது. பெரியாரின் எழுத்து பேச்சுகளின் வரலாற்றுப் பதிவுகளை பெரியார் இயக்கம் நடத்துவதாகக் கூறுவோரே, தொலைக்கலாமா? அதைக் கருவூலமாக கண்காணித்துப் பேண வேண்டியவர்களே, அவற்றை எக்கேடு கெட்டுப் போனால் என்ன, என்று அலட்சியப்படுத்தலாமா?
பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரத்தின் நிறுவனர் - திராவிடர் கழகத் தலைவர் என்ற பதவிப் பொறுப்புகளோடு உலாவரும் கி.வீரமணி, கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி ‘விடுதலை’யில் வெளியிட்ட ஒரு அறிவிப்பு இதற்கு சான்றாக விளங்குகிறது!அதை அப்படியே வெளியிடுகிறோம்:
1935, 1936 ஆம் ஆண்டுகளுக்கான ‘விடுதலை’ நாளேடுகள், தங்களிடம் முழுமையாக இல்லை என்கிறார். இதைத் தவிர 12 ஆண்டுகளுக்கான ‘விடுதலை’ நாளேடுகள் பாதிக்கு மேல் அவர்களிடம் இல்லை. இதைவிடக் கொடுமை - 1989, 1990 ஆம் ஆண்டுகளின் ‘விடுதலை’ நாளேடுகள்கூட இவர்களிடம் முழுமை யாக இல்லை என்பதாகும். ‘குடி அரசு’ வார பத்திரிகையோ, 8 ஆண்டுகளுக்கான பத்திரிகை இவர்களிடம் ஒன்றுகூட இல்லை என்பதாகும். இது ஏதோ, இல்லாத பத்திரிகைகள் என்று பார்ப்பது மிகவும் குறுகிய பார்வையாகும். முழுமை யான வரலாறுகளைக் கூறும் ஆவணங் களே இல்லாமல் போவதால் வரலாறு களும் இருட்டுக்குள் தள்ளப்பட்டு விடுகிறது;
இது வரலாற்றுத் துரோகம்!பெரியார் கருத்துக் கருவூலங்களைப் பாதுகாப்பதைவிட பெரியார் இயக்கத் துக்கு முதன்மையான பணி வேறு இருக்க முடியுமா? பெரியார் கொள்கைகளை பரப்புவதுகூட இருக்கட்டும்; அவர் சேமித்து வைத்த அறிவுச் செல்வங்களை பாதுகாக்கவாவது வேண்டாமா? பெரி யாரின் கட்டிடங்களையும், நிலங்களை யும் சொத்க்களையும் பத்திரப்படுத்தினால் போதும். இந்தக் “காகிதங்கள்”, சந்தையில் விலை போகாது என்று கருதி விட்டார்கள் போலும்!இந்த வரலாற்று ஆவணங்கள் தங்களிடம் இல்லை என்பதுகூட - எப்போது இவர்களுக்கு தெரிகிறது?
பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ தொகுப்பு வெளியீட்டு முயற்சிகளுக்குப் பிறகுதான். பெரியார் திராவிடர் கழக செயல்பாட்டை முடக்கத் துடிக்கும் போதுதான் இவ்வளவு பெரியார் நூல்கள் தங்களிடம் இல்லை என்பதே இவர்களுக்குத் தெரிகிறது. பெரியார் திராவிடர் கழகம் இந்த முயற்சியில் இறங்காவிட்டால், இந்த வரலாற்று ஆவணங்களைத் தேடும் முயற்சிகளில் இறங்கியிருக்கவே மாட்டார்கள். பார்ப்பன வேத எதிர்ப்பு வரலாற்றுச் சான்றுகளை அழித்தவர்கள் பார்ப்பனர்கள் தான்! ஆனால், பெரியார் வரலாற்று ஆவணங்களைத் தொலைத்தவர்கள் அது பற்றி இத்தனை ஆண்டுகளாக கிஞ்சித்தும் கவலைப்படாதவர்கள்.
