கருத்துரிமைக்கு தடையா?

முதலீடு இல்லாத தலைசிறந்த வர்த்தகமாக அதிகார அரசியல் மாறி நிற்கிறது என்பது, எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்த அதிகார அரசியலுக்குள் இடம் பிடித்து, செல்வாக்குப் பெற்று, அதை மூலதனமாக்குவதே ‘கவுரவமான பிழைப்பு’ என்ற கலாச்சாரம் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

இந்தச் சூழலில், சமூக அக்கறையோடு, தங்களுக்கான லட்சியங்கள், குறிக்கோள்களோடு ஆர்ப்பாட்ட வர்த்தக அதிகார அரசியலுக்குள் சிக்கிக் கொள்ளாமல், செயல்பட முன்வருவது என்பது மிகவும் அபூர்வமாகும். இத்தகைய ஆரோக்கியமான அரசியல் புரிதலோடு, சுயநலமற்று செயல்படுகிற அமைப்புகளும், இயக்கங்களும் தான் தமிழகத்தின் வலிமையான கருத்துருவாக்க சக்திகள், பொது வாழ்க்கையின் ஆரோக்கியத்துக்கு முழுமையான சமாதி கட்டிவிடாமல் தடுத்து வரும், மக்களின் உண்மையான பிரதிநிதிகள்.

ஆனால், இத்தகைய அமைப்புகளும், குழுக்களும், தமிழகத்தில் காவல்துறை யினரால் குறி வைத்து நசுக்கப்படுகின்றன. இந்த அமைப்புகளின் கருத்துரிமை முற்றாக தடைப்படுத்தப்படுகிறது. காவல்துறை தங்குதடையற்ற அதிகாரத்தை தன்வசம் எடுத்துக் கொண்டு, இந்த அமைப்புகளும், இயக்கங்களும் மக்களிடம் கருத்துக்களைச் சொல்வதற்கான கூட்டங்களுக்கு தடை போட்டு வருகின்றன.சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம், கடந்த வாரம் சென்னை மாநகரில், மூடநம்பிக்கை எதிர்ப்பு தெருமுனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. பகுத்தறிவு சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற துடிப்போடு தன்னை அர்ப்பணித்து, அரும் தொண்டு ஆற்றி வரும் தோழர் சிற்பி ராசன், தனது ‘மாஜிக் கலை’யின் வழியாக, மக்களிடம் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தி, பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்தக் கூட்டங்களுக்கே கூட, சென்னையில் கொளத்தூர், சேப்பாக்கம் பகுதியில் காவல்துறை தடைவிதித்துவிட்டது. கடும் போராட்டம் நடத்திய பிறகே, அனுமதி பெற வேண்டியிருந்தது.

குறிப்பாக - வில்லிவாக்கம் காவல் உதவி ஆணையர் எழுத்து மூலமாக கடந்த மார்ச் 26 ஆம் தேதி பிறப்பித்த தடை ஆணையில், “தோழர் சிற்பிராசன் அவர்கள் நடத்தும் ‘மந்திரமா தந்திரமா’ என்ற நிகழ்ச்சி மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருக்கும் என்று நம்பகரமான தகவல் உள்ளதால் அந்நிகழ்ச்சியை நடத்தக் கூடாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.மக்களிடையே மூடநம்பிக்கைகள் வேகமாகப் பரவி வருவதைப் பற்றி முதல்வர் கலைஞர் அவ்வப்போது பேசியும் எழுதியும் வருகிறார். ஆனால், அவரது ஆட்சியின் காவல்துறை, பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கு தொடர்ந்து முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகையில் நியாயம்?‘புரட்சிகர பெண்கள் விடுதலை மய்யம்’ என்ற பெண்கள் அமைப்பு சென்னையில் காமராசர் அரங்கில் சர்வதேச மகளிர் நாள் கூட்டத்தை நடத்தி, அதில் புரட்சிப் பாடகர் கத்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ‘நக்சலைட் தத்துவங்கள் வளர்ந்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும்’ என்று கூறி காவல்துறை, அதற்கு அனுமதியை மறுத்திருக்கிறது.

தத்துவங்களுக்கே தமிழ்நாட்டில் தடை போடப்பட்டு விட்டதா!? என்று கேட்கிறோம்.அதேபோல் - தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் சார்பில் அரசியல் காரணங்களுக்காக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தோழர் பொழிலன் விடுதலை கோரி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கும், காவல்துறை தடை விதித்துள்ளது. இவைகளை எல்லாம் பார்க்கும்போது இந்திய அரசியல் சட்டம் அடிப்படை உரிமையாக வழங்கியுள்ள கருத்துரிமைகள் - தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாதா என்ற கேள்வியைத்தான் வேதனையுடன் கேட்க வேண்டியிருக்கிறது.தேர்தல் அரசியலில் - கூட்டணி அரசியலில் உள்ள கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் செயல்படலாம்; கூட்டம் போடலாம்; ஆனால் கொள்கைகளையும், லட்சியங்களையும் ஏற்றுள்ள இயக்கங்களுக்கு தமிழகத்தில் அடிப்படை உரிமைகளே கிடையாது என்ற முடிவுக்கு தமிழக காவல்துறை வந்து விட்டதா? இதற்கு தமிழக அரசும் பச்சைக் கொடி காட்டி விட்டதா என்று கேட்க விரும்புகிறோம்.

தொடக்க காலத்தில், தத்துவத் தளங்களில் ஆழமாக தடம் பதித்து நின்ற கழகம் தான் தி.மு.க. அன்றைக்கே இப்படி முடக்கப்பட்டிருந்தால், மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருக்க முடியுமா? இந்தியாவிலேயே தமிழ் மண் சிந்தனைகளும், தத்துவங்களும் விதைக்கப்பட்ட மண் அல்லவா?பெரியார் இயக்கங்களும், பொதுவுடைமை அமைப்புகளும் தங்கள் கருத்துகளையும், தத்துவங்களையும், விவாதங்களையும் மக்கள் மன்றத்தில் கொண்டு வந்து சேர்த்தது இந்த மண்ணில் தான். அந்த வரலாற்றுப் பெருமைகளுக்குரிய மேடைச் சிந்தனைகளையும், மக்கள் சந்திப்பையும், பிரிட்டிஷ்காரன் 1886 ஆம் ஆண்டு கொண்டு வந்த 120 ஆண்டு காலத்துக்கு முந்தைய சட்டங்களைக் காட்டி காவல்துறையின் ஆய்வாளர்களும், துணை ஆய்வாளர்களும் முடக்குவதற்கு இடம் அளிக்கலாமா? கூட்டங்களில் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்று, காவல்துறையினரே கருத்தாளர்களாக அவதாரம் எடுக்கும் நிலை தமிழகத்தில் வந்துவிட்டது, மிகப் பெரும் சோகம்! வாதங்கள் - விவாதங்கள் - தடைபடுத்தப்படும்போதுதான் அது ‘தீவிரவாதமாக’ உருவெடுக்கிறது என்ற அடிப்படை உண்மையை நினைவூட்டுவது நமது கடமையாகிறது.தமிழக முதல்வர் கலைஞர் இதில் அவசரமாக தலையிட்டு காவல்துறைக்கு கடிவாளம் போட வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.அதிகார மோகத்தில் சிக்கி விடாமல் தமிழகத்தில் இன்னும் எஞ்சி நிற்கும் ஆரோக்கியமான இலக்கு நோக்கிய மக்களுக்கான இயக்கங்களை செயல்பட அனுமதியுங்கள்!

135 நாடுகளில் மடிந்து போன மரண தண்டனை

உலகில் 135 நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்டன. 62 நாடுகளில் மட்டுமே தூக்குத் தண்டனை அமுலில் உள்ளது. அதில், இந்தியாவும், பாகி°தானும் அடங்கும். 2006 ஆம்ஆண்டில் 25 நாடுகளில் 1591 பேருக்கு தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்டது. இதில் 91 சதவீத தூக்கு, 6 நாடுகளில் மட்டும் போடப்பட்டுள்ளது. சீனா, ஈரான், ஈராக், சூடான், அமெரிக்கா, பாகி°தான் ஆகியவைகளே இந்த 6 நாடுகள். சர்வதேச மனித உரிமை அமைப்பு இந்த தகவலைத் தெரிவித்துள்ளது. தூக்குத் தண்டனை அமுலில் உள்ளதாலேயே குற்றங்கள் குறைந்து விடவில்லை. அதே நேரத்தில் 1976 இல் கனடா தூக்கு தண்டனையை ஒழித்த பிறகு அந்நாட்டில் கொலைக் குற்றங்கள் 40 சதவீதம் குறைந்துள்ளன. உலகம் முழுதும் அனைத்து நாடுகளும், தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று, டிசம்பர் 18, 2007 இல் அய்.நா. பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியது. இது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.அப்பாவிகள் தூக்குத் தண்டனைக்கு உள்ளாக்கப்படும்போது, அவர்கள் உயிர் மீண்டும் வந்துவிடுமா? நிச்சயம் வராது. அமெரிக்காவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 126 பேர் - பிறகு குற்றமற்றவர்கள் என்று, விஞ்ஞான பூர்வமாகக் கண்டறியப்பட்டு, விடுதலை செய்யப்பட்டனர்.

பாகி°தான், இந்தியா போன்ற நாடுகளில் வழக்குகளும், விசாரணைகளும், எந்த நிலையில் நடக்கிறது என்பது தெரிந்ததுதான். இதனால் தான் வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்ற ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை எதிர்க்கிறார்கள். மறைந்த பாகி°தான் உச்சநீதிமன்ற நீதிபதி தோரப்பட்டேல் என்பவர், தாம் மீண்டும் நீதிபதியானால், ஒருவருக்கும் தூக்குத் தண்டனை தரமாட்டேன் என்று கூறினார். அவர் கூறும் காரணம் - சட்டமும் நீதியும், ஏழைகளுக்கு எதிராகவே இருக்கின்றன என்பதுதான்.ராணுவ தளபதியாக இருந்த ஜியாவுல் ஹக் - பாகி°தானில் ராணுவ ஆட்சி பிரகடனம் செய்தபோது, அதை எதிர்த்து 1981 இல் தனது உச்சநீதிமன்ற நீதிபதி பதவியைத் தூக்கி எறிந்தார் இந்த நீதிபதி. பாகி°தான் மனித உரிமை ஆணையம் என்ற மனித உரிமை அமைப்பை அவர்தான் தொடங்கினார். பாகி°தானில் அவர் தூக்குத் தண்டனைக்கு எதிராக தனது வாழ் நாள் முழுவதும் குரல் கொடுத்தவர்.பாகி°தானைப் போல் இந்தியாவும் தூக்குத் தண்டனையை ஒழிப்பதில் பிடிவாதம் காட்டி வருகிறது. இந்தியாவும் இந்த மனித உரிமைக்கு எதிரான தண்டனையை ரத்து செய்ய தயங்குகிறது. பாகி°தானில் தீவிரவாதக் குற்றம் சாட்டப்பட்ட இந்தியாவைச் சார்ந்த சுராப்ஜித் சிங், தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் இந்தியா, தனது நாட்டில், தூக்குத் தண் டனையை ஒழிக்க வேண்டாமா? அதற்கு முன் நிபந்தனையாக, தூக்குத் தண் டனைக்கு உள்ளாகியுள்ளவர்களுக்காகவாவது, அதை ரத்து செய்ய வேண்டாமா?

நன்கொடை• ஹாங்காங் தோழர் என்.அப்துல் ரகுமான் ரூ.1000-மும்

• ‘நாளை விடியும்’ ஆசிரியர் தோழர் அரசெழிலன் ரூ.250-ம் ‘புரட்சிப் பெரியார் முழக்க’ ஏட்டுக்கு நன்கொடை வழங்கி யுள்ளனர். நன்றி. (ஆர்.)

எடியூரப்பா உருவ பொம்மை எரிப்பு:

தோழர்கள் கைதுநாமக்கல் மாவட்டம், ப. குமார பாளைத்தில் 19.3.2008 அன்று மாலை 6 மணி அளவில் சரவண திரை அரங்கம் முன் துவக்கி வைத்து தி.மு.க. அவைத் தலைவர் தி.கு. சண்முகம் பேசினார். ஒகேனக்கல்லில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிக்க துடிக்கும் கர்நாடக பி.ஜே.பி. எடியுரப்பாவை கண்டித்தும் கூட்டு குடிநீர்த் திட்டம் பல ஆண்டு களாக தருமபுரி, கிருட்டிணகிரி மக்களின் கனவு. அது நம் தமிழ்நாடு அரசு திட்டம். இதை நடைமுறைப் படுத்த கூடாது என்று கர்நாடக கவர்னர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்திய வாட்டல் நாகராஜை கண்டித்தும் பேசினார்.

தோழர் கலைமதி பேசும்போது தான்தோன்றிதனமாக அத்துமீறி நுழைந்த கர்நாடக வெறியர்களை கண்டித்தும், நம் பாரம்பரிய நிலப் பகுதியான பெங்களூரையும், கோளார் தங்க வயலையும் மீட்டெடுக்க தமிழர்களே அணி திரண்டு வாருங்கள் என்றார். நுழையாதே, நுழையாதே, அத்துமீறி நுழையாதே, பி.ஜே.பி.யின் இரட்டை வேடத்தை பாரீர் என்றும், மீட்போம் மீட்போம் பெங்களூரையும், கோலார் தங்க வயலையும் மீட்போம். கைது செய், கைது செய் பி.ஜே.பி. எடியுரப்பாவை கைது செய். இன வெறியை தூண்டும் எடியுரப்பாவை கைது செய். அடக்கி வை, அடக்கி வை. பி.ஜே.பி. அத்வானியே எடியுரப்பாவை அடக்கி வை. அடக்க உன்னால் முடியா விட்டால் அடக்கி காட்டும் பெரியார் தி.க. விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள் என்று ஊர்வலத்தில் முழக்கமிட்டு வந்தனர்.

பேருந்து நிலையம் அருகில் தோழர்கள் எடியூரப்பா உருவ பொம்மையை எரிக்க மு7யலும் போது காவல் துறையினர் பிடுங்க, தடுக்க முயன்றனர். உருவ பொம்மையை தோழர்கள் செருப்பால் அடித்தனர். காவல் துறையிடம் சண்டையிட்டு பிடுங்கி தீயிட்டு கொளுத்தினார்கள். பின்னர் அனை வரையும் கைது செய்வதாக சொன்னார்கள். போராட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்டத் தலைவர் தி.க. கைலாசம், முன்னிலை வகித்த மாதுராசு, மாவட்ட செயலாளர் மு. சாமிநாதன், கழக சொற்பொழிவாளர் கீசகன், ஈ°வரன், அ. கலைமணி, தி.மு.க., தி.கு.ச. மணிமாறன், குமார், அசோக், சின்னகுமார், ரமேசு, தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தோழர் ந. ஆறுமுகம், சமர்ப்பா கலைக்குழு குமரேசன், இந்திய இளைஞர் இயக்கம் பகலவன், இலக்கிய தல ந. அன்பழகன், மனித உரிமைக் கழகம் செல்வராசு, தமிழன் ஓவியர் பழனிச்சாமி பவானி, தோழர் விடுதலை வலையல் சண்முகம் உட்பட 20க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் இரவு 8 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர். போராட்ட வேலைகளையும், தோழர் களை திரட்டியும் அசோக் மா. கலைமதி ஆகியோர் மிக சிறப்பாக செயல்பட்ட னர். அனைவருக்கும் தி.மு.க. கலைமணி தேனீர் விருந்து அளித்தார்.

செய்தி: மு. சாமிநாதன்

0 comments: