கொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் கைதுக்குஇன உணர்வாளர்கள் கொதிப்பு!

கொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் கைதுக்குஇன உணர்வாளர்கள் கொதிப்பு !
கருத்துரிமையை பறிக்கும் - காங்கிரசாரின் கூக்குரக்கு தி.மு.க. ஆட்சி துணை போவது தமிழிண உணர் வாளர்களை கொதிப்படையச் செய்துள்ளது. காங்கிரசார் வற்புறுத்தலுக்கு தமிழக அரசு பணிந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ. மணியரசன் ஆகியோரை கைது செய்துள்ளது.கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி ஈரோட்டில் தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சி பெரியார் திராவிடர் கழக ஆதரவோடு ஏற்பாடு செய்திருந்த ஈழத் தமிழர் ஆதரவுப் பொதுக் கூட்டத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான், பெ. மணியரசன் ஆகியோர் கலந்து கொண்டு, இந்திய அரசின் துரோகத்தையும், சிங்கள அரசின் இனப் படுகொலையையும் கண்டித்துப் பேசினர். எப்போதுமே அரசு அதிகாரத்தை மட்டும் சார்ந்து, மக்கள் ஆதரவின்றி செயல்பட்டு வரும் தமிழக காங்கிரசார், வழக்கம் போல் தி.மு.க ஆட்சியை மிரட்டி அறிக்கைகள் வெளி யிட்டன. குறிப்பாக தமிழக காங்கிர தலைவர் தங்கபாலு, தேசப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். அறிக்கை வெளிவந்தவுடனே தி.மு.க. அரசு செயல்படத் தொடங்கியது.
தங்கபாலு அறிக்கை வெளிவந்தவுடன், தமிழக காங்கிரசார் சிலர், இயக்குனர் சீமான் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காருக்கு தீ வைத்துவிட்டு, அருகே காங்கிர° குழுக்கள் ஒன்றுக்கு தலைவரான ஈ.வெ.கி.எ°. இளங்கோவன் பிறந்த நாள் சுவரொட்டிகளை ஒட்டிச் சென்றனர். காங்கிரசார் இப்படி வன்முறையைக் கையில் எடுத்த நிலையில் தமிழகம் முழுதும் கொந்தளிப்பு உருவானது. கார் எரிப்பு செய்தி கிடைத்தவுடனேயே கோவையில் பொதுச் செயலாளர் கோவை ராமகிருட்டிணன் தலைமையில் கழகத் தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே வத்தலகுண்டுக்கு அருகே ஜி.கல்லுப்பட்டி எனும் ஊரில் படப்பிடிப்பிலிருந்த இயக்குனர் சீமானை காவல்துறை கைது செய்தது. தொடர்ந்து மேட்டூரில் தனது இல்லத்தில் இருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியையும், அடுத்த நாள் சென்னையிலிருந்த பெ.மணியரசனையும் காவல்துறை கைது செய்தது. ஈரோடு கருங்கல் பாளையம் காவல் நிலையத்தின் சிறப்பு போலீ°படை இக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்திய தண்டனை சட்டம் 13-1(பி) மற்றும் 505 வது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
ஈரோடு கூட்டத்தில் இயக்குனர் சீமான் ராஜீவ் காந்திக்கு எதிராக ஆத்திரமூட்டும் உரை நிகழ்த்தியதாக மொடக்குறிச்சி காங்கிர° சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனிச்சாமி காவல் நிலையத்தில் தந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அரசின் சிறப்புப் புலனாய்வுக்குழு தந்த அறிக்கையின் அடிப்படையில் சட்ட நிபுணர்களின் கருத்தைக் கேட்டு, அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால், வழக்கு தொடரக்கூடிய முறையில் எந்த உரையும், அக்கூட்டத்தில் நிகழ்த்தப்படவில்லை என்பது மாநாடுபோல் பல்லாயிரக் கணக்கில் திரண்டு நின்ற பொது மக்களுக்கும், சட்டம் படித்த எவருக்கும் நன்றாகவே புரியும்.மக்கள் மன்றத்தில் வாதங்களை எதிர்கொள்ள முடியாத காங்கிரசார் சட்டத்தின் உதவியோடு தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்பதே பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. கைதான இருவரையும் ஈரோடு முதலாவது நீதிமன்ற நீதிபதி பி.அசோகன், 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இயக்குனர் சீமான் கடந்த இரண்டு மாதத்துக்குள் இரண்டா வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில்...சென்னையில் அடுத்த நாளே டிசம்பர் 20 அன்று தமிழ் நாடு காங்கிர° கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது. இராயப்பேட்டை மருத்துவமனை அருகே கழகத் தோழர்கள் ஏராளமாகத் திரண்டு, சத்தியமூர்த்தி பவன் நோக்கி புறப்பட்டபோது, காவல்துறை கழகத் தோழர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தது. துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டதோழர்களை காவல்துறை கெடுபிடி செய்து வாகனங்களில் ஏற்றியது. செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது அதற்கு கருத்து தெரிவிக்கக்கூட காவல்துறை அனுமதிக்க மறுத்தது.