பெரியார் இயக்கத்தின் பெயரைச் சொல்கிறவர்களாகவே இருக்கிறார்கள் என்பது வரலாற்று துரோகம் அல்லவா?பெரியார் திராவிடர் கழகத்தைப் பார்த்து, ‘திரிபுவாதிகள்’, ‘புரட்டர்கள்’, ‘திருடர்கள்’, ‘திம்மன்கள்’ என்று தரம் குறைந்த வார்த்தைகளைத் தேடித் தேடி எழுதும் கி.வீரமணியை கேட்கிறோம்:இப்படி ஒரு அறிக்கை வெளியிடும் நிலைக்கு நீங்கள் வந்திருப்பதே, அவமானம் அல்லவா? பெரியாருக்கு இழைத்த துரோகம் அல்லவா?‘நான் என்ன செய்வது; எனக்கு முன்னால் இருந்தவர்கள் பாதுகாக்கவில்லை’ என்று சமாதானம் சொல்வீர்களேயானால், இதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் இறங்குவதற்கு இவ்வளவு காலம் தேவையா என்ற கேள்விக்கு என்ன சமாதானம் கூறப் போகிறீர்கள்? அதுவும், 1989, 90 ஆம் ஆண்டு ‘விடுதலை’ ஏடுகள் கூட காணாமல் போனதற்கான பழியை எவர் மீது போடப் போகிறீர்கள்? பதில் வருமா?
(புரட்டுகள் உடைப்பு தொடரும்)
இனி எவரும் வெளியிடலாம்
காந்தி நூல்களின் பதிப்புரிமை முடிவுக்கு வந்தது
காந்தியின் கடிதங்கள், நூல்கள், கட்டுரைகளை வெளியிடும் உரிமை ‘நவஜீவன் டிர°ட்’ என்ற அறக் கட்டளையிடம் தான் இதுவரை இருந்து வந்தது. 1919 ஆம் ஆண்டி லிருந்து இந்த அறக்கட்டளைதான் இதற்கான உரிமையை தன்னிடம் வைத் திருந்தது. இதற்கான பதிப்புரிமையை சட்டப்பூர்வமாக, இந்நிறுவனம் தன்னிடம் வைத்திருந்தது. காந்தியின் நூல்களை வெளியிட விரும்பிய நிறுவனங்கள் - இந்த அறக் கட்டளையிடம் அனுமதி பெற்று, நூல்களை வெளியிட்டு, அதற்கான ‘ராயல்டி’யை இந்நிறுனத்துக்கு வழங்கி வந்தன.
1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டம் 22வது பிரிவின்படி, காந்தி புத்தகங்கள் மீதான உரிமை மீண்டும் இந்த அறக்கட்டளைக்கே தொடர்ந்து கிடைத்தது. கடந்த ஜனவரி 2009 முதல் தேதியோடு பதிப்புரிமை பெற்று 60 ஆண்டுகள் முடிந்துவிட்டன. பதிப் பாளர்கள் இறந்து 60 ஆண்டுகளாகி விட்டால் பதிப்புரிமை தானாகவே சட்டப்படி முடிவுக்கு வந்துவிடும் என்பதால் கடந்த ஜனவரி முதல் ‘நவஜீவன் டிரஸ்ட்’ பதிப்புரிமையை இழந்துவிட்டது. இனி, இந் நிறுவனத்தின் அனுமதியின்றியே காந்தி நூல்களை எவரும் வெளியிடலாம். டிரஸ்ட் நிர்வாகிகள் இது பற்றிக் கூறுகையில்,
“காந்தி நூல்களை இனி யார் வேண்டுமானாலும் வெளியிட லாம்; நாங்களும் மலிவு விலையில் வெளியிட்டு பரப்புவோம்” என்று கூறியுள்ளனர்.காந்தி நூல்கள் பரவ வேண்டும் என் பதில் கவலையுள்ள இந்த அறக் கட் டளை நிர்வாகிகளைப் பாராட்டலாம்.
கழகத்தினருக்கும், வாசகர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள். - ஆசிரியர்
கருத்துரிமையைப் பறிக்கும் தமிழக அரசின் சிறையில் கொளத்தூர்மணி, மணியரசன், சீமான் 27 ஆவது நாள் (ஜன.15 வரை)