சமூகநீதிக்கு குழிபறித்த ‘சொக்கத் தங்கம்’ சோனியாவின் ஆட்சி!

ஜனதா ஆட்சி காலத்தில் மொரார்ஜி பிரதமராக இருந்தபோது, பிற்படுத்தப்பட் டோருக்காக நியமிக்கப்பட்ட மண்டல் குழு பரிந்துரையை நாடாளு மன்றத்திலே வைக்க மறுத்த கட்சி - காங்கிரஸ்.

• கடும் போராட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் அறிக்கையை மட்டும் சமர்ப்பித்துவிட்டு, 10 ஆண்டுகாலம் அமுல்படுத்தாமல் அலமாரியில் தூசி படிய விட்ட கட்சி - காங்கிரஸ்.

• 1990 இல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, அதில் ஒரு பகுதியை (பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ஆணை) அமுலாக்கியபோது அதற்காக பாரதிய ஜனதாவோடு சேர்ந்து கொண்டு வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த கட்சி - காங்கிரஸ்.

• மண்டல் பரிந்துரையை எதிர்த்து, அன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி 10 மணி நேரம் தண்ணீர் குடித்துக் கொண்டே பேசினார்; பார்ப்பன சக்திகள் மகிழ்ச்சிக் கூத்தாடின.

• வி.பி.சிங் ஆட்சியை வீழ்த்திவிட்டு, ஆட்சிக்கு வந்த நரசிம்மராவ் காங்கிரஸ் பார்ப்பன - முன்னேறிய சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கி, பார்ப்பன சக்திகளையே திருப்தி செய்ய துடித்தது. (உச்சநீதிமன்றம் தான் அந்த உத்தரவை செல்லாது என்று அறிவித்தது)

• சோனியாவின் தலைமையில் உருவான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி குறைந்தபட்ச வேலைத் திட்டத்தில் தனியார் துறையில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவதாக கூறியது; செய்தார்களா? பெரும் தொழில் நிறுவனங்கள் - பன்னாட்டு நிறுவனங்கள் - பார்ப்பன பனியா சக்திகளின் மிரட்டலுக்கு பணிந்து தனியார் துறை இடஒதுக்கீட்டு முயற்சிகளை கிடப்பில் போட்ட கட்சி - காங்கிரஸ்!

• அரசு - பொதுத் துறை நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் - பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்வோம் - என்று குறைந்தபட்ச வேலைத் திட்டத்தில் உறுதி கூறினார்கள். நடைமுறைப்படுத்தினார்களா? இல்லை. கண்துடைப்புக்காக 2005 இல் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார்கள். அது சட்டச் சிக்கலில் மாட்டியது. அவ்வளவுதான், விட்டால் போதும் ஆளை விடு என்று ஒதுங்கிக் கொண்டது. சட்டச் சிக்கலிலிருந்து மீட்டு சமூகநீதி வழங்கிட எந்த முயற்சியும் எடுக்காத கட்சி - காங்கிரஸ்.

• தலித் மற்றும் பழங்குடியினரின் பாரம்பரிய உடைமைகளைப் பாதுகாக்கப் போவதாக குறைந்தபட்ச திட்டம் கூறியது; நடந்தது என்ன? 2006 இல் பரம்பரை வன வாழ் மக்கள் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. சட்டம் வந்ததே தவிர, அதை நிறைவேற்றாமல், கிடப்பில் போட்ட கட்சி - காங்கிரஸ்!• மெட்ரிக் படிப்பு முடித்த தலித் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டைக்கூட - கடந்த வரவு செலவு திட்டத்தில் கணிசமாகக் குறைந்தார் ப. சிதம்பரம்! நிதியைக் குறைத்துவிட்டு, கூடுதலாக 3 லட்சம் தலித் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப் போவதாகவும் அறிவித்த கட்சி - காங்கிரஸ்!

• ராஜீவ் காந்தி பெயரில் கொண்டு வரப்பட்ட கல்வி உதவித் தொகையையும் 87 கோடியிலிருந்து 79 கோடியாகக் குறைத்த கட்சி - காங்கிரஸ்!

• சாக்கடை எடுத்தல்; மலம் அள்ளுதல் போன்ற சுகாதாரத்துக்கு கேடு விளை விக்கும் இழிவு வேலைகளை செய்வோர் குடும்பத்தின் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி உதவித் தொகையைக் கூட முழுமையாக செலவிடாத கட்சி - காங்கிரஸ்! (ஒதுக்கப்பட்ட நிதியில் செலவிடப்பட்டதே 4.38 சதவீதம் தான்! மத்திய தணிக்கைத் துறையே தனது அறிக்கையில் இந்த அவலத்தை சுட்டிக் காட்டியது.)

• பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உயர் கல்வி நிறுவனங்களில் அமுல்படுத்துவதை பார்ப்பன சக்திகள் எதிர்த்தபோது, மிரட்டலுக்கு பணிந்தது. 27 சதவீதத்தை கூறுபோட்டு படிப்படியாக அமுல்படுத்தவும், அந்த எண்ணிகைக்கேற்ப திறந்த போட்டிக்கான இடங்களை உயர்த்தி, பார்ப்பன சக்திகளை மகிழ்விக்கவும் முன் வந்த கட்சி - காங்கிரஸ்!

• இதற்காக வீரப்ப மொய்லி தலைமையில் குழு ஒன்றையும் அமைத்தார்கள். இந்தக் குழு திட்டத்தை தந்து - அதை படிப்படியாக நிறைவேற்ற தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரைத்தது. பரிந்துரைத்தும், நிதி ஒதுக்கீடு செய்யாத கட்சி - காங்கிரஸ்!

• தலித் மக்கள் மீது இந்தியா முழுதும் நிகழும் சாதி வெறியாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கும் 18 நிமிடங்களுக்கு ஒரு முறை தலித் தாக்கப்படுகிறார். மூன்று நாளுக்கு ஒரு முறை தலித் பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார். 3 நாளுக்கு ஒரு முறை 11 தலித்துகள் தாக்கப்படு கிறார்கள். வாரந்தோறும் 13 தலித்துகள் கொல்லப்படுகிறார்கள்; 5 தலித் வீடுகள் எரிக்கப்படுகின்றன.

• பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி வாரி வழங்கிக் கொண்டு தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியையும் ஒதுக்க மறுக்கும் கட்சி - காங்கிரஸ்!

• நடப்பு அய்ந்தாண்டு திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 2,12,431 கோடி. இதில் தலித் மக்களுக்கு சட்டப்படியாக ஒதுக்கப்பட வேண்டியது ரூ. 34,413.82 கோடி. ஆனால், ஒதுக்கியிருப்பதோ ரூ. 15,280.18 கோடி மட்டுமே! சுமார் ரூ. 20000 கோடி தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட வேண்டியதை பறித்துவிட்ட கட்சி - காங்கிரஸ்!

• எல்லாவற்றுக்கும் மேலாக உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களில் அட்டவணை சாதியினருக்கு இருந்த இட ஒதுக்கீட்டை பறித்து விட்ட கட்சி - காங்கிரஸ்! அய்.அய்.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் - பார்ப்பனர்களின் கோட்டையாகவே இருக்கின்றன. இதில் - குறைந்த எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்டோர் ஆசிரியர்களாக இருப்பதைக்கூட சகிக்க முடியாத இந்நிறுவனங்களின் பார்ப்பன இயக்குனர்களின் கோரிக்கையை ஏற்று, மன்மோகன்சிங் 47 உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களில் தாழ்த்தப்பட்டோருக்குள்ள இடஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டார். இதற்கான மசோதா கடந்த கடைசி நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் எவ்வித விவாதங்களும் இல்லாமலே அவசர அவசரமாக நிறை வேற்றப்பட்டு விட்டது. (நாடாளுமன்றத்தின் முன் மீண்டும் வைக்கப்பட வில்லை; ஒரு வேளை விபத்தின் காரணமாக மன்மோகன்சிங் - பிரதமரானால், நாடாளு மன்றத்திலும் நிறைவேற்றிவிடுவார்கள்)

• உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் நியமனங்களில் ஏற்கனவே இருந்த தலித் இடஒதுக்கீட்டையும் பறித்த கட்சி - காங்கிரஸ்!

மத்திய அரசின் இந்த “சாதனைகளைத்தான்” மக்களிடம் பட்டியலிட்டுப் பிரச்சாரம் செய்யப் போகிறதா, தி.மு.க.?

ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு துணைப் போகும் - சோனியாவின் மத்திய காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை - “தமிழர் தலைவர்” கி.வீரமணியும், பிரச்சாரம் செய்யப் போகிறாராம்! - வெட்கக்கேடு!

தமிழர்களே!ஈழத் தமிழர் இனப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தாமல் -அதற்கு அனைத்து உதவிகளையும் வாரி வழங்கிக் கொண்டு -தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதியையும் நிறைவேற்றிடாமல் - சிங்களத்துக்கும், பார்ப்பனருக்கும் துணைப் போகும் காங்கிரஸ் கட்சியையும் அதனுடன் கை கோர்த்து வரும் தி.மு.க.வையும், தேர்தலில் தோற்கடித்து பாடம் புகட்டுவீர்!

அயர்லாந்து அன்னிபெசன்டிலிருந்து இத்தாலி சோனியா வரை...
காங்கிரஸ் வரலாறே - தமிழினப் பகைமை தான்!


காங்கிரஸ் கட்சி - பிரிட்டிஷ்காரரால் தொடங்கி யது முதல் இது நாள் வரை அது தமிழினத்தின் பகை சக்தியாகவே இருந்திருக்கிறது. இடையில் இந்திய தேசியத்திலிருந்து மாறுபட்டு, தமிழின அடையாளத் தோடு செயல்பட்ட காமராசர் காலம் மட்டுமே மாறு பட்டிருந்தது. மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் - தமிழினப் படுகொலைக்கு கரம் நீட்டிக் கொண்டிருக் கிறது. இளம் தலைமுறையினரே; இதோ, அந்த வரலாற்றிலிருந்து சில துளிகள்...

• 1885 இல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியவர் ஆலன் ஆக்டேவியன் ஹுயூம் என்ற பிரிட்டிஷ் அய்.சி.எஸ். (அந்தக்கால அய்.ஏ.ஸ்.) அதிகாரி. அதற்கான ஆலோசனையை வழங்கியவர் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த டஃப்ரின் பிரபு.

• பம்பாய், கல்கத்தா, சென்னையில் காங்கிரஸ் மாநாடுகள் கூடியபோது மாநாட்டுப் பிரதிநிதி களுக்கு பிரிட்டிஷ் ஆளுநர்கள் தேனீர் விருந்து கொடுத்தனர்.

• காங்கிரஸ் தொடங்கப்பட்டது - சுதந்திரம் கேட்பதற்காக அல்ல. அப்போது நிர்வாகம் நடத்திய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியாரின் அடக்குமுறைகளை எதிர்த்து எவரும் போரிடாமல் கட்டுக்குள் வைப்பதற்கே காங்கிரஸ் தொடங்கப்பட்டது. எனவேதான் காங்கிரசைத் தொடங்கிய ஹுயூம் என்ற பிரிட்டிஷ் அதிகாரியே அக்கட்சியின் செயலாளராக 20 ஆண்டுகாலம் இருந்தார்.

• ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியின் மாநாடும் தொடங்கும்போதும் - “பிரிட்டிஷ் அரசர் அரசிக்கு கடவுள் நீண்ட ஆயுளைத் தர வேண்டும்” என்று தீர்மானங்கள் போடுவது வழக்கம். 1886 இல் தொடங்கி 1914 வரை 8 மாநாடுகளில் இந்த ‘மன்னர் வழிபாட்டு’த் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

• கல்கத்தாவில் இரண்டாவது காங்கிரஸ் மாநாடு நடந்தபோது ‘மன்னர் வழிபாட்டுத் தீர்மானம்’ தேவையா என்ற கேள்வி எழுந்தது, மாநாட்டுத் தலைவரான தாதாபாய் நவ்ரோஜி “இந்த ஜனசபை (காங்கிரஸ் மாநாடு) பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு வலிமையான அடித்தளம் (அ°திவாரக்கல்) என்று பதில் தந்தார்.

• அப்போது - காங்கிரசுக்கு ‘ஆரிய ஜன அய்க்கியம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. ‘காங்கிரஸ் அல்லது ஆரிய ஜன அய்க்கியம்’ என்ற பெயரில் க. சுப்ரமணிய அய்யர் என்ற காங்கிரஸ் தலைவர் ஒரு நூலையே எழுதியுள்ளார்.

• காங்கிரசைத் தொடங்கிய ஹுயும் அப்போது காங்கிரசில் பெரும் எண்ணிக்கையாக இருந்த பார்ப்பனர்களிடம் மதம், ஆச்சாரம், வர்ணஸ்ரமப் பாதுகாப்பு போன்ற சமூகப் பிரச்சினை களில் கட்சி குறுக்கிடாது என்று ஒவ்வொரு மாநாட்டிலும் உறுதி தந்து பேசினார். இதை ‘அம்பேத்கர் தனது சாதியை ஒழிக்க வழி’ எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

• சென்னையில் கூடிய காங்கிரஸ் மாநாடு பற்றி ‘சுதேசமித்திரன்’ நாளேட்டில் காங்கிரஸ் ஒருவிளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அதில், “இந்த வருடத்துக் காங்கிரஸ் சபையில் ஒரு முக்கியமான புதுஅம்சம் - சாதி ஆச்சாரம் பார்க்கும் பிரதிநிதிகளுக்குப் (பார்ப்பனர்களுக்கு) பிரத்தியேகமான ஒரு பங்களாவை அவர் களுடைய சாதி ஆச்சாரங்களுக்கு ஏற்றபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன” என்று அந்த விளம்பரம் கூறியது.

• 1885 இல் நடந்த பம்பாய் காங்கிரசிலும் 1886 இல் நடந்த கல்கத்தா காங்கிரசிலும் ஒரு மு°லீம் பிரதிநிதிகூட பங்கேற்கவில்லை. காரணம் அப்போது பிரிட்டிஷாரை முழுமையாக எதிர்த்தது மு°லீம்கள்தான். ‘ஆரிய ஜன அய்க்கியம்’ என்று பெயர் சூட்டிக் கொண்ட கட்சியில் எப்படி மு°லீம்கள் வருவார்கள்?

• சென்னையில் கூடிய மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற 361 பிதிநிதிகளில் 138 பேர் பார்ப்பனர்கள். மற்றவர்கள், செட்டியார், ரெட்டியார், முதலியார் போன்ற முன்னேறிய சாதியினர். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை. கும்ப கோண சங்கர மடத்தின் சார்பில் சங்கராச்சாரி பிரதிநிதி கலந்து கொண்டார்.

• சமூகப் பிரச்சினையில் காங்கிரஸ் ‘தலையை நுழைக்காது’ என்ற கூறினாலும், சென்னை காங்கிரஸ் மாநாட்டில் பசுவதையை தடை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை பார்ப்பனர் களுக்காக நிறைவேற்றினார்கள்.

• 1900க்குப் பிறகு நடந்த காங்கிரஸ் மாநாடுகளில் - காலையிலே இந்து மகாசபை மாநாடும், மாலை யில் - அதே மேடையில் காங்கிரஸ் மாநாடும் நடந்த வந்தன. காங்கிரசார் இரண்டு அமைப்பு களிலும் இரட்டை உறுப்பினர்களாக இருந்து வந்தனர்.

• இதற்குப் பிறகுதான் 1906 இல் முஸ்லீம்கள் தங்களுக்கு என்று ‘அகில இந்திய மு°லீம் லீக்’ என்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டார்கள்.

• வங்காளத்தை மத அடிப்படையில் இரண்டு மாகாணமாக பிரிட்டிஷார் பிரித்தபோது அதை எதிர்த்து ‘அய்க்கிய வங்காள இந்து இயக்கத்தை’ (United Bengal Hindu Movement) தொடங்கியது, காங்கிரசார் தான். அதே ஆண்டில் பஞ்சாபில் இந்து மகாசபையை காங்கிரசார் உருவாக்கி னார்கள். இதுவே பிறகு அகில பாரத இந்து மகா சபையாகியது. ஆக, அரசியலில் மதவாதத்துக்கு கால்கோள் நடத்தியதே காங்கிரஸ் தான்.

• லாலா லஜபதிராய், மதன்மோகன் மாளவியா இருவரும் ஒரே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் இந்து மகாசபைக்கும் தலைவர்களாக இருந்தனர். இருவருமே மோசமான வர்ணஸ்ரம வெறியர்கள். மு°லீம் எதிர்ப்பாளர்கள். ‘கடல் தாண்டுவது இந்துமத விரோதம்’ என்பதால், லண்டன் வட்ட மேஜை மாநட்டுக்கு சென்ற மதன் மோகன் மாளவியா, தன்னுடன் மண்ணை உருண்டையாக உருட்டி கையில் எடுத்துச் சென்றார். மண்ணை கையில் எடுத்துச் சென்றால், கடல் தாண்டி போனதாகாது என்பது அய்தீகமாம்! எனவே அவர் ‘மண்ணுருண்டை மாளவியா’ என்றும் அழைக்கப்பட்டார்.

• இப்போது - சென்னை காங்கிரஸ் அலுவலகம் ‘சத்திய மூர்த்தி பவனில்’ காங்கிரசார் கூடினாலே அங்கு கலவரம் வெடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். உண்மையில் காங்கிரசின் வரலாறே அப்படித்தான் இருந்திருக்கிறது. சூரத் நகரில் கூடிய காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ‘தீவிரவாதிகள்’ என்று அழைக்கப்பட்ட திலகர் தலைமையிலான ‘இந்து வெறியர்’ குழு கலவரத்தில் இறங்கியது எதிர்ப்பு அணி. திலகர் மீது செருப்பு வீசியது. பெரும் கலவரத்தினால் எந்த முடிவும் எடுக்காமல், மாநாடு கலைந்தது. அதன் பிறகு ஓராண்டு காலம் காங்கிரஸ் கூடவே இல்லை. அரசியலில் ‘செருப்பை’ ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்பதை, அப்போது தான், காங்கிரசார் உலகத்துக்கே அறிமுகப்படுத்தினர்.

• பொது மக்களிடம் திரட்டிய நிதிக்கு கணக்கு காட்டாமல் விழுங்கி ஏப்பம் விடும் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதும் காங்கிரஸ் தான். ‘திலகர் சுயராஜ்ய நிதி’ திரட்டி, கடைசி வரை காங்கிரஸ் அதற்கு கணக்கே காட்ட வில்லை. அதே ‘திலகர்’ நிதியை காந்தியார் வசூல் செய்தார். வசூல் செய்த பலரும் பணத்தை தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள். அதனால் தான் இப்போதும் “வசூல் பணம் என்னவா யிற்று?” என்று எவராவது கேட்டால் ‘காந்தி கணக்கில் எழுது’ என்று கூறும் வழக்கு உள்ளது. இது பொது வாழ்க்கை “ஒழுக்க”த்துக்கு காங்கிரஸ் வழங்கிய ‘அருட்கொடை’.

• அரசியலில் மதத்தை நுழைத்தவர் பாலகங்காதர திலகர் என்ற மராட்டிய காங்கிரஸ் பார்ப்பனத் தலைவர்தான். ‘பிள்ளையாரை’ அரசியல் குறியீ டாக்கியவரும் அவர்தான். சைவ - வைணவப் பிரிவுகளை ஒருங்கிணைக்க அவர் விநாயகனைப் பயன்படுத்தி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ‘விநாயகர்’ ஊர்வலங்களை மராட்டியத்தில் நடத்தினார். அதைத் தான் இப்போது இந்து முன்னணி நடத்திக் கொண்டிருக்கிறது.

• புனே நகரத்தில் எலிகளால் பிளேக் நோய் பரவி ஏராளமானோர் உயிரிழந்த போது நோயைத் தடுக்க எலிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளை பிரிட்டிஷ் நிர்வாகம் தீவிரப்படுத்தியது. அப்போது விநாயகன் வாகனம் எலி. எனவே எலியை ஒழிப்பது இந்து மத விரோதம் என்று கூறினார் திலகர். இதனால் எலியை ஒழிக்க வந்த இரண்டு பிரிட்டிஷ் அதிகாரிகள் கொல்லப் பட்டனர். இந்த வழக்கில் திலகர் தண்டிக்கப்பட்டு 18 மாதம் சிறைபடுத்தப்பட்டார்.

• ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிப்பதை எதிர்த்த திலகர், பெண்களுக்கு கல்வி தருவதையே எதிர்த்தார். குழந்தை திருமணங்களை (பால்ய விவாகம்) தடை செய்யும் சட்டத்தை பிரிட்டிஷார் கொண்டு வந்தபோது மதத்தில் தலையிடுவதாகக் கூறி, கடுமையாக எதிர்த்தார்.

• சென்னையில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் அரசியல் உரிமை கோரியபோது 1918 இல் திலகர் இவ்வாறு பேசினார்: “எதற்காக, செருப்பு தைக் கிறவனும், எண்ணெய்ச் செக்கு ஆட்டுபவனும், வெற்றிலை பாக்கு கடை வைத்திருப்பவனும், சட்டசபைக்குப் போக முயற்சிக்கிறார்கள்? யார், யார் எங்கே போக வேண்டும் என்று ஒரு வரைமுறை கிடையாதா?” - இந்த நிகழ்வுகளை அம்பேத்கர் தனது நூலில் (காந்தியும் - காங்கிரசும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன? நூலில்) பதிவு செய்துள்ளார்.

• அரசியலில் மதத்தைப் புகுத்தியதில் காந்திக்கு பெரும் பங்கு உண்டு. ‘ராம பஜனையோடு’ அவரது அரசியல் நடவடிக்கைகள் கலந்து நின்றன. தனது ‘அந்தராத்மா’வுடன் அடிக்கடிப் பேசுவதாக அவர் கூறிக் கொண்டார். இந்தியாவில் ‘ராம ராஜ்யம்’ அமைய வேண்டும் என்றார். ‘தீண் டாமை’ ஒழிய வேண்டும். ஆனால், நால்வர்ணப் பிரிவாகிய வர்ணா°ரம அமைப்பு நீடிக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு ‘வர்ணமும்’ தங்களுக்குரிய தொழிலை செய்வதே நல்லது என்றார்.

• ‘தீண்டப்படாத’ தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை வழங்க பிரிட்டிஷ் அரசு முன்வந்த போது அதை எதிர்த்து சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடங்கினார் காந்தி. மிரட்டலுக்கு பிரிட்டிஷ் அரசு பணிந்தது. தலித் மக்களுக்கு கிடைத்த உரிமையை காந்தி பறித்தார்.

• மயிலாப்பூரிலுள்ள சீனிவாச அய்யங்கார் என்ற பிரபல காங்கிரசார் வீட்டில் காந்தி தங்குவது வழக்கம். அப்போதெல்லாம் அவர் வீட்டுத் திண்ணையில்தான் காந்திக்கு இடம்; உள்ளே போக முடியாது; இதை காந்தியே கூறியிருக்கிறார்.

கறைபடிந்த காங்கிரஸ் வரலாற்றுப் பக்கங்கள்!

• வர்ணஸ்ரமத்தையும், மதத்தையும் நம்பிய காந்தி, கடைசியில் மதவெறியர்களாலே சுட்டுக் கொல்லப்பட்டார். கடைசி காலங்களில் பார்ப்பனர்களை எதிர்க்கத் தொடங்கியதும், இஸ்லாமியர்களின் நியாயங்களைப் புரிந்து கொள்ளத் தொடங்கியதுமே இதற்குக் காரணம்.

• பத்துக்கு மேற்பட்ட முறை - காந்தியாரை கொலை செய்யும் முயற்சிகள் நடந்தாலும், ‘சுதந்திர’ இந்தியாவில் உள்துறை அமைச்சராக இருந்த பட்டேல், காந்திக்கு உரிய பாதுகாப்பை வழங்கவில்லை. சுதந்திரப் போராட்ட வீரரும், முதுபெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன், காந்தி யின் மரணத்துக்கு பட்டேலின் அலட்சியமே காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். ‘சுதந்திரம்’ பெற்ற காலத்தில் காங்கிரசின் தலைவராக இருந்த மவுலானா அபுல்கலாம் ஆசாத் எழுதிய தனது சுயசரிதையில் (ஐனேயை றுiளே குசநநனடிஅ), உள்துறை அமைச்சர் பட்டேல் அலட்சியம் காட்டியதுதான் - காந்தி மரணத் துக்கு காரணமாகிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

• காந்தியை கொலை செய்யப் போவதாக முன் கூட்டியே பம்பாய் மாகாண உள்துறை அமைச்சராக இருந்த காங்கிரஸ் தலைவர் மொரார்ஜி தேசாய்க்கு கடிதம் எழுதியதாக காந்தியார் கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே (இவர் நாதுராம் கோட்சேயின் தம்பி) விடுதலையான பிறகு ‘பிளிட்°’ பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அது பற்றி விசாரிக்க அப்போது மத்திய காங்கிரஸ் ஆட்சி ஜி.எஸ். பாதக் என்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைத்தது. ஆனால் அந்த விசாரணை ஆணையம் செயல்படு வதில் காங்கிரஸ் அலட்சியமே காட்டியது. நீதிபதி பாதக் விசாரணையை முடிப்பதற்கு முன்பே வேறு பதவிக்கு மாற்றப்பட்டார். பிறகு எதிர்க் கட்சிகள் காட்டிய எதிர்ப்பால் நீதிபதி கபூர் என்பவர் தலைமையில் மற்றொரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையத்தின் முன் சமர்ப்பிக்க காந்தி கொலை தொடர்பான அரசு ஆவணங்கள் டெல்லியி லிருந்து விமானத்தில் பம்பாய் கொண்டு போகப் பட்டன.

• ஆனால், விமானத்திலே அந்த ஆவணங்கள் திருட்டுப் போய்விட்டதாக மத்திய காங்கிரஸ் ஆட்சி ஆணையத்தின் முன் கூறிவிட்டது. கபூர் ஆணையம் ஆர்.எஸ். எஸ் சைக் காப்பாற்றக்கூடிய ஓர் அறிக்கையை தந்து விசாரணையை முடித்துக் கொண்டது. இப்படி, தேசத் தந்தை காந்தியின் கொலையைப் பற்றியே அக்கறை காட்டாத கட்சிதான் காங்கிரஸ்.

• கேரள காங்கிரஸ் தலைவர்கள் தொடங்கிய வைக்கம் - தீண்டாமை ஒழிப்புப் போரைத் தொடர முடியாத நிலையில் அவர்களின் அவசர அழைப்பையேற்று தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார், வைக்கம் விரைந்து, தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரமாக தொடர்ந்தார். ஆனால், காங்கிரஸ் தலைவர்களான காந்தியும், ராஜகோபாலாச்சாரி யும் அதை ஆதரிக்கவில்லை. பெரியார் போராட் டத்திற்குப் போயிருக்கக் கூடாது என்று குறை கூறினர். போராட்டம் வெற்றி பெற்ற பிறகு, சமரசம் பேச காந்தியை தலையிட வைத்த ராஜ கோபாலாச்சாரி போராட்டத்தில் பெரியாரின் பங்கினைக் குறைத்தார். தனது சுயசரிதையில் வைக்கம் போராட்டம் பற்றி எழுதிய காந்தியும் பெரியார் பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிட வில்லை.

• ஹோம்ரூல் இயக்கத்தைத் தோற்றுவித்தவரும், பிரம்ம ஞானசபைக்கு தலைமை ஏற்றவருமான அன்னிபெசன்ட் என்ற அயர்லாந்து நாட்டுப் பெண்மணி. பார்ப்பனர்களின் செல்லப் பிள்ளையாகப் பாராட்டப்பட்டவர். இத்தாலியி லிருந்து வந்து, காங்கிரசுக்கு தலைமையேற்ற சோனியா, இன்று சிங்கள ராணுவத்தின் இனப் படுகொலையை ஆதரிப்பதுபோல், அன்று, அன்னிபெசன்ட், ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர் நடத்திய படுகொலையை நியாயப்படுத்தினார். ‘பஞ்சாபி, சீக்கியர்கள் செங்கல்லை வீசியதற்கும், அதற்கு ஜெனரல் டயர் பீரங்கிக் குண்டுகளைப் போட்ட தற்கும் சரியாகப் போய்விட்டது. இதுதான் அரசு தர்மம்’ என்றார்; அதேபோல் தான் ஈழத் தமிழர் படுகொலைக்கும் இன்று காங்கிரசும் தி.மு.க.வும் ‘இறையாண்மை தர்மம்’ என்கின்றன.

• அகில இந்திய காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தபோது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் செயலாளராக இருந்த ஏ.ரங்கசாமி அய்யங்கார், தலைவராக இருந்த ‘இந்து’ ஏட்டின் ஆசிரியர் கஸ்தூரி ரங்க அய்யங்கார், சுயராஜ்யக் கட்சி தலைவர் சத்தியமூர்த்தி அய்யர் ஆகியோர், பிரிட்டிஷ் அரசு நடவடிக்கைகளுக்கு பயந்து, பதவிகளிலிருந்து விலகல் கடிதம் கொடுத்து ஓடிவிட்டனர். அகில இந்திய மட்டத்தில் முன்னணித் தலைவராக இருந்தவரும், ‘சர்வாதிகாரி’ என்று வர்ணிக்கப்பட்டவருமான மற்றொரு தேசியத் திலகமான சீனிவாச அய்யங்கார், ஒத்துழையாமை இயக்கமே சட்ட விரோதம் என்று கூறிவிட்டார்.

• இந்து மதம் திணித்த குழந்தைப் பருவத்திலே திருமணம் செய்து வைக்கும் கொடுமையை நிறுத்த 1928 இல் அன்றைய சென்னை மாகாண சட்டசபையில் தீர்மானம் வந்தபோது, தமிழ்நாடு சுயராஜ்யக் கட்சி (சுய ராஜ்யக் கட்சி என்பது தேர்தலில் பார்ப்பனர்கள் போட்டியிடுவதற்காக காங்கிரசார் உருவாக்கிய பினாமி அமைப்பு) பால்ய விவாகத்தை ஒழித்து விட்டால், ‘கற்பு கெட்டு விடும்’ என்று சட்ட சபையில் எதிர்த்தது.

• கோயில்களில் பெண்களை ‘தேவதாசிகளாக்கும்’ இந்து மதக் கொடுமையை ஒழிக்க - 1930 இல் சென்னை சட்டமன்றத்தில் தீர்மானம் வந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்தவர், காங்கிரஸ் தலைவரான சத்திய மூர்த்தி அய்யர். இந்த சட்டத்தை எதிர்த்து சிறைக்குப் போவேனே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நரகத்துக்குப் போக மாட்டேன்; சட்டத்தைவிட சா°திரமே முக்கியம் என்று பேசினார்; அவர் பெயரைத் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு, இப்போது சூட்டியுள்ளார்கள்.

• பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் நலனுக் காக சட்டசபையில் கேள்வி கேட்க அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு கேள்விகளை கேட்பது சத்தியமூர்த்தி வழக்கம். இதை அவரே ஒப்புக் கொண்டும் எழுதியுள்ளார். இப்போதும் நாடாளுமன்றத்தில் பெரும் தொழில் நிறுவனங் களுக்காக, அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, உறுப்பினர்கள் சிலர் கேள்வி கேட்கும் முறைக்கு வழிகாட்டியதே காங்கிரஸ் கட்சி தான்.

• காந்தி - பிரிட்டிஷாருக்கு எதிராக ‘ஒத்துழை யாமை இயக்கம்’ அறிவிக்கப்பட்ட போது, சட்ட மன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியது, சத்திய மூர்த்தி அய்யர், ரங்கசாமி அய்யங்கார், சீனிவாச அய்யங்கார் பதவியை விட விருப்ப மின்றி அரைமனதோடு பதவி விலகினார்கள். போராட்டத்தில் பங்கேற்காமல் ஒதுங்கிக் கொண்டார்கள்.

• 1931 இல் கராச்சியில் (இன்று பாகிஸ்தானிலுள்ள நகரம்) அகில இந்திய காங்கிரஸ் மாநாடு கூடியது. அதில் பொது கிணறு, பொது வீதி, பொது இடம் ஆகியவற்றை எல்லோரும் பயன்படுத்த உரிமை உண்டு என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதுபற்றி சத்தியமூர்த்தி அய்யர் - அவசர அவசரமாக ‘இந்து’ ஏட்டில் ஒரு விளக்கம் எழுதினார். ஒரு வகுப்பினருக்கு உரிமையான இடம் (அதாவது அக்ரகாரம்) கோயில் மற்றும் அது தொடர்புடைய இடங்களுக்கு இந்தத் தீர்மானம் பொருந்தாது என்பதே தேசியத் திலகம் சத்தியமூர்த்தி அய்யர் தந்த விளக்கம்!

• பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது, காந்தி பிரிட்டிஷ் அதிகாரி இர்வின் என்பவருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். சட்டமறுப்பு இயக்கத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வது பற்றி அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டாலும், பகத்சிங் தூக்கிலிடப்படுவது பற்றி - காந்தி, இர்வினுடன் எதையுமே பேச வில்லை. மாறாக, காந்தி தூக்கிலிடுவதை ஆதரித் துள்ளார். பகத்சிங்கை எப்போது தூக்கிடலாம் என்பது குறித்து, விவாதித்துள்ளதோடு, காங்கிரஸ் மாநாடு நடக்கும் நேரத்தில் தூக்கிலிட நேரம் குறித்தார்கள். வழக்கமாக விடியற்காலையில்தான் தூக்கு போடப்படும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக பகத்சிங்கும், அவரது தோழர்கள் ராஜ குரு, சுகதேவ் ஆகியோரும் மாநாடு நடக்கும் நேரத்தில் இரவு 7.30 மணியளவில் தூக்கிலிடப் பட்டார்கள்.

• பிரிட்டிஷாரின் 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின் கீழ் 1938 இல் பிரிட்டி ஷாரோடு சமரசம் செய்து கொண்டு, தமிழ் மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முன் வந்தது. காங்கிரஸ் முதல்வராக பதவிக்கு வந்த ராஜகோபாலாச்சாரி பார்ப்பனர் (ராஜாஜி) - பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக இந்தியைப் புகுத்தினார். 10 பேர் கொண்ட அமைச்சரவையில் 4 முக்கியப் பொறுப்புகளில் பார்ப்பனர்களை நியமித்தார். ஒழுக்கக் கேடாக செயல்பட்டார் என்று காங்கிரஸ் கட்சியிலிருந்து 5 ஆண்டுகள் நீக்கப்பட்டிருந்த டி. எஸ். எஸ். ராஜன் என்ற பார்ப்பனரை அழைத்து அமைச்சராக்கினார். இலவசக் கல்வித் திட்டத்தை ரத்து செய்தார். வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை முடக்கப் பட்டது. உயர் பதவிகளில் பார்ப்பனர்களே நியமிக்கப்பட்டனர். அரசு கடிதம் - பதிவேடு களில் ‘திரு’ என்று போடுவதற்கு பதிலாக ‘ஸ்ரீ’ என்றே போட உத்தரவிட்டார். விசுவ கர்ம சாதியார் பெயருக்குப் பின்னால் ‘ஆச்சாரி’ என்று போடக்கூடாது. ‘ஆசாரி’ என்றே போட வேண்டும் என்று உத்தரவிட்டார். (ஆச்சாரி என்றால் பார்ப்பனரைக் குறிக்கும் என்பதால்) பார்ப்பன மனுதர்ம ஆட்சியையே அன்று காங்கிரஸ் ஆட்சி நடத்தியது.

• மீண்டும் ‘சுதந்திர’ இந்தியாவில் 1952 இல் காங்கிரஸ் பதவிக்கு வந்தபோது, ராஜகோபாலாச் சாரியே முதல்வர். 15000 ஆரம்பப்பள்ளிகளில் 6000 பள்ளிகளை நிதி இல்லை என்று கூறி மூடினார். குழந்தைகள் அப்பாவின் தொழிலை பள்ளியில் கற்றுக் கொள்ள உத்தரவிட்டார். அரை நேரம் படிப்பு; அரை நேரம் அப்பாவின் தொழிலை கற்கவேண்டும்; மீண்டும் குலத் தொழில் செய்யும் நிலையை உருவாக்கினார்.

• “சாதி முறை ஒழிய வேண்டும் என்று பலர் குறை கூறுகிறார்கள். அதை ஒழிக்க முடியாது. நன்கு யோசித்துத்தான் நமது முன்னோர்கள் வர்ணஸ்ரம முறையை வகுத்துள்ளார்கள். அதன்படி அவரவர்கள் தங்கள் முறைக்கேற்றவாறு நடந்து மக்களுக்கு தொண்டு புரிய வேண்டும்” என்று கரூரில் காங்கிரஸ் தலைவர் ராஜகோபாலாச்சாரி வெளிப்படையாகவே பேசினார். (‘சுதேச மித்திரன்’ 29.1.61) பெரியார் போராடி பார்ப்பன ஆட்சியை ஒழித்தார்.

• பிறகு பெரியார் ஆதரவுடன் காமராசர் முதல்வரா னார்; அவரது ஆட்சிதான் தமிழரின் பொற்கால ஆட்சியாக இருந்தது. தமிழ் மண்ணின் உளவியலைப் புரிந்து, தமிழர்களுக்கான ஆட்சி நடத்தினார். டெல்லி ஆட்சியின் உத்தரவுகள் தமிழகத்துக்கு எதிராக இருந்தால் செயல்படுத்த மறுத்தார். தமிழர் அடையாளத்தோடு இருந்த வரை வெற்றிகளைக் குவித்த காமராசர், மீண்டும் அகில இந்திய அரசியலுக்குள் நுழைந்தபோது, காங்கிரஸ் பார்ப்பனத் தலைமை அவரை அவமதித்தது; புறக்கணித்தது. இந்திரா அவரை கட்சியிலிருந்தே நீக்கினார். தமிழகத்தில் காமராசர் கட்டி எழுப்பிய ஆட்சியும் 1967 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது.

• எந்த அகில இந்திய தலைமை - இந்திராவின் தலைமை - காமராசரை புறக்கணித்தோ அந்தத் தலைமையுடன் கைகுலுக்கி, காமராசரின் காங்கிரசை வீழ்த்த, கலைஞர் கருணாநிதி, 1971 இல் இந்திராவுடன் கூட்டணி அமைத்தார்.

• அதே கலைஞர் கருணாநிதியின் ஆட்சியை இந்திராவின் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தான் கவிழ்த்து, ‘மிசா’வின் கீழ், தி.மு.க.வினரை கைது செய்து, ஓராண்டு சிறையில் அடைத்து, தி.மு.க. ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, சர்க்காரியா விசாரணை ஆணையத்தை அமைத்தது. தொடர்ந்து பதவிக்கு வந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா ஆட்சி, இரண்டு ஆண்டுகளில் கவிழ்ந்தவுடன், மீண்டும், காங்கிரசுக்கு நட்புக்கரம் நீட்டினார், கலைஞர் கருணாநிதி. ‘நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக!’ என்றார். அதே ‘துரோக மரபு’ இன்றும் தொடருகிறது.

• ஈழத் தமிழர் இனப்படுகொலைகளுக்கு காரணமான சிங்கள ராணுவத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்துவரும் சோனியாவை சொக்கத் தங்கம் என்கிறார்; கலைஞர் கருணாநிதி.

• சோனியா ஆட்சி அமைக்க தமிழர்களின் வாக்குகளைக் கேட்கிறார்;

• முல்லைத் தீவில் - ஒவ்வொரு நாளும் மரண ஓலங்கள்;

• கொத்து கொத்தாய் செத்து மடியும் தமிழர்கள்;

• உணவு இல்லை; மருந்து இல்லை; சிகிச்சை இன்றி - குண்டுவீச்சில் கைகால்களை இழந்தவர்கள் துடிதுடித்துச் சாவும் அவலங்கள்;

• இந்த கொடுமைகளுக்கு, இன அழித்தலுக்கு சிங்கள அரசுக்கு நிதியுதவியும், ஆயுத உதவியும், போர் பயிற்சியும் தரும் சோனியாவின் காங்கிரசு மீண்டும் பதவிக்கு வரவேண்டுமா?

• தமிழக ராமேசுவரம் மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு, கைது செய்வதையும், படகுகளை தாக்குவதையும், மீனவர் வாழ்வாதார உரிமைகளை நசுக்குவதையும், தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் - சிங்கள கப்பல் படைக்கு இந்தியா ஆயுத உதவி செய்யலாமா? இது பற்றி கவலைப்படாத சோனியாவின் காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வரலாமா?

தமிழர்களே! தமிழர்களே! காங்கிரஸ் பகையையும் அதற்கு துணைப்போகும் தி.மு.க. துரோகத்தையும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்து பாடம் புகட்டுவீர்!

1 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in