இதற்கிடையே தங்கபாலு, இளங்கோவன் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. அப்போது எதிரே உள்ள கடைகளில் நின்றிருந்த சத்தியமூர்த்தி பவனைச் சார்ந்த காங்கிரசார் சிலர், கழகத்தினர் மீது கற்களை வீசி தாக்கத் தொடங் கினர். கழகத் தோழர்களை வாகனங்களில் கட்டாயப்படுத்தி ஏற்றிய காவல்துறை இராயப்பேட்டையிலுள்ள சமூகநலக் கூடத்திற்கு கொண்டு வந்து தங்க வைத்தது. வழக்கறிஞர்கள் துரைசாமி, இளங்கோ ஆகியோர் தோழர்களை சந்திக்க வந்தனர். வழக்கறிஞர் துரைசாமி போராட்டத்தைப் பாராட்டிப் பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சாரநாத், மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சார்ந்த வெங்கடேசன், இளைஞர் இயக்க சார்பில் மருத்துவர் ந. எழிலன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை அன்பு தென்னரசு, மு. மாறன், சிந்தனையாளர் பேரவை ஆயுள் காப்பிட்டுக் கழக கமலக் கண்ணன், தமிழர்முழக்கம் சாகுல் அமீது ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஒரு மணி நேரம் ஈழப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு, ராஜீவ் செய்த துரோகம், எம்.ஜி.ஆர். செய்த உதவிகளை விளக்கிப் பேசினார். தொடர்ந்து துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், காங்கிரசின் துரோக வரலாற்றை விளக்கிப் பேசினார். இதற்கிடையே சத்திய மூர்த்திபவன் அலுவலகம் தாக்கப் பட்டது என்ற செய்தி தோழர்களுக்கு கிடைத்தது. 6 மணியளவில் காவல்துறை கழகத் தோழர்களை எழும்பூர் நீதிமன்றம் கொண்டு சென்று நேர் நிறுத்தியது. நீதி மன்றத்துக்கு வழக்கறிஞர் இளங்கோ, குமாரதேவன் ஆகி யோர் வந்திருந்தனர். இரவு 7 மணியளவில் 62 தோழர்களையும் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அங்கிருந்து புழல் சிறைக்குக் கொண்டு போகப்பட்டு, கழகப் பொறுப்பாளர்கள் ஆனூர் செகதீசன், விடுதலை இராசேந்திரன், எ.கேசவன், இரா. உமாபதி உள்ளிட்ட 62 தோழர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். சட்ட விரோதமாகக் கூடுதல், பொது இடங்களில் இடையூறு விளைவித்தல், கொடும்பாவி எரித்தல், ஒன்று கூடி சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் (தண்டனை சட்டப் பிரிவுகள் 147, 143, 188, 41(ஏ), 7(1)(ஏ) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தோழர்களுக்கான பிணை மனுவை அன்றைய தினமே வழக்கறிஞர் இளங்கோ தாக்கல் செய்தார். பிணை மனு விசாரணை டிசம்பர் 22 திங்கள் கிழமை பிற்பகல் 3 மணியளவில் எழும்பூர் 13வது பெருநகர் நீதிமன்ற நீதிபதி பாக்யவதி முன் விசாரணைக்கு வந்தது. கழகத்தினருக்காக மூத்த வழக்கறிஞர் செ. துரைசாமி அவர்களே பெருநகர நீதிமன்றம் வந்து வாதாடியது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்க ஆணையிட்டது.
நீதிமன்றம் பிணை வழங்கியவுடன், வழக்கறிஞர்கள் செ.துரைசாமி, இளங்கோ, ராஜா ஆகியோர், உடனே புழல் சிறைச்சாலைக்கு விரைந்து மாலை 5 மணியளவில் கழகத்தினரை சந்தித்து, பிணை கிடைத்த விவரத்தைத் தெரிவித்தனர்.தோழர்கள் பிணை விடுதலைக்கான உறுதியளிப்பு ஆவணங்களைத் திரட்டி, தயாராக வைத்திருந்த கழகச் செயல்வீரர்கள் பம்பரமாகச் சுழன்று பணியாற்றினர். பிணை ஆணையைப் பெற்று விரைந்து சிறைச்சாலைக்கு அனுப்பினர். இரவு 8 மணியளவில் தோழர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான தோழர்களுக்கு இராயப்பேட்டை மார்க்கெட் பகுதியிலிருந்து மேளதாளங் களுடன் எழுச்சி வரவேற்பு தரப்பட்டது. ஏராளமான தோழர்களும், பொது மக்களும் திரண்டிருந்தனர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், இராயப்பேட்டை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். தோழர்கள் அனைவருக்கும் தோழர்கள் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தனர். இராயப்பேட்டை வி.எம்.சாலைப் பகுதி முழுவதுமே எழுச்சி கோலம் பூண்டது.தர்மபுரியில்20.12.2008 சனி காலை 11 மணிக்கு தர்மபுரியில் ராசகோபால் பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழக மாவட்ட செயலாளர் முனி. ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் கொ.வேடியப்பன், பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர் வணங்காமுடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்ஜித், தமிழ்மான மீட்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வி.எ°.சம்பத், ஒன்றிய செயலாளர் வெல்டிங் சின்னசாமி, தகடூர் செல்வம், வஜ்ஜிரவேல், பெரியார் தி.க. ஒன்றிய அமைப்பாளர் செந்தில்குமார், இளங்கோவன், மா.பரமசிவம், ஆ. அம்பிகாவதி, ஆ. நெடுமான் அஞ்சி உட்பட 30க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறையில்
19.12.08 அன்று மாலை 4 மணியளவில் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாக சென்று, இளங்கோவன், தங்கபாலுக்கு எதிரான முழக்கங்களையும் கழகத் தலைவர்கொளத்தூர் மணி, இயக்குநர் சீமானையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் கழகத் தோழர்கள் முழக்கமிட்டு வந்து ஈ.வெ.கி. எ°. இளங்கோவன், தங்கபாலு உருவ பொம்மைகளை எரித்தனர்.நகரத் துணைச் செயலாளர் முகிலன் தலைமையில், நகரத் தலைவர் நாஞ்சில் சங்கர், நகரச் செயலாளர் ஏகலைவன் அன்பு, மாவட்ட அமைப்பாளர் நா.இளையராஜா, மாவட்ட செயலாளர் தெ.மகேசு, ரமேசு, குத்தாலம், ஒன்றிய செயலாளர் இயற்கை, வா.வினோத், வேலங்குடி இராஜா, ஈழம் சுந்தா, முத்தழகன் உள்ளிட்ட 25 தோழர்களை காவல்துறை கைது செய்தது. இரவு 7 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.அதற்கு முன்பாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, 25.11.08 அன்று மறியல் நடந்தது. காலை 11 மணியளவில் அனைத்து கட்சிகளின் சார்பில் மத்திய தலைமை தபால் நிலையம் முன்பாக நடந்த மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனி°ட் கட்சியின் வட்டச் செயலாளர் இர. இடும்பையன் தலைமை தாங்கினார். கொட்டும் மழையிலும் நடைபெற்ற போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர்கள் கலந்து கொண்டனர்.அனைத்து கட்சியைச் சார்ந்த 51 தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். கலந்து கொண்ட கழகத் தோழர்கள், மாவட்ட செயலாள்h தெ.மகேசு, மாவட்ட அமைப்பாளர் நா. இளையராஜா, நகரத் தலைவர் நாஞ்சில் சங்கர், நகரச் செயலாளர் அன்பு, நகரத் துணைத் தலைவர் இராஜராஜன், முகிலன், வா.வினோத், ம.ஸ்ரீதர், இயற்கை, கார்த்திக், இராஜா, வீ.முரளி, உ.ஜீவா, முத்தழகன், இரமேசு.
(சிறைப்படுத்தப்பட்ட 62 தோழர்களின் பட்டியல் அடுத்த வாரம்)
தேவை, உறுதி ஒன்றுதான்!
நான் ஏன் கக்கூசு எடுக்க வேண்டும்;
நீ ஏன் மலசல உபாதைக் குப் போக வேண்டும்.
நீ ஏன் அதன் பயனை அடைய வேண்டும் என்று நீங்கள் துணிந்து கேட்க வேண்டும். இதை அனுமதிக்கும் கடவுளை வெறுக்க வேண்டும்.உடைத்து ரோட்டுக்குச் சல்லி போட வேண்டும். இந்த உரிமையை மறுக்கும் சட்டத்தையும், சாத்திரத்தையும் நெருப்பி லிட்டுப் பொசுக்க வேண்டும். இந்த உரிமையை மறுக்கும் மதத்தை மடியச் செய்ய வேண்டும். மனத்தில் நீங்கள் உறுதி கொள்ள வேண்டும். இதைச் சாதிக்க மன உறுதியின்றேல் காரியம் கை கூடாது. உறுதி இருந்தாலோ அது உங்களை வெற்றிப் பாதை யில் தள்ளிக் கொண்டு போகும். உறுதி உள்ளவனைச் சாமியோ, பூதமோ கூட பய முறுத்தாது. அதற்கு அதிகாரமும் இல்லை. உன்னுடைய அறிவின் முன்னேற் றத்தைத் தடுப்பதற்கு.- பெரியார்
தலையங்கம்
தமிழக காங்கிரசின் அடாவடி
ஈழத் தமிழர்களின் பாரம்பர்யப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள இந்திய ராணுவம், தமது சிங்கள ஒற்றை ஆட்சியின் கீழ் சரணடைய வேண்டும் என்பதற்காக தமிழர்கள் மீது ராணுவப் படையெடுப்பை நடத்தி வருகிறது. தமிழ் மக்கள் வாழும் பகுதிக்கு சொந்தம் கொண்டாடும் சிங்களப் பேரினவாத அரசு அந்த உரிமையை துப்பாக்கி முனையில் பறிக்கத் துடிக்கிறது. இதைக் கண்டித்தால் சிங்களர் ஆத்திரமடைவதில் நியாயம் உண்டு. தமிழக காங்கிரசார் ஏன் ஆத்திரமடைய வேண்டும்?முதல்வர் கலைஞர் தலைமையில் அனைத்துக் கட்சி தூதுக் குழுவில் இடம் பெற்று, பிரதமரிடம் போர் நிறுத்தம் செய்ய இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்று கோரியது, தமிழக காங்கிரசாரும் தானே! இலங்கை அதிபர் ராஜபக்சே, போர் நிறுத்தம் இல்லை, தாக்குதல் தொடரும் என்று அறிவித்து விட்டார். மன்மோகன்சிங் ஆட்சியோ மவுனம் சாதிக்கிறது. ஏன் இந்த மவுனம் என்று, தட்டிக் கேட்க சொந்தக் கட்சிக்காரர்களான காங்கிரசாருக்கு கூடுதல் உரிமை உண்டு. அப்படி கேட்கவும் இல்லை. அதுபற்றி வாய் திறக்கவும் இல்லை. அவர்கள் கேட்க மறுப்பதை தமிழ்நாட்டில் இனஉணர்வாளர்கள் கேட்டால், காங்கிரசார் எகிறிக் குதிக்கிறார்கள். விடுதலைப்புலிகள் பற்றியோ, ராஜீவ் காந்தி பற்றியோ பேசவே கூடாது என்று சட்டத்தால் தடைபோட்டு கருத்துரிமையை பறிக்க துடிக்கிறார்கள்.மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போய் ராஜபக்சேயிடம் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்பதும், அனைத்துக் கட்சியினர் விடுத்த கோரிக்கைதான்.
பிரணாப் முகர்ஜி போக மறுத்துவிட்டார். இதை தமிழக காங்கிரசார் தட்டிக் கேட்டார்களா? ஏன் வாயை மூடிக் கொண்டார்கள்?கொளத்தூர் மணி, மணியரசன், சீமான் இதைப் பேசினால், திருமாவளவன் பேசினால் கைது செய் என்று கூப்பாடு போடுகிறார்கள். ஏதோ, தமிழக காங்கிர° சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் தங்கள் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்று வந்ததைப் போல் (கூட்டணி ஓட்டுகளை மறந்து), தி.மு.க. ஆட்சியை மிரட்டுகிறார்கள்.மத்தியில் மன்மோகன்சிங் ஆட்சி நிலை பெற்று நிற்பதற்கு, தி.மு.க.வின் ஆதரவு தேவைப்படுகிறது என்பதை மறந்தே போய்விடுகிறார்கள்.மிரட்டினால் கலைஞர் பணிந்து விடுவார் என்று கருதுவதற்கான வாய்ப்புகளை தமிழக முதல்வரும் தனது நடவடிக்கைகளால் உறுதிப்படுத்தி வருகிறார். இதையும் நாம் சுட்டிக்காட்டியாகவேண்டும்.
கருத்துரிமையை பறிக்கிறது என்பதற்காக ‘பொடா’ சட்டத்தை எதிர்த்த கட்சி தி.மு.க. பொடா சட்டம் இல்லாமலே அந்த இருண்ட காலத்தை உருவாக்க காங்கிரசார் துடிக்கும்போது இதற்கு தி.மு.கவும் துணை போகிறது.இப்போது கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சிப் பொதுச்செயலாளர் மணியரசன், இயக்குனர் சீமான் கைது செய்யப் பட்டிருப்பதே, இதற்கு சான்றாகும். பொடா சட்டப்படியே ஒரு தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேச உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யிருப்பது காங்கிரசாருக்குத் தெரியாதா என்று கேட்கிறோம்.காங்கிரசார் வன்முறையைக் கையில் எடுத்து இயக்குனர் சீமான் காரை எரித்ததின் விளைவுதானே, சத்யமூர்த்தி பவன் தாக்குதல் வரை வந்திருக்கிறது? அறிக்கை விடும் காங்கிரசார் இதை ஏன் மறைக்கிறார்கள்? இயக்குனர் சீமான் கார் எரிக்கப் பட்டதை காந்தியின் வழி வந்தவர்கள் கண்டித்தார்களா? வினை ஒன்று நிகழ்ந்தால் எதிர் வினையும் இருக்கத் தானே செய்யும்? இதை காங்கிரசார் சிந்திக்க மாட்டார்களா? நாட்டில் எல்லா குடிமக்களுக்கும் ஒரே சட்டம் தான் என்பதை காங்கிரசார் புரிந்து கொள்ளட்டும். மத்தியில் அதிகாரத்தில் இருப்பதால், தமிழக காங்கிரசார் மற்ற குடிமக்களைவிட உயர்ந்த அதிகாரம் படைத்தவர்களாகக் கருதிக் கொள்ளக் கூடாது; ஆட்சி அதிகாரம் நிரந்தரமானதும் அல்ல.
தமிழக உணர்வை மதிக்காது செயல்படும் மன்மோகன் சிங்கையும், பிரணாப் முகர்ஜியையும் கண்டிக்காத காங்கிரசாருக்கு தமிழகத்தில் எழும் தமிழ் ஈழ ஆதரவுக் குரலை எதிர்க்கும் உரிமை கிடையாது. காங்கிரசாரின் இந்த சலசலப்புகள் தமிழின உணர்வை மேலும் உரம் போட்டு வளர்க்கவே செய்யும்; அது மட்டுமல்ல, அக்கட்சிக்கான சவக்குழியையும் அவர்களே இதன் மூலம் தோண்டிக் கொள்கிறார்கள்.
பெரியாரின் எழுத்துச் சிதைப்பாளர்கள் - யார்?
‘குடிஅரசு’ காலவரிசைத் தொகுப்புப் பற்றி ‘ஆனந்த விகடன்’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் காலவரிசைப்படி மொத்தமாகத் தொகுப்பதால் கொள்கைக் குழப்பங்கள் ஏற்படும் என்று வீரமணி பதில் அளித்தார். அது மட்டுமல்ல, பிறர் பெரியார் எழுத்துக்களைப் பதிப்பித்தால் அதில் மாற்றங்களை செய்துவிடக் கூடும் என்றும் கூறினார்.
“பெரியார் எழுத்துக்களைப் பதிப்பிக்கிறோம் என்ற போர்வையில், அவரது எழுத்துக்களைச் சிலர் மாற்றிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. தவிர மொத்தமாகப் பதிப்பிக்கும்போது, கொள்கைக் குழப்பங்கள் ஏற்படும்.” கி.வீரமணி பேட்டி, ‘ஆனந்த விகடன்’ 27.8.2008
மொத்தமாகப் பதிப்பித்தல் என்று கி.வீரமணி கூறுவது, காலவரிசைப் படியான தொகுப்பைத்தான். அதற்கு மாறாக கடவுள், மதம், சாதி, பெண்ணுரிமை என்று தலைப்பு வாரியாக, வெவ்வேறு காலகட்டங்களில் பெரியார் பேசியதைத்தான் திராவிடர் கழகம் வெளியிட்டு வருகிறது.இப்போது சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் நூல் ஒன்றை அவசரம் அவசரமாக தமிழ்நாடு முழுதும் பரப்பும் வேலையை அக்கட்சித் தொண்டர்களுக்கு வழங்கியுள்ளார் கி. வீரமணி. நூலின் தலைப்பு : “பகுத்தறிவு ஏன்? எதற்காக?” என்பதாகும். ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியார் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. அதன் பதிப்புரையில் கி. வீரமணி, “அய்யா அவர்களது அரிய எழுத்துக்கள், உரைகளைப் பல்வேறு தலைப்புகளில் கால வரிசை அடிப்படையில் களஞ்சியங்களாகத் தொகுத்து அவர்கள் உருவாக்கிய அறக்கட்டளையான பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள் மூலம் வெளியிட்டு வருவதை பெரிய பேறாகக் கருதியே உழைத்து வருகிறேன்” - என்று எழுதியுள்ளார்.
காலவரிசைப்படி மொத்தமாகத் தொகுப்பது - குழப்பத்தை ஏற்படுத்தும் என்று பேட்டி அளித்தவர்-காலவரிசைப்படி தொகுக்காமல் - தலைப்பு வாரியாக தொகுத்தே நூல்களை வெளியிடுபவர்-இப்போது காலவரிசைப்படி தொகுத்து வெளியிடுவதாக - தம்பட்டம் அடிப்பது அப்பட்டமான பொய் அல்லவா?இது அறிவு நாணயமா என்று கேட்க விரும்புகிறோம்?பெரியார் திராவிடர் கழகம் - காலவரிசைப்படி ‘குடிஅரசு’ தொகுப்பை வெளிக் கொண்டு வந்த காரணத்தால் தாங்களும் அப்படி வெளியிடுவதாக தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே வாதங்களைத் தேடுவதால்தான் கி.வீரமணி முன்னுக்குப் பின் முரணாக எழுதியும் பேசியும் வருகிறார்கள் என்ற முடிவுக்குத் தானே இதிலிருந்து வர முடிகிறது?அது மட்டுமல்ல,
பெரியாரின் “எழுத்துக்களை சிலர் மாற்றிவிடக் கூடிய ஆபத்தும் இருக்கிறது” என்றும், ‘ஆனந்தவிகடன்’ பேட்டியில் கி.வீரமணி கூறியிருக்கிறார்.
அத்தகைய ‘ஆபத்துகளை’ பெரியாருக்கு உருவாக்கியிருப்பவர் ‘சாட்சாத்’ இதே கி.வீரமணிதான் என்று நாம் குற்றம்சாட்டுகிறோம். அதற்கான ஆதாரங்களை யும் முன் வைக்கிறோம்.
பெரியார் எழுதிய ‘குடிஅரசு’ தலையங்கங்கள் மிகவும் ஆழமானவையாகவும், பொருள் பொதிந்தவையாகவும் காணப்படுகின்றன. கருத்துகளை தலையங்கங் களில் வார்த்தைகளால் பெரியார் செதுக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு தலையங்கத்துக்கும் அதில் எத்தகைய தலைப்பு இடம் பெறவேண்டும் என்பதை முடிவு செய்து பெரியார் தலைப்பிட்டிருக்கிறார். தலையங்கத்துக்கு தலைப்பிடுவது, அத்தலையங்கத்தின் முதன்மையான கருத்தை வாசகர்களுக்கு வெளிச்சப்படுத்துவதேயாகும். எனவே தலையங்கம் எவ்வளவு முக்கியமோ, அதைப் போல் அதன் தலைப்பும் முக்கியமாகிறது. அது ஆசிரியரின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கிறது. ஆனால், இப்போது சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள பகுத்தறிவு ஏன்? எதற்காக? என்ற நூலில் என்ன நடந்துள்ளது?
• நூலின் பக்கம் 36-ல் வெளியிடப்பட்ட கட்டுரையின் தலைப்பு ‘பகுத்தறிவும் நா°திகமும்’ என்பதாகும். ஆனால் ‘குடிஅரசில்’ அக்கட்டுரைக்கு தந்துள்ள தலைப்பு ‘நா°திகம்’ என்பது மட்டுமே! இவர்கள் தலைப்பு வாரியாக பகுத்தறிவு என்ற தலைப்பின் கீழ் தொகுத்ததால் - ‘பகுத்தறிவு’ என்பதையும் சேர்த்துக் கொண்டு விட்டார்கள். 28.9.1930-ல் ‘குடிஅரசில்’ எழுதப்பட்ட அத்தலையங்கம் ‘நா°திகம்’ பற்றி மட்டுமே பேசுகிறது. பகுத்தறிவுக்கான எல்லையைத் தாண்டி நிற்பது நா°திகம்! எனவே பெரியார் சூட்டிய சரியான தலைப்பை இவர்கள் ஏன் மாற்ற வேண்டும்? இந்த அதிகாரத்தை இவர்களுக்கு தந்தது யார்? இது வீரமணியாரின் வாதப்படியே எழுத்துகளை மாற்றிய ஆபத்து அல்லவா?
• பக். 44-ல் - நூலில் இடம் பெற்றுள்ள பெரியார் தலையங்கத்துக்காக தரப்பட்டுள்ள தலைப்பு, “பகுத்தறிவுக்கு ஒவ்வாத கொடுமைகள்” என்பதாகும். 5.10.1930 ‘குடிஅரசு’ ஏட்டில், பெரியார் அந்தத் தலையங்கத்துக்கு தந்துள்ள தலைப்பு அதுவல்ல. பெரியார் எழுத்தில் இவர்கள் கை வைத்துள்ளார்கள். அதற்கு பெரியார் ‘இனியாவது புத்தி வருமா?”, “பெண்களுக்கு சொத்துரிமை” என்ற இரண்டு தலைப்புகளைத் தந்துள்ளார். ஒரு தலையங்கத்துக்கு இரு வேறுபட்ட தலைப்புகளை பெரியார் தருவதிலிருந்தே தலைப்பு வழியாக அவர் முதன்மைப்படுத்தும் கருத்துகளை உணர்த்த விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏன் இதை மாற்றுகிறார்கள்? இப்படி பெரியார் எழுத்தில் கை வைத்து மாற்றுவதைத்தான், “பகுத்தறிவுக்கு ஒவ்வாத கொடுமை” என்று கூற வேண்டியிருக்கிறது!
• பக்கம் 58-ல் வெளிவந்த கட்டுரைக்கு இவர்கள் தந்துள்ள தலைப்பு - ‘பகுத்தறிவை அடிமைப் படுத்தும் மதம்’ என்பதாகும். 9.9.1934 ‘பகுத்தறிவு’ ஏட்டில் பெரியார் எழுதிய இத்தலையங்கத்துக்கு அவர் தந்துள்ள தலைப்பு, “மதம் ஏன் ஒழிய வேண்டும்?” என்பதுதான். மதமே ஒழிய வேண்டும் என்று பெரியார் தந்த மத எதிர்ப்புக்கான அழுத்தத்தை இத் தலைப்பு வழியாக சிதைத்துள்ளார்கள்.
• இன்னும் துல்லியமாகக் கூட நம்மால் பல செய்திகளை எடுத்துக் காட்ட முடியும். உதாரணமாக பச்சையப்பன் மண்டபத்தில் 1927 அக்டோபர் 21 ஆம் நாளில் ஆற்றிய உரை - நூலில் அக்.22 என்று தவறாக இடம் பெற்றுள்ளது. 2.8.1931 ‘குடிஅரசில்’ பெரியார் எழுதிய கட்டுரையை 9.8.1931 என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
• 115 பக்கங்களைக் கொண்ட ஒரு சிறு நூலிலே பெரியார் எழுத்துகளை மாற்றி தவறான தகவல்களைத் தருகிறவர்கள்தான், மற்றவர்கள் வெளியிட்டால், ‘திருத்தி விடுவார்கள்; எங்களைப் போன்ற பொறுப்புணர்ச்சி மற்றவர்களுக்கு இருக்காது’ என்றெல்லாம் தங்களுக்குத் தாங்களே மார்தட்டிக் கொள்கிறார்கள்.
ஒன்றை கூற விரும்புகிறோம்; ‘குடிஅரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’ என்று பெரியார் ஏடுகளை நுணுகிப் படித்து, ஆய்ந்து, தேய்ந்து அலசக்கூடிய ஆற்றல் திறமை மிக்கவர்கள் பலரும் இப்போது வந்து வந்துவிட்டார்கள் என்பதை வீரமணியார்களும், அவரது விளக்க உரையாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்!பெரியாரைப் பெரியாராகக் காட்டாமல், பெரியாரை தங்களது பார்வைக்கேற்ப சுருக்கிக் கொள்வது பெரியாரியலுக்கு இழைக்கப்படும் வரலாற்றுத் துரோகமாகும்.இவர்களுக்கு பெரியார் திராவிடர் கழகத்தினரை - திரிபுவாத திம்மன்கள் என்று கூற தகுதியுண்டா என்று கேட்கிறோம்?(புரட்டுகள் உடைப்பு தொடரும்)
வி.பி.சிங் ஆட்சிக்கு எதிராக அரங்கேறிய தீக்குளிப்பு நாடகங்கள்
- விடுதலை இராசேந்திரன்
வி.பி.சிங் ஆட்சிக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட ‘தீக்குளிப்புகளை’ அம்பலப்படுத்தினார், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன். அவரது உரையின் சென்ற வார தொடர்ச்சி -காங்கிரசிலிருந்து வெளியேறிய வி.பி.சிங், ‘ஜன்மோர்ச்சா’ என்ற அமைப்பைத் தொடங்கினார். ஊழலுக்கு எதிராக அந்த இயக்கம் போராடியது. இந்தியாவின் நாடாளுமன்றத்தை நிர்ணயிக்கக்கூடிய எண்ணிக்கை வலிமை உ.பி., பீகார் மாநிலங்களிடம் இருந்ததால், இந்த இரு மாநிலங்களிலும் காங்கிர° கட்சியை தோற்கடித்துக் காட்டுவேன் என்று சபதமேற்ற வி.பி.சிங், அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கினார். ஜனதா, லோக்தளம், காங்கிரசு (எ°) போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, ‘ஜனதா தளம்’ என்ற கட்சியை உருவாக்கினார். (1988, அக்.11). 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க, மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய ‘தேசிய முன்னணி’ என்ற கூட்டணி அமைப்பை உருவாக்கிய தும் வி.பி.சிங் தான். மத்திய அரசில் மாநிலக் கட்சிகளும் அதிகாரப் பங்கு பெறும். கூட்டாட்சிப் பாதைக்கு வழியமைக்கும் முயற்சியாகவே இது அமைந்தது. காங்கிர° எதிர்ப்பு ஒன்றையே முன் னிறுத்தி - முரண்பாடுகள் கொண்ட, இடதுசாரிகள்-பா.ஜ.க.வினரையும் ஒரே அணிக்குள் கொண்டு வந்த சாதனையை வி.பி.சிங் ஒருவரால் தான் செய்ய முடிந்தது. வி.பி.சிங் மீதான நம்பகத் தன்மையும் நேர்மையுமே இதற்கு அடிப்படை என்று உறுதி யாகக் கூற முடியும். முரண்பாடுகளை நிர்வகித்தல் (Managing the Contradictions) என்று வி.பி.சிங், இதற்குப் பெயர் சூட்டினார். ஆனாலும்கூட பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார மேடையில் வி.பி.சிங் பேச மறுத்தார். தனது இயல்பான நட்பு சக்தி இடதுசாரிகள்தான் என்று கூறிய வி.பி.சிங், பா.ஜ.க.வை அரசியலுக்கான கூட்டணி என்று கூறினார்.
1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று, வி.பி.சிங் பிரதம ரானார். பாரதிய ஜனதாவும், இடதுசாரி கட்சிகளும், வெளியிலிருந்து ஆதரவை நல்கினர். 1977 க்குப் பிறகு, இரண்டாவது முறையாக காங்கிர° தோற்கடிக்கப் பட்டது. வி.பி.சிங் சபதம் ஏற்றதுபோல், உ.பி.யில் 83 தொகுதிகளிலும், பீகாரில் 54 தொகுதிகளிலும் தேசிய முன்னணி வெற்றி வாகை சூடி, 137 இடங்களை இந்த இரண்டு மாநிலத்தில் மட்டும் கைப்பற்றியது. காங்கிர° படுதோல்வியை சந்தித்தது. இந்திராவின் மறைவுக்குப் பிறகு நடந்த தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றிய காங்கிர° வி.பி.சிங் விலகலுக்குப் பிறகு 200 இடங்களைத் தாண்டவே முடியவில்லை. ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து நடந்த தேர்தலில்தான் 200க்கும் சற்று கூடுதலாக வெற்றி வெற்றது. இந்திய அரசியலில் காங்கிரசின் அரசியல் ஆதிக்கத்தைக் கணிசமாக குறைத்தப் பெருமை வி.பி.சிங் அவர்களுக்கு உண்டு. இதை மறுத்துவிட முடியாது. ‘ஜன்மோர்ச்சா’ தொடங்கிய காலத்தில்கூட வி.பி.சிங்கிற்கு இடஒதுக்கீடு குறித்த தெளிவான பார்வை இருந்ததாகக் கூற முடியாது.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற முழக்கம்தான் அப்போது முன் வைக்கப்பட்டது. அவரைச் சூழ்ந்து நின்ற அருண்நேரு போன்ற பார்ப்பன சக்திகளின் கருத்து ‘ஜன்மோர்ச்சாவுக்குள்’ நுழைக்கப்பட்டது. தொடர்ந்து இடஒதுக்கீடு கொள்கைகளில் நம்பிக்கையுள்ள அதற்காக தொடர்ந்து நாடாளு மன்றத்தில் குரல் கொடுத்த ராம் அவதேஷ்கிங் போன்ற தலைவர்கள் வி.பி.சிங்கிடம் இடஒதுக்கீட்டு கொள்கைகளையும், அதன் முக்கியத்துவத்தை யும் எடுத்துக் கூறியபோது நியாயங்கள் அவருக்குப் புரியத் தொடங்கின. இங்கே பேசிய சகோதரி ஓவியா குறிப்பிட்டதைப்போல, மண்டல் ஆணையின் ஒரு பகுதியாக பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு ஆணையைப் பிறப்பித்த வி.பி.சிங், உடனே ராம் அவதேஷ்சிங் அவர்களைத்தான் நேரில் போய் சந்தித்து நன்றி கூறினார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத ஒதுக்கீடு செய்யும் முடிவை வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவை முடி வெடுத்து, அதற்கான ஆணையைப் பிறப்பித்தவர், அன்று சமூகநலத்துறை அமைச்சராக இருந்த ராம்விலா° ப°வான் என்ற தலித் தான்! ஒரு தலித் அமைச்சர் ஆணை வழியாகத்தான் பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு கிடைத்தது. என்பதை பிற்படுத்தப்பட்ட சமுதாயம் மறந்துவிடக் கூடாது.
அதேபோல் அரசியலமைப்பு சட்டத்தில் அம்பேத்கர் உருவாக்கிய பிரிவுகள் தான் பிற்படுத்தப்பட் டோருக்கு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது என்பதையும் பிற்படுத்தப் பட்டவர்கள் மறந்துவிடக் கூடாது. (கைதட்டல்)வி.பி.சிங் பிரதமராகப் பதவி ஏற்று (2.12.1989) 11 மாதங்களில் ஆட்சியை உதறினார் (10.11.1990), 1990 ஆம் ஆண்டு ஆக°ட் 9 ஆம் நாள். ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் மட்டுமல்ல. இந்திய அரசியலிலும் திருப்புமுனையை ஏற்படுத்திய நாள். அன்றுதான் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்பட்டது. பார்ப் பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் அலறின. எரி மலையாக வெடித்தார்கள். ஏதோ பூகம்பமே வந்து விட்டதைப்போல கொதித்தார்கள். வடமாநிலங் களில் மாணவர்களைத் தூண்டி கலவரத்தை நடத்தினர். இதிலே மிகப் பெரும் சோகம் என்ன வென்றால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்து மாணவர்களே இதை எதிர்த்து வீதிக்கு வந்து, கலவரத்தில் இறங்கியதுதான்.
இது, தங்களுக்கான உரிமை என்ற விழிப்புணர்வு, அவர்களிடம் உருவாக்கப்படவில்லை. ஏன்? என்ன காரணம்? அங்கு ஒரு பெரியார் பிறக்கவில்லை; (கைதட்டல்) அதுதான் காரணம்.ஆணை வந்தவுடன் புதுடில்லியில் ஆர்.எ°.எ°. தலைமையகத்தில், முக்கிய தலைவர்கள் கூடி வி.பி.சிங் ஆட்சிக்கு பாரதிய ஜனதாவின் ஆதரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வற் புறுத்தினர். பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செய லாளர் மனோகர் ஜோஷியும், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனாலும், பாரதிய ஜனதா கட்சி உடனே ஆதரவைத் திரும்பப் பெற்றுவிட வில்லை. பிற்படுத்தப்பட்டோரின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்று தயங்கியது. காரணம், நாடாளுமன்றத்தில் மூன்று அல்லது நான்கு எண்ணிக்கையைத் தாண்டாத பாரதிய ஜனதா வி.பி.சிங் அணியில் இடம் பெற்றதால்தான் 86 உறுப்பினர்களைப் பெற முடிந்தது. அந்த 86 பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 38 பேர் பிற்படுத்தப் பட்டவர். 12 பேர் தாழ்த்தப்பட்டவர். எனவே, இவர்களின் எதிர்ப்புக்குள்ளாக நேரிடுமோ என்ற தயக்கம் பா.ஜ.க.வுக்கு இருந்தது. எதிர்ப்பை வேறு வழியில் காட்ட காரணம் தேடிக் கொண்டிருந்தது.ஆணையை எதிர்த்தது, ஆர்.எ°.எ°. மட்டுமல்ல; காங்கிர° கட்சியைச் சார்ந்த வசந்த் சாத்தே என்ற பார்ப்பன நாடாளுமன்ற உறுப்பினர், ஆணையைத் திரும்பப் பெறக் கூறி நாடாளு மன்றத்தின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். தனது கட்சியின் கருத்து பற்றிக்கூட அவர் கவலைப்படவில்லை.
பார்ப்பன உயர்சாதி அய்.ஏ.எ°. அதிகாரிகள் ரகசியமாகக் கூடி பேசி, அரசுக்கு எதிராக செயல்படுவதென முடிவெடுத்தனர். முதல் கட்டமாக அய்.ஏ.எ°. அதிகாரிகளின் மனைவியர்களை திரட்டி, அணியாக்கி, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஊர்வலம் நடத்தினர். எப்போதாவது இந்த பரம்பரையெல்லாம் வீதிக்கு வந்திருப்பார்களா?பெங்களூரில் பார்ப்பனர் சங்கம் அவசரமாகக் கூடி, “இந்த ஆணை இந்து மதத்தை சாதி அடிப்படையில் பிரித்து விடும். எனவே அமுல்படுத்தக்கூடாது” என்று தீர்மானம் போட்டனர். சாதி அடிப்படையில் பிரிப்பது இந்து மதமா? அல்லது அரசு ஆணையா? ஏதோ இந்து மதத்துக்குள் சாதி நுழைந்ததே ஆக°ட் 7 ஆம் தேதி தான் என்பதுபோல் நாடு முழுதும் பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளும் ஒரே குரலில் ஓலமிட்டனர். இப்போது 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக டெல்லியிலுள்ள ‘அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவன’ பார்ப்பன மாணவர்கள் எப்படி எதிர்த்தார்களோ, அதுபோல், அப்போது டெல்லிப் பல்கலைக்கழக பார்ப்பன மாணவர்கள்தான் எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை தாங்கினர். விவரமறியாத பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் ஏதோ தேசத்துக்கே ஆபத்து வந்துவிட்டதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட வைத்து, கலவரத்தைத் தூண்டினார்கள். பீகாரில் நடந்த கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, அதில் இறந்த 6 மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். எதிர்ப்புக் கலவரத்தில் பீகார், உ.பி., ம.பி., ஒரிசா, இராஜ°தான், அரியானா மாநிலங்களில் இறந்த 32 மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். அதே ஆண்டு ஆக°ட் 24 ஆம் தேதி நாடாளு மன்றத்தின் முன்பு மாணவர்கள் நடத்திய பேரணி கலவரமாக மாறிய போது, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரும், செப்டம்பர் 24 ஆம் தேதி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரும், மு°லிம் மாணவர்கள் தான். மாணவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து தீக்குளிப்பதாக பார்ப்பன ஏடுகள் செய்திகளை வெளியிட்டன. உண்மையில், பல மாணவர்கள் திட்டமிட்டு உயிருடன் எரிக்கப்பட்டு, அவர்கள் தீக்குளித்ததாக நாடகமாடினார்கள். இன்று எப்படி வி.பி.சிங் அவர்களை ‘சமூக இழிவைக்’ கொண்டு வந்தவர் என்று பார்ப்பன இறுமாப்போடு ‘இந்தியா டுடே’ எழுதியதோ அதே ஏடு அன்றைக்கும், கலவரங்களை ஊதி விட்டது. அப்படி இடஒதுக் கீட்டுக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்த அதே ‘இந்தியா டுடே’ தான் - தீக்குளிப்பு என்ற பெயரில் ராஜீவ் கோ°வாமி என்ற பிற்படுத்தப்பட்ட மாணவரை பார்ப்பன மாணவர்கள் தீக்குளிப்பது போல் நாடகமாடுமாறு கூறிவிட்டு, பிறகு, உண்மை யிலே தீக்குளிக்க வைத்தனர் என்ற செய்தியை மருத்துவனையில் உயிருக்குப் போராடிய கோ° வாமியின் வாக்குமூலத்தின் வழியாக அம்பலப் படுத்தியது (இந்தியா டுடே அக்.6-20, 1990).
இதே போல் பல பள்ளி மாணவர், மாணவிகளும் தீக்குளிக்க செய்யப்பட்டனர். பலர் கொளுத்தப்பட்டனர். புதுடில்லி ஆர்.கே.புரத்தில் வகுப்பை விட்டு தண்ணீர்குடிக்க வெளி வந்த பிரவீணா என்னும் சீக்கிய மாணவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பைப் பற்ற வைத்து கொலை செய்தனர். ‘இந்தியன் எக்°பிர°’ நாளேட்டில் ஆசிரியராக இருந்த பார்ப்பன அருண்ஷோரி, வி.பி.சிங்குக்கும், இடஒதுக்கீட்டுக்கும் எதிரான ‘குருசேத்திரப் போரையே’ நடத்தினார். ஆக°ட் 15 முதல் செப்டம்பர் 30 வரை ஒன்றரை மாத காலத்தில் ‘இந்தியன் எக்°பிர°’ ஏட்டில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக அருண்ஷோரி எழுதி குவித்த தலையங்கங்கள், கட்டுரைகளின் எண்ணிக்கை மட்டும் 168. அதே போல் ‘டைம்° ஆப் இந்தியா’ அதே காலகட்டத்தில் வெளியிட்டவை 171. ‘இந்து’ வெளியிட்டவை 151. ‘இந்து’ சென்னையை தலைமை யிடமாகக் கொண்டு வெளிவந்த காரணத்தால் இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராகப் போய்விடும் என்பதால், சற்று அடக்கியே எதிர்ப்பை வெளிப்படுத்தியது.
“மண்டல் பரிந்துரை நாட்டையே அழித்துவிடும்; அரசு நிர்வாகத்தை மேலும் சீர்குலைக்க வைத்துவிடும்; இந்த அப்பட்டமான சந்தர்ப்பவாத முடிவு சமூகப் பதட்டத்தைத்தான் உருவாக்கப் போகிறது. இதன் முதன் விளைவு இதுவாகவே இருக்கும்” என்று ‘எக்°பிர°’ எழுதியது. “40 ஆண்டுகாலமாக - நவீன - சமத்துவ சமுதாயத்தை உருவாக்க படிப்படியாக எட்டிய சாதனைகள் அனைத்தையும் ஒரே அடியில் வி.பி.சிங் வீழ்த்திவிட்டார்” என்று ‘டைம்° ஆப் இந்தியா’ பார்ப்பன நாளேடு எழுதியது. இவ்வளவையும் நாம் விரிவாக ஏன் சுட்டிக்காட்டுகிறோம் என்றால், எத்தகைய சூழலில் வி.பி.சிங், இப்படி ஒரு சமூகநீதி ஆணையைப் பிறப்பித்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான். பார்ப்பன அதிகார வர்க்கத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பு; பார்ப்பன ஏடுகளின் ஒரு சார்பான பிரச்சாரம்; மிரட்டல்கள்; பார்ப்பன மாணவர்களின் வன்முறை; வடமாநிலங்களில் உண்மையையறியாத பிற்படுத்தப்பட்ட மாணவர்களே. பார்ப்பன மாணவர்களோடு சேர்ந்து போராடிய அவலம். பா.ஜ.க., காங்கிர° கட்சியின் கடுமையான எதிர்ப்புகள். இவ்வளவு எதிர்ப்புகள் சூழ்ந்திருந்த நிலையிலும் கொள்கைக் குன்றாய் நிமிர்ந்து நின்ற மாமனிதன் தான் வி.பி.சிங். (கைதட்டல்) அதற்கு முன் 10 ஆண்டுகாலமாக காங்கிர° ஆட்சியால் முடக்கப் பட்டுக் கிடந்த அறிக்கையை வெளியே கொண்டு வந்து ஆணை பிறப்பித்து, சுழன்றடிக்கும் பார்ப்பன எதிர்ப்புச் சூறாவளிகளுக்கு இடையே எதிர்நீச்சல் போட்ட அந்த மாமனிதரின் இந்த வரலாற்று சாதனையை நாம் நன்றியுடன் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எடுத்துக் காட்டினோம்.
இப்படி ஒரு அரசியல்வாதியை, தந்தை பெரியார் போல் நெஞ்சுரம் கொண்ட ஒரு லட்சியவாதியை நாம் எங்கே தேடினாலும் கிடைப்பார்களா?
பெரியார் நூல்கள் நாட்டுடைமை: குரல் கொடுக்கிறது த.மு.எ.ச.
கரவொலியில் அதிர்ந்தது அரங்கம்
பெரியார் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 11வது மாநில மாநாடு சென்னையில்டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி நிறைவடைந்தது. தமிழகம் முழுதுமிருந்தும் சுமார் 2000 பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாடு கலை இலக்கிய பண்பாடுகள் குறித்த விவாதங்கள் கருத்தரங்குகளை நடத்தியது. சமூகம், கலை, இலக்கியம், தீண்டாமை, பெண்ணியம் தொடர்பான ஆழமான கருத்துகள் முன் வைக்கப்பட்டன. சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ‘பத்மராம் ஹால் ராம் தியேட்டரில்’ நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாளான 21 ஆம் தேதி காலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான கலைப் பேரணியும், அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் லிபர்ட்டிஅரங்கில் விடிய விடிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் முதல் தீர்மானமாக பெரியார் நூல்களை தமிழக அரசு நாட்டுடைமையாக்குவதோடு, அவற்றை தமிழக அரசே கால முறைப்படி தொகுத்து வெளியிட வேண்டும் என்ற தீர்மானம் முன் மொழியப்பட்டபோது அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.தமிழ்நாட்டில் பலத்த விவாதங்களுக்கு உள்ளாகியுள்ள இப்பிரச்சினை குறித்து அமைப்புகள், கட்சிகள் பலவும் மவுனமாகிவிட்ட நிலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அழுத்தமான குரலை தீர்மானத்தின் வழியாக எழுப்பியுள்ளதை பெரியார் திராவிடர் கழகம் பாராட்டி வரவேற்கிறது.தமிழகத்தின் வரலாற்றுப்போக்கைத் திருப்பிய ஒரு தலைவரின் நூல்களை பெரியார், அண்ணா வழி வந்த தி.மு.க. ஆட்சி, தி.க. தலைவர் வீரமணியை மகிழ்விக்கும் நோக்கத்தோடு நாட்டுடைமையாக்கத் தயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சிற்பி ராசன் 55வது பிறந்த நாள் கழக ஏட்டுக்கு நன்கொடை
மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தம்மை முழுமையாக ஒப்படைத்துப் பணியாற்றி வருபவரும், தலை சிறந்த சிற்பிகளில் ஒருவரும், கழகத்தின் பிரச்சாரப் பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பவருமான தோழர் சிற்பி. இராசன் அவர்களுக்கு 25.12.2008 அன்று 55வது பிறந்த நாளாகும். பிறந்த நாள் நினைவாக கழக ஏட்டுக்கு ரூ.5000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்)
கோவை, திருப்பூர் செய்திகள் அடுத்த இதழில்