மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி1000 கழகத்தினர் கைது
ஈழத்தில் போர் தொடருவதற்கு துணை நின்று தமிழகத் தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு, தமிழகம் வந்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பெரியார் திராவிடர் கழகம், கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை எழுச்சியுடன் நடத்தியது.
தமிழகம் முழுதுமிருந்தும் 1000 கழகத் தோழர்கள் கருப்புக்கொடி காட்ட திரண்டு வந்தனர். பெரியார் திராவிடர் கழகம் முதலில் போராட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, ஈழத் தமிழர் பாதுகாப்புக் குழுவின் சார்பில், அதன் அமைப்பாளர் பழ.நெடுமாறன், பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்தார். ஜன. 8 ஆம் தேதி காலை 7 மணியிலிருந்து கழகத் தோழர்கள் ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ள பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட சைதை பனகல் மாளிகை அருகே திரளத் தொடங்கினர்.
கோவை, பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர், சேலம், மேட்டூர், கொளத்தூர், ஏற்காடு, பவளத்தானூர், நெமிலி, தர்மபுரி, ஈரோடு, கோபி, பவானி, சத்தியமங்கலம், புதுவை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கழகத் தோழர்கள் திரண்டு வந்தனர். பகுதி முழுதும் கருஞ்சட்டைக் கடலாக காட்சி அளித்தது. துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் பொதுச்செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட 900 தோழர்கள் கருப்புக்கொடி ஏந்தி, ‘மன்மோகன்சிங்கே திரும்பிப் போ!’ என்ற முழக்கத்துடன் திரண்டனர். 20 பெண்களும் பங்கேற்றனர். ஈழத் தமிழர் ஆதரவு ஒருங்கிணைப்புக் குழு பழ. நெடுமாறன் தலைமையில் தோழர்கள் தியாகு, இராசேந்திர சோழன், தேனிசை செல்லப்பா, பாவலர் இராமச்சந்திரன், குமரிநம்பி, வைகறை, மெல்கியோர், கவிஞர் தமிழேந்தி, அற்புதம் அம்மாள், பா.ஜெயப்பிரகாசம் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் திரண்டிருந்தனர். அனைவரையும் காவல்துறை கைது செய்தனர். இரண்டு திருமண மண்டபங்களில் தோழர்கள் தங்க வைக்கப்பட்டனர். பிற்பகல் 3 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி வீழ்ச்சி நிலையானதா?
தமிழர்களின் அரசியல் தலைநகரமாக கம்பீர மாக நின்ற கிளிநொச்சி, இப்போது ராணுவத்தின் பிடியில். இலங்கை ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்தபோது, சில நாய்கள் மட்டுமே தென்பட்டன. மக்கள் முழுதும் வெளியேறி விட்டார்கள். மக்களும் புலிப்படையும் இல்லாத மண்ணைப் பிடித்துள்ளது, சிங்கள ராணுவம்.கிளிநொச்சியின் வரலாறு என்ன? முதலாவது ஈழப்போரில் யாழ் மாவட்டம் முழுதும் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தபோது, கிளிநொச்சி நகரம் மட்டும் ராணுவத்தின் வசம் இருந்தது. இலங்கை ராணுவ தளபதி டென்சில் கொப்பேகடுவ - 1984 இல் கிளிநொச்சியில் முகாமிட்டு, விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வழி நடத்தி வந்தார். 1985 இல் கிளிநொச்சியில் ராணுவம் முகாமிட்டிருந்த காவல் நிலையத்தில் குண்டுகள் நிரப்பிய வாகனங்களை செலுத்தி, புலிகள் பெரும் தாக்குதலை நடத்தினர். ராஜீவ் காந்தி தமிழர்களைக் கொன்று குவிக்க அனுப்பி வைத்த இந்திய ராணுவமும், கிளிநொச்சியில் கடும் பாதிப்புகளை உருவாக்கியது.
இந்திய ராணுவம் வெளியேறிய பிறகு, ஈழத்தில் இரண் டாம் கட்டப் போர் தொடங்கியது. கிளிநொச்சி யைப் பிடிக்க விடுதலைப்புலிகள் தீவிரமான தாக்குதல்களைத் தொடங்கியபோது, இலங்கை ராணுவம் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கி, ஆணையிறவுக்கு தப்பிச் சென்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் முழுப் பகுதியும் புலிகள் கட்டுப் பாட்டில் வந்தது.1996 இல் சந்திரிகா பிரதமராக இருந்தபோது கிளிநொச்சியை மீட்க ‘சஞ்ஜெய’ என்ற பெயரில் மூன்று கட்ட ராணுவ நடவடிக்கைகளை மேற் கொண்டார். கிளிநொச்சி மீண்டும் வரும் நிலையில் ஆக்கிர மிக்கப்பட்டது. 1997 இல் விடுதலைப் புலிகளின் கடற்படை வலிமை பெற்றது. ராணுவம் யாழ்ப்பாணக் கடல் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு புலிகள் தாக்குதல்கள் நடந்தன. எனவே யாழ்ப்பாணத்துக்கு தரைவழிப் பாதையைத் தேட ஆரம்பித்த ராணுவம், ‘ஜெயசிங்குறு’ என்ற ராணுவ தாக்குதலை மேற்கொண்டது. வவுனியாவி லிருந்து கிளிநொச்சி வரையுள்ள தரைவழிப் பாதையை விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்பதே, இந்தத் தாக்குதல் நோக்கம். ‘ஏ9’ பாதை வழியாக ராணுவம் தாக்குதலுக்கு வந்தபோது, விடுதலைப் புலிகள் எதிர்ப்பு தெரிவிக்காமல் உள்ளே அனுமதித்தனர். வழியிலுள்ள மாங்குளம் என்ற ஊரைக் கடந்து, கிளிநொச்சிக்கு ராணுவம் எதிர்ப்பே இன்றி நுழைந்து அங்கே முகாமிட்டது. ராணுவத்தின் மற்றொரு பிரிவு எதிர்ப்பே இன்றி மாங்குளம் வந்தது. உள்ளே நுழைய விட்டு ராணுவத்தினரை வெளியேற முடியாமல் சுற்றி வளைத்து, விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் ராணுவம் பலத்த உயிர்ச் சேதத்துடன் பின்வாங்கி ஓடியது. புலிகள் நடத்தி அத்தாக்குதலுக்கு ‘ஓயாத அலைகள்-2’ என்று பெயர்.
மீண்டும் கிளிநொச்சி புலிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1999 நவம்பரில் விடுதலைப்புலிகளின் ஓயாத அலைகள் - 3 தாக்குதல் தொடங்கியது. ஆணையிறவு புலிகள் வசமானது. விமானப்படை, தரைப்படை, கப்பல் படை என்று முப்படையினரும் முகாமிட் டிருந்தும், ஆனை யிரவை ராணுவத்தால் தக்கவைக்க முடியவில்லை.இந்தியாவின் ராணுவ உதவிகள், ராணுவ பயிற்சிகள், ராணுவ ரீதியான ஆலோசனைகளோடு ‘ராடார்’ கருவிகளைப் பொருத்தி, உளவுத் தகவல்களையும் சிங்கள ராணுவத்துக்கு வழங்கி வரும் நிலையில் சீனா, பாகி°தான், இந்தியாவின் ராணுவ உதவியோடு சிங்கள ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்துள்ளது.இந்திய ராணுவம் சென்றிருந்தபோது விடுதலைப்புலிகள் இடம் பெயர்ந்த முல்லைத் தீவில் மீண்டும் புலிகள் மக்களோடு இடம் பெயர்ந்துள்ளனர்.
கடலூரில் மாநாடுபோல் நடந்த கூட்டம்!
‘நெருப்பின் நடுவில் தமிழினம்’ என்கிற தலைப்பில் கூட்டம் கடலூரில் 28.12.08 ஞாயிறு மாலை 6 மணி யளவில் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத் தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் கு,.இராமகிருட்டிணன் தலைமை வகித்தார்.உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், இயக்குனர் மணிவண்ணன், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளருமான தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், பெரியார் திராவிடர் கழக புதுவை மாநிலத் தலைவர் லோகு. அய்யப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கடலூர் மாவட்ட கழகத் தலைவர் வெங்கடேசு நன்றி கூறினார்.
கூட்டம் தொடங்குவதற்கு முனபே அரங்கு முழுவதும் மக்கள் நிறைந்திருந்தனர். ஈழத் தமிழர் கண்ணீர் காட்சி குறுந்தகடு திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து கூட்டம் மிக எழுச்சியோடு நடைபெற்றது.கூட்டத்திற்கு சீர்காழியிலிருந்து 20-க்கும் மேற்பட்ட தோழர்கள் வேனில் வந்திருந்தனர். புதுவையிலிருந்து 25 தோழர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக வந்தனர். கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வடலூர் கலியமூர்த்தி, கடலூர் நகர மன்ற துணைத் தலைவர் தாமரைச்செல்வன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர்கள் திருமேனி, அறிவுடைநம்பி, கழகத் தோழர்கள் பொள்ளாச்சி பிரகாசு, விழுப்புரம் மாவட்ட தலைவர் நடராசன், சிற்பிராசன், மயிலாடுதுறை மகேசு, சீர்காழி பெரியார் செல்வம் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தலைமை செயற்குழு உறுப்பினர் கு. அழகிரி மிகச் சிறப்பாக செய்திருந்தார். கூட்டம் நடத்த தோழர் திருமால் பேருதவியாக இருந்தார். 50-க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் என்.ஆர். என்கிற என். இராமலிங்கம் இரவு உணவு அளித்தார்.
செய்தி : பொள்ளாச்சி பிரகாசு
இதன் பிறகும் இந்த அரசு இருக்கத்தான் வேண்டுமா...!
‘ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம்’ என்ற பெயரில், நிராயுத பாணிகளான அப்பாவித் தமிழர்களின் ரத்தத்தைத் தொடர்ந்து குடித்துக் கொண்டே இருக்கிறது இலங்கை ராணுவம். ‘ஒரு தமிழனைக் கொன்றால் நூறு சிங்கள ஓட்டு கிடைக்கும்’ என்பதே தங்கள் சூத்திரம் என இலங்கை அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இப்போது, ‘புலிகளின் கோட்டை எங்கள் கைவசம்’ என்ற கொக்கரிப்பையும் கேட்க முடிகிறது. கோட்டையைப் பிடிக்கும் அந்த முயற்சியில் அப்பாவித் தமிழர்கள் எத்தனை ஆயிரம் பேர் வேட்டையாடப்பட்டார்களோ!இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கப் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ராஜினாமா மிரட்டல், சர்வ கட்சிக் கூட்டம், டெல்லிப் பயணம் என்று தமிழகத் தலைவர்கள் எடுத்துக் கொண்ட எந்த முயற்சிக்குமே மத்திய அரசு கடைசி வரை செவி சாய்க்கவில்லை. நம் ராணுவ அதிகாரிகள் அங்கு சென்று பயிற்சி தரும் தகவலையும் மத்திய அரசு மறுக்கவில்லை.
‘மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்கிறோம்’ என்று கொடுத்த வாக்குறுதியைக்கூடத் தந்திர மாகத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறது டெல்லி.இதையெல்லாம் பார்க்கும்போது, ‘புலிகளை நாங்கள் முழுவதுமாக ஒடுக்கி விடுகிறோம். அதுவரை உங்கள் தேசத்து மக்களைத் திசை திருப்பும் வகையில் கண்ணாமூச்சி அரசியல் நடத்திக் காலத்தைக் கடத்துங்கள்’ என்று மத்திய அரசோடு எழுதப்படாத ‘புரிந்துணர்வு ஒப் பந்தம்’ ஒன்றைப் போட்டிருக்கிறதோ இலங்கை அரசு என்ற பலமான சந்தேகம் தான் எழுகிறது!நினைத்ததை எல்லாம் நிபந்தனைகளாக விதித்து, குறித்த நேரத்துக்குள் சாதித்துக் கொள்கிற தமிழக ஆளுங்கட்சி, இந்த விஷயத்தில் எள் முனையளவுகூட எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் வேதனையளிக்கும் நிதர்சனமான உண்மை!‘இதன் பிறகும் இந்த அரசு இருக்கத்தான் வேண்டுமோ?’ என்று பொதுக்கூட்ட மேடையில் முதல்வர் தழுதழுத்த குரலில் எழுப்பிய கேள்வி, தமிழ் மக்களின் காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது!
நன்றி: ‘ஆனந்த விகடன்’ தலையங்கம் 14.1.09
அமைச்சர் டி.ஆர்.பாலுவின் ஆணவப் பேச்சு
தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போகாமல் தமிழர்களை அவமதிப்பதை நியாயப் படுத்துகிறார். வெளிநாட்டுக்கு, “நினைத்தபோது போய் விட முடியுமா? கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து விட முடியுமா?” என்று காங்கிரசார் கூட பேசத் தயங்கும் வார்த்தைகளை தான்தோன்றித்தனமாக கூறி யிருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
நினைத்த போதெல்லாம் போய்விட முடியுமா? என்பது உண்மையானால், உடனடியாக இலங்கைக்குப் போய் போரை நிறுத்தச் சொல்ல வேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர், ஏன் டெல்லி சென்று வலியுறுத்தினார்? ஏன், அனைத்துக் கட்சியினர் தீர்மானம் போட்டார்கள்?டி.ஆர். பாலு, இந்த ஆணவமான பதிலால் அவருக்குப் ‘பதவி பிச்சைப்’ போட்டுள்ள தமிழக முதல்வர் கலைஞரைத்தான் அவமதித்திருக்கிறார். தலை இருக்கும்போது வால்கள் ஏன் ஆடுகின்றன?
டிராக்டர்கள் வேலை நிறுத்தத்தைச் சரியாகக் கையாளாமல் போனதற்காக குட்டு வாங்கி நிற்கும் டி.ஆர்.பாலு, பிரதமரிடம் நம்பிக்கையைப் பெறு வதற்காக இந்த துரோகக் குரலை ஒலிக்கிறாரா?
தீஸ்டா செதல்வாட் - விளக்கம்
வெறுப்பைத் திணிக்கும் மதவெறி கோட்பாடு

‘காம்பட் கம்யூனலிசம்’ ஆசிரியரும், மதவெறி சக்திகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் போராளியுமான தோழர் தீஸ்டா செதல்வாட் டிச.11 அன்று ‘மதச்சார்பற்றோர் மாமன்றம்’ சார்பில் சென்னையில் ஆற்றிய உரை.
நம் நாடு சுதந்திரம் அடைந்துவிட்ட நிலையில், ஒரு அறுபது ஆண்டுகள் அல்லது அதற்குக் கொஞ்சம் மேல் நாம் பின்னோக்கிப் பார்ப்போமேயானால், மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் உண்மையான சவால் என்ன என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோமேயானால், நம்முன் இருக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று, பெரிய அளவில் கட்ட விழ்த்துவிடப்பட்ட வன்முறைக்கு இலக்கானவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் ஏற்பட்ட தோல்வி தான். நம்முடைய நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு இருக்கும் இன்னொரு முக்கிய சவால் நம்முடைய எண்ண ஓட்டங்களும், நம்முடைய மதவெறி தத்துவங்களும் தான் என்று நான் நம்புகிறேன். அவை பெரும்பான்மை சமூகத்துக்கானதாக இருந்தாலும் சரி, சிறுபான்மை சமுதாயத்தினதாக இருந்தாலும் சரி. அது பிரிவினையையும், தனிமைப்படுத்துதலையும், தன் மதக் கொள்கைக்கு எதிரானவர்களை வெறுப்பதையும் தூண்டுகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த நாடு முழுவதும் இதனால் மிகவும் கசப்பான வேதனையை அனுபவித்துள்ளது. ஹிந்து வலதுசாரியினராலும் அவர்களுக்கு இணையான முஸ்லிம் எதிரிகளாலும் இந்த தேசம் பிரிவினையை சந்தித்தது. நாம் அதை 1947ல் எதிர்கொண்டோம். நீண்ட காலத்துக்கு முன்பு முக்கிய ஆங்கில செய்தித்தாள்களும், தொலைக்காட்சி சானல்களும் கொள்கை தத்துவம், சார்ந்த பிரச்சனைகளில் ஆர்வம் காட்டின.
நமது பத்திரிக்கையான கம்யூனலிசம் காம்பாட் இந்த வெறுப்பு சித்தாந்தத்தை துருவித் துருவி ஆராய்ந்தது. அந்த சித்தாந்தம்தான் காந்தியைக் கொன்றதா? அல்லது ஆப்கனில் பாமியான் புத்தர்களை அழித்த சித்தாந்தமா? நண்பர்களே, பாமியான் புத்தர் சிலைகளை அழிப்பதற்கு முன்னர், தாலிபான் தன் மக்கள் மீதே, தன் பெண்கள் மீதே வன்முறையை ஏவிவிட்டிருந்தது. எனவே, அடிப்படைவாதமும், சாதீயமும் அதன் மக்களுக்கே எதிரியாகும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஜாதியைப் புரிந்து கொள்ளாமல் வகுப்பு வாதத்தைப் பற்றிப் பேச முடியாது. திராவிட கலாச்சாரத்தின் இதயமாக இருக்கும் தமிழ்நாட்டின் மக்களுக்கு இந்த நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களைவிட இது மிக நன்றாகவே தெரியும். ஜாதியத்தின் பின்னால் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ள, ஒருங்கிணைக்கப்பட்ட ஹிந்து மத அமைப்பின் கொடூரமான தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் ஹிந்து மதத்தின் ஜாதீய அமைப்பு. அது நம் மக்களையே சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக தள்ளி வைத்தது. தான் மரியாதைக் குறைவாகக் கருதிய மிகக் கடுமையான தொழில்களை எல்லாம் அவர்கள் செய்யும்படிச் சொன்னது.எனவே ஜாதியும், ஜாதிக்கு அடிப்படையிலான வன்முறையும் ஒன்றேதான்.நமது பாராளுமன்றத்தைப் போலல்லாமல், நம் பஞ்சாயத் ராஜ் அமைப்பு பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு தருகிறது.
தலித் மற்றும் முஸ்லிம் பெண்கள், சமூகத்தின் மிகக்கீழ் நிலையில் இருந்த பெண்கள், கிராம அளவிலான அரசியலில் பங்கெடுக்கும் வாய்ப்பைக் கொடுத்தது. ஆனால் நமது மதச்சார்பற்ற ஜனநாயகம் எப்படிப்பட்டது?ஜனவரி 26 அன்று முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து அமைப்பைச் சேர்ந்த தலித் பெண் தேசியக் கொடியை ஏற்ற முயற்சித்தால், அவரை நிர்வாணப்படுத்தி அவர் மீது பாலியல் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது அவரது கிராமத்தில். அது ராஜஸ்தானாக இருந்தாலும் சரி, மகாராஷ்டிராவாக இருந் தாலும் சரி, மத்தியப் பிரதேசமாக இருந்தா லும் சரி, இதே கதை தான். ஏனெனில் ஒரு தலித் பெண்ணானவள் தேசம், தேசியம், தேச ப்பற்று இதிலெல்லாம் உரிமை கொண்டாடக் கூடாது என்று அது கருதுகிறது. சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டு களுக்கு மேலாகியும் உண்மையான, உயிர்த்துடிப்புள்ள ஜனநாயகத்தை அடைய நாம் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துகிறோம், நமது தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம். ஆனாலும் நமது சூழ்நிலை என்ன? முஸ்லிம் சமுதாய மக்கள் பொருளாதார, சமூக ரீதியாக உரிமைகள் மறுக்கப்படு கிறார்கள், கடந்த 55 ஆண்டுகளாக அவர்கள் நிலை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டு போகிறது என்பதை சச்சார் கமிட்டி அறிக்கை காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் 7000 குழந்தைகள் பசி, பட்டினியால் இந்தியாவில் இறந்துபோகின்றனர். பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றூம் குஜராத்தில் உள்ள வசதி படைத்த மேல்தட்டு மக்கள் பிரிவினரால் பெண் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரே, கருவறையிலேயே கொல்லப்படுகிறார்கள். மக்களில் பெரும்பான்மையானோருக்கு பொருளாதார, சமூக உரிமைகளை வழங்காத இந்த ஜனநாயகம் எந்த வகையானது? இந்த தருணத்தில் இதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.குற்றங்களுக்கு தண்டனை வழங்கி நீதியை நிலைக்கச் செய்யும் அமைப்பின் நீதித்துறை பற்றி இப்போது மறுபடியும் பார்ப்போம்.
நமது செஷன்ஸ் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், ஏன், உச்ச நீதிமன்றத்தில் கூட நிறைய வழக்குகள் இன்னும் தீர்ப்பு சொல்லப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. சராசரியாக, ஒரு சாதாரண குற்றவியல் வழக்கு முடிவுக்கு வர 15லிருந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. சொத்து தகராறு பற்றிய வழக்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு தலைமுறைகளுக்கு நடக்கின்றது. தாமதப்படுத்தப்பட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்று சொல்கிறோம். அப்படியானால், ஒவ்வொரு நாளும் நமது நீதி மன்றங்கள் குற்றம் சார்ந்த வழக்குகளில் நீதியை மறுத்துக்கொண்டே இருக்கின்றன.வரலாற்றில் கும்பல் கும்பலாக வன்முறைகள் நிகழ்த்தப்பட்ட சில முக்கியமான தேதிகளைப் பார்ப்போம். அத்தகைய வன்முறைகள் மக்களில் ஒரு பிரிவினர் மீது மட்டும் ஏன் கட்டவிழ்த்துவிடப்பட்டது? ஏனென்றால் அவர்கள் கூலிக்கு வேலை செய்யும் பிரிவினர், ஏனென்றால் அவர்கள் சிறுபான்மையினர், அவர்கள் தலித்துகள், வன்முறைக்கு இலக்கான அவர்களுக்கு நீதி வழங்கப்படவே இல்லை.1984ல், நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, டெல்லியில் 3006 பேர் கொல்லப் பட்டனர். நாடு முழுவதும் 7000 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் மூன்று பேர் மட்டும்தான் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டனர். கொல்லப்பட்ட சீக்கியர் ஒருவரின் விதவையான தர்பன் கௌர் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் எச்.கே.எல். பகத்தால் மிரட்டப்பட்டார். தனக்கு நீதி கிடைக்கும் என்று அவர் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார். 24 ஆண்டுகளுக்கு மேலாகியும்!புது டில்லியிலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் நடத்தப்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான போராட்டங்கள் முடிந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு போபால் விஷவாயுக்கசிவு துன்ப நிகழ்ச்சி நடந்தது.
சட்டத்துக்குப் புறம்பாக பன்னாட்டு கம்பெனியால் கசியவிடப்பட்ட மிதைல் விஷ வாயுவினால் 3000 ஊழியர்கள் இறந்தனர். இன்னும் உயிரோடு இருப்பவர் களும் விஷவாயுக் கசிவினால் ஏற்பட்ட கதிர்வீச்சுகளால் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இதுவரை எந்த இழப்பு ஈடும் தரப்பட வில்லை. பல அரசாங்கங்கள் மாறி மாறி வந்து போயின. இப்போது யூனியன் கார்பைடின் மறு அவதாரம் போன்ற இன்னொரு வகையான ரசாயனம் மகாராஷ்டிராவின் உள்ளே வர, விரிந்த கைகளுடன் அன்புடன் வரவேற்றுள்ளது. இதுதான் உலகமயமாக்கல், இதுதான் தாராளமயமாக்கல்.
ஜட்ஜர், திருநெல்வேலி போன்ற பகுதிகள் தலித்துகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். குற்றவாளிகள் எவ்வளவு பேர் பிடிபட்டுள்ளனர்? எவ்வளவு விழுக்காடு குற்றவாளிகள் கண்டுபிடித்து தண்டிக்கப் பட்டுள்ளனர்?
(தொடரும்)
ஏன்? ஏன்? ஏன்?
அன்றைக்குத் தமிழர்கள், ‘கங்கை கொண்டான்’, ‘கடாரம் வென்றான்’ என்பது மட்டும் பழங்கதையாக வில்லை. இரு மாதங் களுக்கு முந்தைய நம் ஆவேச மும், கொந்தளிப்பும், சவாலும்கூட ‘பழங்கதை’ ஆகிவிட்டதா?தமிழகத்திலும் இலங்கைப் பிரச்னைக்காக இன உணர்வை வெளிப்படுத்தி உண்ணாவிரதம் இருந் தார்கள். சட்டமன்றத்தில் மத்திய அரசுக்குக் ‘கெடு’ விதித்தார்கள். இன்னும் நான்கு மாதங்களுக்குள் நிறைவடையப் போகிற நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறக்கப் போவதாக வசனம் பேசினார்கள். நிதி திரட்டினார்கள். டெல்லிக்குச் ‘சுற்றுலா’ போய் வந்தார்கள். உணர்வு வயப்பட்டுப் பேசியவர் களைத் தூக்கிச் சிறையில்தள்ளினார்கள்.இன உணர்வைக் காப்பதாகச் சொல்லி கவிதையும் எழுதலாம். கூட்டணி தர்மம் அதைவிட மேலோங்கித் ‘தண்டனை’யும் அளிக்கலாம்.
இன உணர்வுக்கு வால்; கூட்டணி உறவுக்குத் தலை.இலங்கை ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்து விட்டதாக அறிவிக்கிறது. முல்லைத் தீவை நோக்கி முன் னேறிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான தமிழர்கள், ஒண்டியிருந்த கொஞ்சம் நிழலையும் இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரபாகரனைப் பிடிக்கும் முயற்சியில் நடக்கும் இந்த இனக் கொடூரத்தை விலகி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.இலங்கை பற்றி எரியும்போது இங்குள்ள கட்சிகள் திருமங்கலத்தில தங்களுக்குள் மோதி துணை ராணுவத்தை வரவழைக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கின்றன. புலி களுக்கு ஆதரவுக்குரல் கொடுப்பது என்பதுவேறு; இலங்கைத் தமிழர் களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது என்பது வேறு.இந்த இரண்டையும் சேர்த்துக் குழப்பி, ஈழத் தமிழர் களின் பிரச்சினையைப் பார்க்க மறுக்கிற எதிர்நிலையில் காங்கிரசுக்கு இங்குள்ள கட்சிகள் எந்தவிதத்திலும் சளைத் தவை அல்ல. இல்லை யென்றால் இவர்களின் மௌனத்திற் கும் செயலற்ற தன்மைக்கும், இயலாமைக்கும் என்ன அர்த்தம்?
நன்றி : ‘குமுதம்’ தலையங்கம் 14.1.2009
சிறை வைக்கப்பட்ட கொளத்தூர் தோழர்கள்
22.12.08 திங்கள் மாலை 5 மணியளவில் கொளத்தூர் பேருந்து நிலையத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான், த.தே.பொ.க. பொதுச்செயலாளர் பெ.மணியரசன் மற்றும் கைதைக் கண்டித்து காவல்துறையின் தடையை மீறி மாவட்ட தலைவர் மார்ட்டீன் தலைமையில், மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் ஆகியோர் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழின விரோதி கே.வி.தங்கபாலு, ஈ.வெ.கி.எஸ். இளங்கோவனின் உருவ பொம்மையை தீயிட்டு எரிக்கப்பட்டது.
தோழர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பெண்கள், மாணவர்கள், ஆதரவாளர்கள் தவிர கழகத் தோழர்கள் 55 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தோழர்களை மண்டபத்திலிருந்து அழைத்து செல்லும்போது தமிழின உணர்வாளர்கள் முழக்கமிட்டு, பட்டாசு வெடித்து பறையடித்து உற்சாகமுடன் வழியனுப்பி வைத்தனர். இந்நிகழ்வு கொளத் தூர் மக்களிடையே பெரும் பரபரப்பையும், வரவேற்பையும் ஏற்படுத்தியது.கைது செய்யப்பட்ட தோழர்கள் 25.12.08 அன்று பிணையில் விடுதலை செய்யப் பட்டனர்.
கைது செய்யப்பட்ட தோழர்கள்: மார்ட்டீன், சக்திவேல், டைகர் பாலன், சூரியகுமார், இளஞ் செழியன், விசயகுமார், இளவரசன், சம்பத் குமார், தர்மலிங்கம், அருள்செல்வம், பெ.சக்திவேல், பிரவின் குமார், கணேசன், ஆனந்தன், இரா.முத்து குமார், இரா.ரவிச்சந்திரன், குமரப்பா, சுரேசுகுமார், தேவராசு, முத்துராசு, பாஸ்கர், செல்வம், நல்ல தம்பி, இராசேந்திரன், சேகர், மந்திரி, குமரேசன், சின்னண்ணன், சக்திகுமார், விசுவநாதன், மூர்த்தி, குமார், சந்திரசேகர், சேட்டுகுமார், பூபதி, கண்ணன், ராமமூர்த்தி, சென்னியப்பன், சுரேசு, இராசன், முனுசாமி, ஆட்டோ செல்வம், முத்துசாமி, நாகராசன், கோவிந்தராசு, பூசாரி (எ) பெரியசாமி, சுப்பிரமணி, ரவி, மோகன்ராசு, வெள்ளையன், குமாரசாமி, எழிலன், குமார், துரை. சுந்தரம், மாது.

‘குடிஅரசு’ ‘விடுதலை’யை தேடுகிறார்களாம்!
இந்திய வரலாற்றில் பார்ப்பனியத்துக்கு எதிராக முதல் புரட்சியைத் தொடங்கியவர் புத்தர். பகுத்தறிவு பொருள் முதல்வாதக் கருத்துகளை முன் வைத்த புத்தத்தை கருத்து முதல்வாதத்தின் பக்கம் திருப்பிடும் பார்ப்பன சதிகள் நடந்தன. புத்தருக்குப் பிறகு ஹீனயான பவுத்தம், மகாயன பவுத்தம் என்று புத்த மார்க்கம் இரு பிரிவுகளாயிற்று.
நாகர்ஜுனன் எனும் பார்ப்பான், மகாயான பவுத்தப் பிரிவைப் பார்ப்பனிய கோட்பாடுகளுக்கு இசைந்ததாக மாற்றி அமைத்துவிட்டான். புத்தர் உருவாக்கிய சமூகப் புரட்சி தடம் புரண்டது.வேதங்களை மறுத்த கலகக் குரல்கள் பலவும் பார்ப்பனியத்தால் பல்வேறு சூழ்ச்சிகளால் வீழ்த்தப்பட்டதை வரலாறுகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
நீலகேசி என்ற சமண காப்பியத்தில் வரும் நீலகேசி என்ற பெண் வேதம் சுயம்புவாகத் தோன்றியது என்ற பார்ப்பன கருத்தியலை மறுத்தார். வேதத்தையும் யாகங்களையும் கடுமையாக சாடும் வாதங்கள் நீலகேசியில் இடம் பெற்றுள்ளன. இப்படி பார்ப்பனர்களை சாடும் வாதங்கள் அடங்கிய வாத சருக்கத்தில் பல செய்யுள்கள் காணாமலே போய்விட்டன.வேத, கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களின் இலக்கியங்களை எல்லாம் பார்ப்பனர்கள் திட்டமிட்டு அழித்தார்கள்.
‘லோகாயதம்’ என்ற தத்துவம், கடவுள் மறுப்பை பேசியது. பார்ப்பனர்களை எதிர்த்தது. லோகாயதவாதிகள் பல நூல்களை எழுதினார்கள். ஆனால், அவைகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. இந்திய தத்துவங்கள் பற்றிய பல ஆய்வு நூல்களை எழுதிய தேவிப் பிரசாத் சட்டோபாத்யாய இவ்வாறு குறிப்பிடுகிறார்:“லோகாயதர்களின் உன்னதப் படைப்பிலயக்கியங்களின் மூலப் படிகள் மீட்கவே முடியாதவாறு அழிக்கப்பட்டு விட்டன. துண்டு துண்டாக வெட்டப்பட்ட சில வரிகள் காணக் கிடைக்கின்றன. அவைகூட லோகாயத எதிர்ப்பாளர்களின் நூல்களில் தான் உயிர்வாழ்கின்றன. அதாவது லோகாயதக் கோட்பாடுகளை மறுத்துரைக்கவும், இகழ்ந்துரைக்கவும் பார்ப்பன நூலாசிரியர்கள் லோகாய வரிகளை மேற்கோள்களாகப் பயன்படுத்தியுள்ள இடங்களில் மட்டும் உயிர் வாழ்கின்றன” - என்று குறிப்பிடுகிறார். (‘லோகாயதா’ நூல்).
பார்ப்பனர்களுக்கு தானம் வழங்கிய நிலங்களையெல்லாம் பறிமுதல் செய்த களப்பிரர்கள் ஆட்சி பற்றிய வரலாற்றுக் குறிப்புகளே இல்லாமல் அழித்துவிட்டு, ‘களப்பிரர் காலம் இருண்ட காலம்’ என்று வரலாற்றை எழுதியவர்கள் பார்ப்பனர்கள்தான். இப்படி வேத பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களும், சிந்தனைகளும், தலைவர்களும் வரலாற்றில் சுவடு இல்லாமல் அழித்தொழிப்புக்கு உள்ளான அவலங்கள் வரலாற்றில் ஏராளம் உண்டு. இந்த வேத பார்ப்பனக் கொடுமைகளை எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மகத்தான பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தை நடத்திய பெரியார் சிந்தனைகளும் இதே விபத்துகளை சந்திக்கிறது என்பது மிகப் பெரும் அவலமாகும்!
பெரியாரும், அவருடைய இயக்கமும் கட்டுப்பாடாக பார்ப்பன ஊடகங்களால் இருட்டடிக்கப்பட்டே வந்த நிலையில்அந்த இயக்கத்தின் எதிர்நீச்சல் பயணத்தை உள்ளது உள்ளவாறே அறிவதற்கான ஒரே ஆதாரமாகத் திகழ்பவை பெரியர் நடத்திய ஏடுகள்தான். அவைகள் மறைந்து விட்டால், அக்கால கட்டங்களில் பெரியார் இயக்கத்தின் வரலாறுகளும் இருண்டு போய் விடுகிறது. பயணத்தின் பாதை தடைபட்டு விடுகிறது. பெரியாரின் எழுத்து பேச்சுகளின் வரலாற்றுப் பதிவுகளை பெரியார் இயக்கம் நடத்துவதாகக் கூறுவோரே, தொலைக்கலாமா? அதைக் கருவூலமாக கண்காணித்துப் பேண வேண்டியவர்களே, அவற்றை எக்கேடு கெட்டுப் போனால் என்ன, என்று அலட்சியப்படுத்தலாமா?
பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரத்தின் நிறுவனர் - திராவிடர் கழகத் தலைவர் என்ற பதவிப் பொறுப்புகளோடு உலாவரும் கி.வீரமணி, கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி ‘விடுதலை’யில் வெளியிட்ட ஒரு அறிவிப்பு இதற்கு சான்றாக விளங்குகிறது!அதை அப்படியே வெளியிடுகிறோம்:
1935, 1936 ஆம் ஆண்டுகளுக்கான ‘விடுதலை’ நாளேடுகள், தங்களிடம் முழுமையாக இல்லை என்கிறார். இதைத் தவிர 12 ஆண்டுகளுக்கான ‘விடுதலை’ நாளேடுகள் பாதிக்கு மேல் அவர்களிடம் இல்லை. இதைவிடக் கொடுமை - 1989, 1990 ஆம் ஆண்டுகளின் ‘விடுதலை’ நாளேடுகள்கூட இவர்களிடம் முழுமை யாக இல்லை என்பதாகும். ‘குடி அரசு’ வார பத்திரிகையோ, 8 ஆண்டுகளுக்கான பத்திரிகை இவர்களிடம் ஒன்றுகூட இல்லை என்பதாகும். இது ஏதோ, இல்லாத பத்திரிகைகள் என்று பார்ப்பது மிகவும் குறுகிய பார்வையாகும். முழுமை யான வரலாறுகளைக் கூறும் ஆவணங் களே இல்லாமல் போவதால் வரலாறு களும் இருட்டுக்குள் தள்ளப்பட்டு விடுகிறது;
இது வரலாற்றுத் துரோகம்!பெரியார் கருத்துக் கருவூலங்களைப் பாதுகாப்பதைவிட பெரியார் இயக்கத் துக்கு முதன்மையான பணி வேறு இருக்க முடியுமா? பெரியார் கொள்கைகளை பரப்புவதுகூட இருக்கட்டும்; அவர் சேமித்து வைத்த அறிவுச் செல்வங்களை பாதுகாக்கவாவது வேண்டாமா? பெரி யாரின் கட்டிடங்களையும், நிலங்களை யும் சொத்க்களையும் பத்திரப்படுத்தினால் போதும். இந்தக் “காகிதங்கள்”, சந்தையில் விலை போகாது என்று கருதி விட்டார்கள் போலும்!இந்த வரலாற்று ஆவணங்கள் தங்களிடம் இல்லை என்பதுகூட - எப்போது இவர்களுக்கு தெரிகிறது?
பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ தொகுப்பு வெளியீட்டு முயற்சிகளுக்குப் பிறகுதான். பெரியார் திராவிடர் கழக செயல்பாட்டை முடக்கத் துடிக்கும் போதுதான் இவ்வளவு பெரியார் நூல்கள் தங்களிடம் இல்லை என்பதே இவர்களுக்குத் தெரிகிறது. பெரியார் திராவிடர் கழகம் இந்த முயற்சியில் இறங்காவிட்டால், இந்த வரலாற்று ஆவணங்களைத் தேடும் முயற்சிகளில் இறங்கியிருக்கவே மாட்டார்கள். பார்ப்பன வேத எதிர்ப்பு வரலாற்றுச் சான்றுகளை அழித்தவர்கள் பார்ப்பனர்கள் தான்! ஆனால், பெரியார் வரலாற்று ஆவணங்களைத் தொலைத்தவர்கள் அது பற்றி இத்தனை ஆண்டுகளாக கிஞ்சித்தும் கவலைப்படாதவர்கள்.
பெரியார் இயக்கத்தின் பெயரைச் சொல்கிறவர்களாகவே இருக்கிறார்கள் என்பது வரலாற்று துரோகம் அல்லவா?பெரியார் திராவிடர் கழகத்தைப் பார்த்து, ‘திரிபுவாதிகள்’, ‘புரட்டர்கள்’, ‘திருடர்கள்’, ‘திம்மன்கள்’ என்று தரம் குறைந்த வார்த்தைகளைத் தேடித் தேடி எழுதும் கி.வீரமணியை கேட்கிறோம்:இப்படி ஒரு அறிக்கை வெளியிடும் நிலைக்கு நீங்கள் வந்திருப்பதே, அவமானம் அல்லவா? பெரியாருக்கு இழைத்த துரோகம் அல்லவா?‘நான் என்ன செய்வது; எனக்கு முன்னால் இருந்தவர்கள் பாதுகாக்கவில்லை’ என்று சமாதானம் சொல்வீர்களேயானால், இதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் இறங்குவதற்கு இவ்வளவு காலம் தேவையா என்ற கேள்விக்கு என்ன சமாதானம் கூறப் போகிறீர்கள்? அதுவும், 1989, 90 ஆம் ஆண்டு ‘விடுதலை’ ஏடுகள் கூட காணாமல் போனதற்கான பழியை எவர் மீது போடப் போகிறீர்கள்? பதில் வருமா?
(புரட்டுகள் உடைப்பு தொடரும்)
இனி எவரும் வெளியிடலாம்
காந்தி நூல்களின் பதிப்புரிமை முடிவுக்கு வந்தது
காந்தியின் கடிதங்கள், நூல்கள், கட்டுரைகளை வெளியிடும் உரிமை ‘நவஜீவன் டிர°ட்’ என்ற அறக் கட்டளையிடம் தான் இதுவரை இருந்து வந்தது. 1919 ஆம் ஆண்டி லிருந்து இந்த அறக்கட்டளைதான் இதற்கான உரிமையை தன்னிடம் வைத் திருந்தது. இதற்கான பதிப்புரிமையை சட்டப்பூர்வமாக, இந்நிறுவனம் தன்னிடம் வைத்திருந்தது. காந்தியின் நூல்களை வெளியிட விரும்பிய நிறுவனங்கள் - இந்த அறக் கட்டளையிடம் அனுமதி பெற்று, நூல்களை வெளியிட்டு, அதற்கான ‘ராயல்டி’யை இந்நிறுனத்துக்கு வழங்கி வந்தன.
1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டம் 22வது பிரிவின்படி, காந்தி புத்தகங்கள் மீதான உரிமை மீண்டும் இந்த அறக்கட்டளைக்கே தொடர்ந்து கிடைத்தது. கடந்த ஜனவரி 2009 முதல் தேதியோடு பதிப்புரிமை பெற்று 60 ஆண்டுகள் முடிந்துவிட்டன. பதிப் பாளர்கள் இறந்து 60 ஆண்டுகளாகி விட்டால் பதிப்புரிமை தானாகவே சட்டப்படி முடிவுக்கு வந்துவிடும் என்பதால் கடந்த ஜனவரி முதல் ‘நவஜீவன் டிரஸ்ட்’ பதிப்புரிமையை இழந்துவிட்டது. இனி, இந் நிறுவனத்தின் அனுமதியின்றியே காந்தி நூல்களை எவரும் வெளியிடலாம். டிரஸ்ட் நிர்வாகிகள் இது பற்றிக் கூறுகையில்,
“காந்தி நூல்களை இனி யார் வேண்டுமானாலும் வெளியிட லாம்; நாங்களும் மலிவு விலையில் வெளியிட்டு பரப்புவோம்” என்று கூறியுள்ளனர்.காந்தி நூல்கள் பரவ வேண்டும் என் பதில் கவலையுள்ள இந்த அறக் கட் டளை நிர்வாகிகளைப் பாராட்டலாம்.
கழகத்தினருக்கும், வாசகர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள். - ஆசிரியர்
கருத்துரிமையைப் பறிக்கும் தமிழக அரசின் சிறையில் கொளத்தூர்மணி, மணியரசன், சீமான் 27 ஆவது நாள் (ஜன.15 வரை)

0 comments: