பெரியார் சிந்தனைகள் தமிழர்களின் சொத்து! - தோழர் தியாகு முழக்கம்

பெரியார் தமிழ்நாட்டின் சொத்து. பெரியார் அறிவுக் களஞ்சியம் தமிழர்களின் சொத்து என்று குறிப்பிட்ட தோழர் தியாகு, ‘குடிஅரசு’ கால வரிசைத் தொகுப்பு காலத்தின் தேவை என்று வலியுறுத்தினார்.வீரமணியைக் கண்டித்தும், பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்கக் கோரியும், 25.8.2008 அன்று சென்னையில் நடந்த கழக ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுப் செயலாளர் தோழர் தியாக ஆற்றிய உரை:

தந்தை பெரியார் வாழ்க்கை முழுவதிலும் எதிர்ப்பு களைச் சந்தித்து வந்தவர். எதிர்ப்புக் கண்டு அஞ்சாதவர். எப்போதும் பெரியாருடைய பாதை சரளமானதாக, தடையற்றதாக இருந்ததில்லை. அதற்கு பொருத்த மாகவே இப்போது பெரியாரின் கருத்துகளை கால வரிசைப்படி ‘குடிஅரசு’ தொகுப்புகளாக வெளியிடும் முயற்சிக்கும் தடைபோட துடிக்கிறார்கள். பெரியாருடைய கூட்டங்களுக்கும், உரை வீச்சுகளுக்கும், பார்ப்பனர்கள், சனாதனிகள், ஆட்சியாளர்கள் தடை போட்டார்கள். இப்போது பெரியாருடைய நூல்களை வெளியிடுவதைத் தடுப்பது வரலாற்றில் மிகப் பெரும் பின்னடைவு. இது பெரியார் திடலிலிருந்தே வந்திருக் கிறது என்பதுதான் வேதனை. பெரியாரின் நூல்கள் வெளி வரப்போகிற செய்தி தமிழ் நாடெங்கும் தெரிய வேண்டும். அக்கரையுள்ள எல்லோருக்கும் தெரிய வேண்டும்.
பெரியார் திராவிடர் கழகம் செய்திருக்கிற பரப்புரை, விளம்பரம் போதுமானதல்ல என்று கருதியோ என்னவோ இந்தச் செய்தியை விளம்பரப்படுத்துவதற்கு நேரடி உதவி செய்திருக்கிறார் வீரமணி. அவருக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். (கைதட்டல்)எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அவர் கூறியிருக்கிற காரணங்கள் என்ன? முதலாவதாக இவைகளுக்கெல்லாம் அறிவுசார் காப்புரிமையை கோருகிறார். இது மிகவும் வேடிக்கையானது. சட்டம் என்ன சொன்னாலும் அதை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும். தோழர் கொளத்தூர் மணி ‘நல்லது சந்திப்போம்’ என மிகப் பொருத்தமாக பதிலளித்து இருக்கிறார்.

நாம் சொல்ல விரும்புவதெல்லாம் பைபிள் என்கிற புதிய நூலுக்கு அறிவு காப்புரிமை கோரவில்லை. போப் பாண்டவர் பார்த்துத்தான் பைபிள் வெளியிட வேண்டுமென்றால் உலகத்தில் இத்தனை மொழிகளில் பைபிள் வெளி வந்திருக்காது. தமிழிலேயே எத்தனை மொழிப் பெயர்ப்புகள் வந்திருக்கின்றன தெரியுமா? இவைகளை எல்லாம் போப் ஆண்டவர் அங்கிகரிக்க வேண்டும் என்றால் பைபிள் உலகிலே பரவியிருக்காது.
மார்க்சின் ‘மூலதனம்’ தொகுப்பு அவருடைய வாழ்நாளில் ஒரே ஒரு தொகுதிதான் வெளிவந்தது. ஆங்கிலத்தில் அதை ஏங்கல்சு மொழி பெயர்த்து வெளியிட்டார். மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில், மார்க்சும், ஏங்கல்சும் மறைந்த பிறகு தான் மற்ற தொகுப்புகளும், தொகுதிகளும் வந்தன. மாஸ்கோவிலிருந்து மூலதன நூலின் மொழி பெயர்ப்புகள் வெளி வந்திருக்கின்றன. அந்த மொழி பெயர்ப்புகளில் நிறைய தடைகள், இடையூறுகள் இருப்பதாகக் கருதி வேறு மொழிப் பெயர்ப்புகள் இருக்கின்றனவா எனத் தேடினோம். ‘பென்குயின்’ என்ற முதலாளித்துவ வெளியீட்டு நிறுவனம், மிகப் பெரிய பொருளியல் வாதியான மார்க்சின் ‘மூலதனம்’ முழுமையும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறது. அதை வைத்துத் தான் நாங்கள் தமிழில் மொழி பெயர்த்து மூலதனம் முழுவதையும் சீர் செய்தோம். இப்படி மார்க்சு, ஏங்கல்சு, லெனின் ஆகியோர்களுடைய நூல்கள் எல்லாம் உலகில் பல பதிப்பகங்கள் வெளியிட்டிருக் கின்றன. முறையாக தொகுத்தும், வகுத்தும், பகுத்தும் பதிப்பித்து வெளியிட்டிருக் கிறார்கள் அழகிய அச்சு வடிவிலே. இதற்கெல்லாம் அன்றைக்கு சோவியத் அரசோ, மற்றவர்களோ தடை போட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால் சோவியத் யூனியனுக்கும், சீனாவுக்குமான உறவு பிரிந்ததற்கு பிறகு எழுதின நூல்களையெல்லாம் சீனாவிலிருந்து புதி தாக மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டார்கள். இதற்கு யாரும் அறிவு சார் காப் புரிமை கோரவில்லை.
நம்மைப் பொருத்தவரை தந்தை பெரியார் தமிழ்நாட்டினுடைய லெனினாக, தமிழ் நாட்டினுடைய தேசிய தந்தையாக நாம் மதிக்கிறோம். இந்தியாவிற்கு எப்படி காந்தியை முக்கியமாகக் கருதுகிறார்களோ, அதுபோல் தமிழ்நாட்டிற்கு தந்தை பெரியார் தான். பெரியார் தமிழ்நாட்டின் சொத்து. பெரியாருடைய அறிவுக் களஞ்சியம் என்பது நம்முடைய சொத்து. அவர்கள் ஒரு திடலை, ஒரு கட்டிடத்தை ஒரு சிலையை சொந்தமாக வைத்துக் கொள்ளட்டும். நமக்கு கவலை இல்லை.

பவுத்தம் என்பது போருக்கெதிரான - சிந்தனைதான். ஆனால் சிங்கள பவுத்தவாதிகள் தமிழர்களுக்கு எதிராக போர் வெறி பிடித்து அலைகிறார்கள். அவர்களிடம் என்ன யிருக்கிறது என்றால், புத்தருடைய பல் இருக்கிறது. ஒரு இடத்திலே புத் தருடைய முடியை வைத்திருக்கிறார்கள். ஆனால் பவுத்தம் அவர்களிடம் காணாமல் போய் விட்டது. அந்த பவுத்தத்தை பெரியாரும், அம்பேத்கரும் தான் இந்த நாட்டுக்குரிய, மக்களுக்குரிய கருத்துகளாக வழங்கினார்கள்.புத்தருடைய பல்லையும், முடியையும் வைத்துக் கொண்டு - பவுத்தர்களாக உரிமை கோரும் சிங்களர் - பவுத்தத்தின் சிந்தனைக்கு எதிராக போர் வெறி பிடித்து அலைகிறார்கள். இங்கே பெரியாருடைய உடைமைகளை வைத்திருப்போர் - பெரியார் நூல்களை வெளியிட தடை கோருகிறார்கள். அம்பேத்கருடைய நூல்களை மராட்டிய அரசு ஆங்கிலத்திலே வெளியிட்டது மட்டுமல்ல, தமிழிலேயும் அரசு துணையோடு வெளியிட்டது. நானும் ஒரு சில தொகுதிகளை மொழி பெயர்த்து கொடுத்திருக்கிறேன். இப்படி நூல்கள் எல்லாம் பரவிக் கொண்டிருக்கிறது.தந்தை பெரியாருடைய கருத்துகளுக்கு அவருடைய சொற்களில், அவருடைய பதப் பிரயோகத்தில் கால வரிசைப்படியான சிந்தனையில் தான் பணி மலர்ச்சியை புரிந்து கொள்ள முடியும். அப்படி வெளியிடப்படாத ஒரு பிழை இருக்கிறது. அந்த வரலாற்றுப் பிழையை நிறைவு செய்கிற முயற்சியை பெரியார் திடலே செய்திருக்கு மானால் நாம் மெத்த மகிழ்ந்திருப்போம். அப்படி அவர்கள் செய்யத் தவறியிருக்கிற நிலையிலேதான் அவர்கள் அறிக்கையிலே கூறியிருப்பதைப் போல பல ஆண்டுகளுக்கு முன்பு இவற்றையெல்லாம் முறைப்படி எழுதி ஒப்படைத்தும்கூட அவற்றை வெளியிட முயற்சி செய்யாத நிலையில் பெரியார் திராவிடர் கழகம் அரும்பாடுபட்டு ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளிக் கொண்டு வர முயல்கிறது. தந்தை பெரியாருடைய தமிழ்நாடு தமிழருக்கே என்பதை உயிர் முழக்கமாக கொண்டிருக்கிற எங்களது ‘தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்’ இதற்காக நன்றிப் பாராட்டுகிறது. ஒவ்வொரு தமிழனும் பெரியார் திராவிடர் கழகத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். வீரமணி அவர்களும் நன்றி சொல்லியிருந்தால் கண்ணியமான, மரியாதையாக இருந்திருக்கும். அதற்கு பதிலாக வீரமணி கண்டுக் கொள்ளாமலாவது இருந்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் அவர் விளம்பரம் கொடுக்கிறார். இவைகளை எல்லாம் தடை செய்வேன், நடவடிக்கை எடுப்பேன் என்கிறார். இது தேவையில்லாத வேலை.நாங்கள் பெரியார் நூல்களை வெளியிடவில்லையா என்று வீரமணி கேட்கிறார். நீங்கள் எதையுமே வெளியிடவில்லை என்பதல்ல எங்கள் வாதம். நீங்கள் சுவரொட்டி அடித்து விளம்பரபடுத்தித் தான் நீங்கள் வெளியிட்டிருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. தந்தை பெரியார் காலத்திலேயே அவருடைய எழுத்துக்கள் வெளிவந்தன. எத்தனையோ கூட்டங்களில் பெரியாரே புத்தகங்களையெல்லாம் வண்டிகளில் எடுத்துக் கொண்டு வந்து விற்றுவிட்டு வா என்று சொல்லுவார். திரும்ப வண்டியிலே ஏறுகிற பொழுது எவ்வளவு புத்தகங்கள் விற்றன என்று கேட்பார். முப்பது புத்தகம் விற்றது என்றால், ஆகா முப்பது பேர் படிப்பார்கள் அல்லவா என்று பெரியார் மகிழ்ச்சி யடைவார். அப்படித்தான் தன்னுடைய சிந்தனைகளை பரப்புவதற்கு எளிய முயற்சிகளை செய்தார். பெரியார் காலத்தில் சின்ன சின்ன புத்தகங்கள் வெளி வந்தன. அவைகளை தொகுத்து வெளியிடுகிறபோது தான் பெரியாருடைய சிந்தனை பனி மலர்ச்சியை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
நாம் ஒரு செய்தியை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவாளர்கள், மார்க்சிய வாதிகள், அறிவாளிகள் என்று பிறப்பிலேயே எவனும் பிறப்பதாக நாம் நம்புவதில்லை. பிறந்த பிறகுதான் அறிவு வருகிறது. அதுவும் படிப்படியாகத்தான் வருகிறது. மரத்தடியிலே உட்கார்ந்தால் ஞானம் வந்து விடும் என நாம் நம்புவதில்லை. இது எல்லோருக்கும் பொருந்துகிற செய்தி. பெரியாருடைய சிந்தனை வளர்ச்சி என்பது நமக்குத் தேவையானது. அது எப்போது கிடைக்கும் என்றால், பெரியாருடைய எழுத்துக்கள் கால வரிசைப்படி முழுமையாக எதையும் நீக்காமல், திருத்தாமல், மறைக்காமல் வெளியிடபடுகிறபோது மட்டுந்தான் கிடைக்கும். அப்படித் தான் ஆய்வாளர்கள் எதிர்ப் பார்ப்பார்கள். தங்களைத் தவிர, மற்றவர்கள் பெரியார் நூல்களை வெளியிட்டால் கருத்துகள் சிதைக்கப்பட்டு விடும் என்று கூறுகிறார்கள்.
பெரியார் எழுதியதை ஒன்றை வைத்துக் கொள்ளலாம். இன்னொன்றை நீக்கி விடலாம், ஒரு சொல்லை விட்டு விடலாம், இன்னொரு சொல்லை சேர்த்துக் கொள்ளலாம் என்றால் அதற்குப் பெயர்தான் திரிபுவாதம், புரட்டல் வேலை. இந்த புரட்டல் வாதம், திரிபுவேலை கூடாது என்பதால்தான் உள்ளது உள்ளபடியே தொகுத்து வெளியிடுகிற முயற்சியை, கடினமான பணியை பெரியார் திராவிடர் கழகம் மேற்கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் கேட்கிறேன், வீரமணி சொல்வது போல இப்படியெல்லாம் வெளியிட்டால் தவறாகப் பயன் படுத்தி விடுவார்கள் என்று கூறுகிறாரே; பெரியாரை யார் தவறாகப் பயன்படுத்த முடியும். அதனுடைய எழுத்துக்களை திருத்தி விடுவார்கள், பதிப்பிக்கிறோம் என்ற பெயரில் மாற்றி விடுவார்கள் என்கிறார் வீரமணி. அப்படி இருந்தால் நீங்கள் அம்பலப்படுத்துங்கள். உங்கள் கையிலுள்ள ஏட்டில் எழுதலாம். பாருங்கள் பெரியார் எழுதியது ஒன்று, அவர்கள் வேறொன்றை காட்டுகிறார்கள் என்று. மார்க்சு அவர்கள் தன்னை மார்க்சியவாதியாக அறிவித்துக் கொள்வதற்கு முன்னால் நிறைய எழுதிக் குவித்தார். கையெழுத்துப் படிகளாகவே அவையெல் லாம் இருந்தன. அதற்குப் பெயரே ( Early Manuscripts ) அதாவது, தொடக்கக்கால கையெழுத்துச் சுவடிகள். இன்றைக்கு பல ஆய்வாளர்கள் பிற்காலத்தில் மார்க்சி யத்தோடு முரண்பட்டவர்கள் எல்லாம் உண்மையான மார்க்சியமே அந்தக் கையெழுத்துச் சுவடிகளில் தான் இருக்கின்றது. அவற்றை மொழி பெயர்த்து வெளியிட வேண்டுமென்ற முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக் கிறார்கள். அப்படி பெரியாரைப் பற்றி எத்தனைக் கருத்துக்கள் வேண்டுமானாலும் வரட்டும், முட்டி மோதட்டும், இதுதான் பெரியாரியல் வாதம், விவாதம் அரங்கேறட்டும். அதற்கெல்லாம் அடிப்படையாக பெரியாருடைய படைப்புகள் அவருடைய எழுத்தில், மொழியில், சொல்லில், காலவரிசைப்படி வரவேண்டும்.
வீரமணி அவர்களே! நீங்கள் ஏற்கனவே வெளியிட் டிருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் வெளியிட்டிருப்பதாலேயே மற்றவர்கள் வெளியிடக் கூடாது என்பதில்லை. நீங்கள் வெளியிடாதவற்றையும் வெளியிடலாம். நீங்கள் வெளியிட்டவற்றையும் மீண்டும் வெளியிடலாம். அய்யா ஆனைமுத்து அவர்கள் பல நூல்களை கொண்டு வந்திருக்கிறார். அது மட்டுமல்ல ‘பெரியார் சிந்தனைகள்’ என்று மூன்று பெரிய தொகுப்பையும் கொண்டு வந்தார். அதற்கும் ‘குடிஅரசு’ தொகுப்பிற்கும் வேறுபாடு உண்டு. அது பொருள் குறித்த வரிசையிலே கொண்டு வரப்பட்டது. ஆனால், ‘குடிஅரசு’ கால வரிசைப்படி வருகிறது. இதில் எல்லா வகையான சிந்தனைகளும் இருக்கும். அப்படிப்பட்ட நல்ல நூல் வருவது இன்றியமையாதது.பெரியார் ஒரு காலத்திலே சொன்னதற்கும், இன்னொரு காலத்திலே சொன்னதற்கும் முரண்பாடுகள் இருக்குமோ என்றெல்லாம் வீரமணி கவலைப்படு கின்றார். எங்களுக்கோ இன்றைக்கு கலைஞர் அவர்களைப் பற்றி வீரமணி எழுதி கொண்டிருப் பனவற்றையும், பேசிக் கொண்டிருப்பனவற்றையும், அன்றைக்கு ஜெயலலிதாவைப் பற்றி எழுதிக் கொண் டிருந்தவற்றையும் பேசிக் கொண்டிருந்தனவற்றையும் ஒரே தொகுதியாக நாங்கள் வெளியிட்டால் (சிரிப்பு, கைதட்டல்) முரண்பாடுகள் தெரியும். அதை நாமே கூட அவருக்காக வெளியிடலாம். (கைதட்டல்)

வீரமணி அவர்களை கேட்க விரும்புகிறேன், பெரியாரைப் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் பெரியார் காசிக்குப் போன நிகழ்ச்சி காட்டினீர்கள். எந்த அளவுக்கு நீங்கள் காட்டினீர்கள் என்றால் நமக்கு பெரிதும் வேதனையாக இருந்தது. சாதாரணமாக ஒரு குறியீட்டின் மூலமாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு செய்தி. எச்சில் இலையை பெரியார் வழித்துச் சாப்பிடு வதாக காட்டினீர்கள். நீங்கள் காட்டாமல் விட்டது 1938 ஆம் ஆண்டு மொழிப் போர் நிறைவடைகிற பொழுது சென்னைக் கடற்கரையில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியார் முழக்கமிட்டாரே அதை நீங்கள் அடியோடு மறைத்து விட்டீர்கள். ஏன்? எச்சில் இலையை வழித்து சாப்பிடுகிற மாதிரி காட்டும் அளவுக்கு கலையதார்த்த உணர்வு இருக்கிறது. ஆனால் பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கியதை நீங்கள் காட்ட மாட்டீர்கள். ‘குடிஅரசு’ தொகுதிகள் எல்லாம் வெளி வருமானால் பெரியார் கொள்கை எதுவென்று தெரிந்து விடும்.

வீரமணிக்கு கொள்கை கிடையாது. யுக்தி மட்டுந்தான் உண்டு. அந்த யுக்தியால் மட்டுமே தான் பெரியாரைப் பார்க்கிறார். தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியார் சொன்னதெல்லாம் கொள்கை யல்ல, யுக்தி என்று வீரமணி அவர்கள் விடுதலை இராசேந்திரனுக்கும், எஸ்.வி. இராசதுரைக்கும் பதில் சொன்னதை நான் மறக்கவில்லை. அது யுக்தியா கொள்கையா என்பதை பெரியார் எழுத்திலேயே படித்து தெரிந்து கொள்கிற வாய்ப்பு பெரி யாருடைய ‘குடிஅரசு நூல்கள் வெளி வருகிறபோது நமக்கு கிடைக்கும்.
உருவமில்லாத பொம்மையல்ல பெரியார். உயிருள்ள பெரியாரின் கொள்கைகள் நமக்கு இன்றியமையாதது என்றால், பெரியாரின் சிந்தனைக் களஞ்சியம் நூல்களாக வெளிவரும் எல்லாத் தடைகளையும் உடைத்துக் கொண்டு ‘குடிஅரசு’ தொகுப்பு வெளி வரும் என்பது உறுதி.
தமிழக அரசு வீரமணியை காப்பாற்று வதற்காகவாவது (கைதட்டல்) பெரியார் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள். எங்களுக் காகக் கூட அல்ல. இத்தனையும் மீறி குடிஅரசு நூல்கள் வெளியிடுகிறபொழுது வீரமணி என்ன செய்வார் பாவம். அந்த ஒரு காரணத்திற்காகவாவது இந்த நேரத்தில் உங்கள் நண்பர் வீரமணியைக் காப்பாற்றுங்கள். அவருக்கான நன்றிக் கடனை செலுத்துங்கள்.
செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளில் பெரியார் நூல்கள் அரசுடையாக்கப் பட்டன என்ற அறிவிப்பு வரட்டும்.
பெரியார் வழியில் சமத்துவபுரம் கண்டவர், பெரியாருக்காக நீங்கள் நிறைய செய்திருக்கலாம். ஒன்றை நீங்கள் மறந்து விடக் கூடாது. பெரியார் தன் வாழ்நாளில் தனி மனிதருக்கு சிலை வைக்க சொன்னார் என்றால் அது கலைஞருக்கு மட்டுந்தான். இன்றைக்கு நீங்கள் பெரியாருக்கு சிலை கூட வைக்க வேண்டாம். பெரியாரின் நூல்களை நிரந்தரமாக வரலாற்றிலே பதியச் செய்யுங்கள். வருங்கால தலை முறைக்கு படிக்கக் கொடுங்கள். ஆய்வாளர்கள் அதைப் படித்து தமிழ் சமூகத்திற்கு வழிகாட்டட்டும்.

பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்குக!

பெரியார் நூல்களை நாட்டுடைமை யாக்க வலியுறுத்தியும், வீரமணியை கண்டித்தும் நாகை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் மயிலாடு துறை வட்டாட்சியர் அலுவலகம் முன் பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பெரியார் தி.க. நாகை மாவட்டத் தலைவர் இரா. பரசு ராமன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் நா. இளையராசா, மாவட்ட செயலாளர் தெ. மகேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் தி.க. மாவட்ட துணைத் தலைவர் இரசித்கான் கண்டன உரை யாற்றினார். தொடர்ச்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எழுச்சிப் பாசறை மாநில துணைச் செயலாளர் மா. ஈழவளவன், பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த நாகை மாவட்ட அமைப்பாளர் தங்க. அய்யா சாமி, புரட்சி கவிஞர் கலை இலக்கிய மன்ற மாவட்டச் செயலாளர் அன்பு ராசப்பா, தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் இரா. முரளிதரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக மயிலாடுதுறை நகரச் செயலாளர் ஏகலைவன் அன்பு நன்றி கூறினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை நகரத் தலைவர் நாஞ்சில் சங்கர், நகரத் துணைச் செயலாளர் முகிலன், சீர்காழி நகரச் செயலாளர் பெரியார் செல்வம், மயிலாடுதுறை நகரத் துணைத் தலைவர் ராஜா, குத்தாலம் ஒன்றியத் தலைவர் செ. இயற்கை, ஒன்றியச் செலயாளர் உ.ஜீவா, இளைஞரணி அமைப்பாளர் முத்தழகன், மயிலாடுதுறை ஒன்றிய அமைப்பாளர் முரளீதரன், பொன்னு துரை மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஆர்ப்பாட் டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழர் உரிமை இயக்கத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சென்னையில் அண்ணா நூற்றாண்டு விழா பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டங்கள்
சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழக சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாக்கள் நகர் முழுதும் பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டங்களாக நடத்தப்பட்டன. ஆகஸ்ட் 25 முதல் 28 வரை சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடந்த கூட்டங்களில் சிற்பி. ராசன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தினார்.
ஆக. 25 ஆம் தேதி திருவல்லிக்கேணி வி.ஆர். பிள்ளை வீதியில் நடந்த கூட்டத்தில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் ஆகியோர் அண்ணாவின் சமுதாய - பகுத்தறிவு கருத்துகளை விளக்கி உரையாற்றினர். ம. தம்பிதுரை தலைமை தாங்கினார். பா. பாபு நன்றி கூறினார். ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சி இரவு 10 மணி வரை நடந்தது.
ஆக. 26 அன்று மயிலை விசாலாட்சி தோட்டத்தில் க. சுகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் வழக்கறிஞர் குமாரதேவன், ஈ.பி.இளங்கோ, சிறப்புரையைத் தொடர்ந்து சிற்பி ராசன் நிகழ்ச்சி நடந்தது. தி. இராவணன் நன்றி கூறினார்.
ஆக. 27 இல் இராயப்பேட்டை நடேசன் சாலையில் நடந்த கூட்டத்துக்கு ஆ. பிரபாகரன் தலைமையில் வழக்கறிஞர் குமாரதேவன் சிறப்புரையாற்றினார். செந்தில் நன்றி கூறினார்.
ஆக. 28 இல் இராயப்பேட்டை மாவடி வினாயகன் கோயில் தெருவில் தோழர் ரமேசு தலைமையில் வழக்கறிஞர் குமாரதேவன், ஈ.பி.இளங்கோவன், டிங்கர்குமரன் சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து, சிற்பி. ராசன் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது.

கோவையில் குறும்படங்கள் திரையிடப்பட்டன

கோவையில் பெரி யார் படிப்பகத்தில் பெரியாரியல் பயிலரங்க குழு சார்பில் 15.8.2008 அன்று குறும்படங்கள் திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈழத் தமிழர்களின் அவலங்களை விளக்கியும், யாழ் நூலகம் எரிக்கப்பட்டது குறித்தும் எடுக்கப்பட்ட எரியும் நினைவுகள், வதை, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் சிறுகதையான உடைப்பு, பெண்ணடிமையை விளக்கும் மறை பொருள்ஆகிய
4 குறும்படங்கள் திரையிடப்பட்டன. திரையிடுவதற்கான எல்.சி.டி. கருவியை கிளாடிசு இலவசமாக வழங்கினார். 100க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பயிலரங்க குழு சார்பில் மாநகர பொருளாளர் மணிமாறன், மாநகர தலைவர் ம.ரே. இராசக்குமார், தமிழ்நாடு மாணவர் கழக ச. மணிகண்டன், கதிரவன், காளிமுத்து, சாஜித் உட்பட பலர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர்.

பெரியாரியல் பயிலரங்கம்
கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத் தில் 17.8.2008 ஞாயிறு மாலை பெரியாரியல் பயிலரங்கம், பயிலரங்க குழு சார்பில் நடந்தது. “வன்கொடுமை தடுப்புச் சட்டம்” எனும் தலைப்பில் வழக்கறிஞர் சு. குமாரதேவன் சிறப்பான உரை நிகழ்த்தினார். இ.மு.சாஜித் வரவேற்புரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச்சாமி தலைமை தாங்கினார். கலந்து கொண்ட தோழர்கள் உரையின் முடிவில் பல சந்தேகங்களை கேட்டனர். அனைத்திற்கும் வழக்கறிஞர் சு. குமாரதேவன் தெளிவாக விளக்கம் அளித்தார். பல புதிய தோழர்கள் பங்கேற்றனர். முடிவில் ச. மணிகண்டன் நன்றி கூறினார்.

0 comments: