“அன்பு சகோதரி ஜெயலலிதா ஆட்சிக்கு ஆபத்து வருமேயானால் திராவிடர் கழகம் தற்கொலைப் படையாக மாறும்” - கி.வீரமணி

‘யுக்திகளே’ இவர்களுக்கு இலட்சியம்!


பெரியார் நினைவிடம் பெரியார் திடலுக்குள். பெரியார் அருங்காட்சியகம் (அப்படி ஒன்று இருக்கிறதா என்று எவரும் கேட்டுவிடக் கூடாது) பெரியார் திடலுக்குள். நடத்தும் மாநாடுகளும் பெரியார் திடலுக்குள். இப்படி பெரியார் திடலுக்குள் பெரியாரை முடக்கிப் போட்டவர்கள் ‘பெரியாரியலை’யும் பெரியார் திடலுக்குள்ளே முடக்கிட துடிக்கிறார்கள்.

‘குடிஅரசில்’ பெரியாரின் எழுத்து பேச்சுகளை காலவரிசைப்படி இதுவரை வெளியிட முன் வராதவர்கள் - பெரியார் திராவிடர் கழகம் - கடும் முயற்சி எடுத்து வெளிக் கொணரும்போது, “முடியாது; எங்கள் பெரியார் திடலுக்குள்ளே தான் இருக்க வேண்டும்; அது எங்களின் சொத்து; எவராவது வெளியிட்டால், 15 லட்சத்தை, இழப்பீடாக எடுத்து வை” என்கிறார்கள்.

பார்ப்பனர்களும் இப்படித்தான் ‘வேதம்’ தங்களிடமே இருக்கவேண்டும் என்று நிலைப்படுத்தி - அதை மறை பொருளாக்கினார்கள். அதன் காரணமாகவே அது ‘மறை’ என்னும் பெயர் பெற்றது. பெரியார் எழுத்தும் பேச்சும் காலவரிசைப்படி முழுமையாக வெளி வருவதைக் கண்டு இவர்கள் ஏன் பதட்டமடைகிறார்கள்? கொள்கையை முன்னெடுக்கவே பெரியார் அதற்கான செயல் யுக்திகளைப் பின்பற்றினார் என்பதற்கான அடுக்கடுக்கான சான்று கள் அந்த எழுத்துகளிலும், பேச்சு களிலும் பொதிந்து கிடப்பதுதான், இதற்குக் காரணம்.
காங்கிரசை பெரியார் ஆதரித்த போதும் சரி; எதிர்த்த போதும் சரி; நீதிக்கட்சியை ஆதரித்த போதும்; அதைக் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாக்கியபோதும்; காமராசர் ஆட்சியை ஆதரித்த போதும்; பக்தவத்சலம் ஆட்சியை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய போதும் - பெரியாரின் உறுதியான கொள்கை அடிப்படையிலான ‘செயல் யுக்திகளை’ புரிந்து கொள்ள முடியும். தனது லட்சியங்களை முன்னிறுத்தியே அவரது ஆதரவும் எதிர்ப்புகளும் இருந்திருக்கின்றன.

ஆனால் வீரமணியைப் பொறுத்தவரை ‘யுக்திகளே’ (Strategies) அவரது ஒரே லட்சியமாகிவிட்டது. அந்த ‘யுக்தி’ களுக்காகவே, அவ்வப்போது கொள்கை பரப்பலை செய்து வருகிறார்.தோழர் தியாகுவும் இதே கருத்தை, சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சுட்டிக் காட்டினார். வீரமணியின் லட்சியம் ‘யுக்தி’ (Strategy) தான். யுக்திக்காகவே அவரது பெரியார் கொள்கை பரப்புதல் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு பல சான்றுகளைப் பட்டியலிட முடியும்.

“ஆயுள் உள்ள வரை ஆதரவாக இருப்பேன்”; “அன்பு சகோதரி ஜெயலலிதா ஆட்சிக்கு ஆபத்து வருமேயானால் திராவிடர் கழகம் தற்கொலைப் படையாக மாறும்” என்று “சமூக நீதி காத்த வீராங்கனைக்கு” இன்று கலைஞருக்கு பாராட்டு மழை பொழிவது போல் அன்றும் நாள்தோறும் வாழ்த்துப்பாக்களை பாடிக் கொண்டிருந்தபோது, திராவிடர் கழகத்துக்குள் கொள்கை உணர்வுள்ள இளைஞர்கள் தட்டிக் கேட்டார்கள். வீரமணி, அவர்களை எல்லாம் ‘துரோகிகள்’ பட்டியலில் சேர்த்தார். 1996 இல் பெரியார் திராவிடர் கழகம் உருவானது. கடும் நெருக்கடிக்கு உள்ளான வீரமணி, தனது ‘யுக்தி’யைப் பயன்படுத்தி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு திட்டங்களை தீட்டினார்.

அவசர அவசரமாக பிரச்சார நூல்களை வெளியிட் டார்கள்; புத்தக சந்தைகளை நடத்தினார்கள்; மாநாடுகள் கூட்டப்பட்டன; இவ்வளவும் ‘பெரியார் திராவிடர் கழகம்’ உருவான பிறகு தான்! அய்.அய்.டி. பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து ஆறு ஆண்டுகாலம் களத்தில் நின்று போராடியது. ‘ராமலீலாவை’ எதிர்த்து ‘இராவண லீலா’ நடத்தி, ராமன் படத்தை எரித்து, பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ஒவ்வொரு வருடமும் சிறை ஏகினார்கள். அடுக்கடுக்கான போராட்டங்களை முன்னெடுத்து, பெரியார் இயக்க மரபின் தொடர்ச்சியாக பெரியார் திராவிடர் கழகம் பயணப்பட்டபோது, வீரமணியின் ‘விடுதலை’ முகத்தைத் திருப்பிக் கொண்டது. இவைபற்றியெல்லாம் ஒரு வரி செய்தியும் கிடையாது. கேட்டால், ‘துரோகிகள்’ நடத்தும் ‘பார்ப்பன எதிர்ப்பு’ எங்களுக்கு உடன்பாடானது அல்ல என்று சமூக நீதிகாத்த வீராங்கனைக்கு புகழாரம் சூட்டும் தங்களின் பார்ப்பன எதிர்ப்பே ‘அக்மார்க்’ முத்திரையுடையது என்றார்கள்.

பெரியார் மறைவுக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் தலைமை ஏற்ற நிலையில், பெரியார் கருத்துகளை கடவுள், மதம், பெண்ணுரிமை போன்ற தலைப்புகளில் தொகுத்து, ‘பெரியார் களஞ்சியம்’ வெளியிடும் திட்டத்தைத் தொடங் கினார். 6 தொகுதிகள் வரை வெளிவந்தன. 6வது தொகுப்பு வெளி வந்தது 1991 அக்டோபர். அப்போது ‘அம்மா’ ஆட்சிக் கட்டிலுக்கு வந்த நேரம். அம்மாவுக்கு வாழ்த்துப்பா பாடு வதிலும், கலைஞருக்கு எதிராக அர்ச்சனைகளை நடத்து வதிலும்தான் காலம் உருண்டோடியது. யுக்தியையே லட்சிய மாக்கிக் கொண்டவர்கள், வேறு என்ன செய்வார்கள். ஆட்சி யாளர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ‘யுக்திகளே’ திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளாயின.

2003 ஆம் ஆண்டு ‘பெரியார் திராவிடர் கழகம்’ பெரியாரின் ‘குடிஅரசு’ பேச்சு எழுத்துகளைத் தொகுத்து, 1925 ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதியை வெளியிட்டது. பெரியார் சொத்துகளையும் அறக்கட்டளை களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள கி.வீரமணி, இந்தத் தொகுப்புகளை ஏன் வெளியிடவில்லை என்ற கேள்விகள் வீரமணியை நெருக்கடிக்கு உள்ளாக்கின. அந்த நெருக்கடியிலிருந்து மீள, ஒரு ‘யுக்தி’யாக பெரியார் களஞ்சியத்தின் அடுத்த தொகுப்பை ‘சாதி-தீண்டாமை’ எனும் தலைப்பில் 2004 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

பெரியார் களஞ்சியத்தின் 6 ஆம் தொகுப்புக்குப் பிறகு 7வது தொகுப்பை வெளியிட கி.வீரமணிக்கு 13 ஆண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது. அதுவும் எப்படி வந்தது? 2003 ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ முதல் தொகுப்பை வெளியிட்ட பிறகு தான்! அதற்குப் பிறகு தான் ‘குடிஅரசு’ நூல்களை குறுந்தகடுகளாக வெளியிடும் அறிவிப்பும் வந்தது. தனது நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ‘யுக்தியாகவே’ வீரமணி செயல்பட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும். ‘சாதி தீண்டாமை’ (7வது தொகுப்பு), 2004 ஆம் ஆண்டு ஒரு தொகுப்பும், 2005 ஆம் ஆண்டு ஒரு தொகுப்பும் (8வது தொகுப்பு) என ஆண்டுக்கு ஒரு தொகுப்பை திராவிடர் கழகம் வெளியிட்டது. அதற்குப் பிறகு 2006 ஆம் ஆண்டில் பெரியார் திராவிடர் கழகம் 1926 ஆம் ஆண்டு ‘குடிஅரசில்’ பெரியார் பேச்சு எழுத்துக்களைத் தொகுத்து ஒரே நேரத்தில் இரு தொகுதிகளை வெளியிட்ட போது, மீண்டும் வீரமணிக்கு அதிர்ச்சி.

“இந்த துரோகிகளுக்கு வேறு வேலையே கிடையாது போலிருக்கு, நம்ம உயிரை வாங்குறானுங்க. பேசாமல், நாம ஒரு அரசியல் கட்சியை துதி பாடுவதுபோல், அவனுகளும், ஒரு அரசியல் கட்சிக்குப் பின்னாலே போக வேண்டியது தானே. இந்த ‘துரோகி’களுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை” என்று மனம் புழுங்கியிருப்பார். நெருக்கடியிலிருந்து மீள - மீண்டும் - ‘சாதி-தீண்டாமை’ தொகுப்புகள் தொடர்ச்சி யாக வெளிவரத் தொடங்கின. நாமும் மகிழ்ச்சி அடைந்தோம். எப்படியோ, பெரியார் நூல்களை வெளிவரச் செய்திருக்கிறோமே என்ற மகிழ்ச்சி தான்.

பெரியார் திராவிடர் கழகம் தனது செயல்பாட்டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிடுவதில் தீவிரம் காட்டி, 1925-லிருந்து 1938 வரை 27 தொகுதிகளை ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டு அறிவித்தது வீரமணியால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இனியும், இவர்களை அனுமதிக்கக் கூடாது என்று தடைப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி விட்டார்.

பெரியார் கருத்துகளைப் பரப்பு வதற்கு பெரியார் பெயரில் இயக்கம் நடத்துகிறவர்களே தடுக்கிறார்களே என்று கேள்விகள் மக்கள் மன்றத்தில் வெடித்த நிலையில், பெரியார் கருத்துகளைப் பரப்பும் “துரோகிகள்”, “அநாமதேயங்கள்”, “வெளியேற்றப் பட்டவர்கள்” பட்டியல் மேலும் நீண்டு விடும் என்ற அச்சத்தில் மீண்டும் ‘யுக்தி’ யைப் பயன்படுத்தினார். அதுதான் நடந்து முடிந்துள்ள மாநாடு. தொண்டர் களை தக்க வைத்துக் கொள்ள வழக்க மாக வீரமணி நடத்தும் “யுக்தி” தான்.

“பெரியார் திராவிடர் கழகம்’ 28 தொகுதிகளை ரூ.3500-க்கு வழங்கு கிறதா? இதோ நான் 30 தொகுதிகளை ரூ.2500-க்கு தருகிறேன். ஒரு ‘பை’ இலவசம்” என்று அறிவிப்புகள் வரு கின்றன. இதுவும் நமக்கு மகிழ்ச்சி தான். பெரியார் கொள்கைகள் தீவிரமாகப் பரவும் போதுதான் மக்கள் உண்மை யான பெரியாரியலைப் புரிந்து கொள் வார்கள். சமூக மாற்றத்துக்கும் தயார் ஆவார்கள் என்பதில் நமக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. பெரியார் கொள்கை பரப்புதலை ‘யுக்திக்காகவே’ நடத்தி வரும் கி.வீரமணியின் பார்வையில் நாங்கள் “துரோகிகளாகவும்” “நீக்கப் பட்டவர்களாகவும்” இருக்கிறோம் என்பதுதான் நாங்கள் உண்மையான பெரியாரியல்வாதிகள் என்பதற்கான சான்று. ஒன்றை மட்டும் சொல்லி வைக்கிறோம். பெரியார் திராவிடர் கழகத்தை முடக்கி விட்டு, ‘யுக்திகளுக் குள்ளேயே’ காலத்தை கடத்தி விடலாம் என்று மட்டும் கனவு காண வேண் டாம். அடிக்க அடிக்க எழும் பந்து போல், பெரியார் திராவிடர் கழகம் வலுப் பெற்று, களப் பணிகளில் இறங்கும்; எங்களின் தோழர்கள் உறுதி யான கொள்கையாளர்கள்; திருவரங்கம் பெரியார் சிலை உடைக்கப்பட்டபோது - தாங்கள் யார் என்பதை அடையாளம் காட்டியவர்கள். நன்கொடை செலுத்தி கல்லூரிகளில் படிக்க வந்த அப்பாவி மாணவர்கள் அல்ல.

பெரியாரின் ‘குடிஅரசுகள்’ வீர மணிகள் இருட்டடிக்கும் சுயமரியாதை இயக்கக் காலத்தின் உணர்வலைகளை இனி தட்டி எழுப்பப் போவது உறுதி. அப்போது ‘யுக்தி’யாளர்களும் அவரது ‘பக்தியாளர்களும்’ கல்வி நிறுவனங் களின் கணக்குகளை பார்த்துக் கொண் டிருக்க முடியாது; ‘துரோகிகள்’ என்று புலம்பிக் கொண்டிருக்க முடியாது. காலத்தின் அறை கூவலை சந்திக்க வேண்டியிருக்கும்.

- ‘இரா’


உயர்நீதிமன்றத்தில் புரட்சிகர தீர்ப்பு!

கோயில்களில் பெண்கள் அர்ச்சகர்களாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், பூசை உட்பட சடங்குகளில் அவர்கள் பங்கேற்பதை, பாலின அடிப்படையில் தடுக்கக் கூடாது என்றும், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியுள்ள தீர்ப்பை (செப்.5, 2008) வரவேற்று பாராட்டுகிறோம். உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு, சமூக வரலாற்றில் பதியத்தக்க இத்தகைய புரட்சிகர தீர்ப்பை வழங்கியிருக்கிறார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் நல்லுத்தேவன்பட்டி கிராமத்தில் துர்க்கையம்மன் கோயிலில் பணியாற்றிய அர்ச்சகர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது மகள் அர்ச்சகராக பூசை செய்ய விரும்பினார். இப்படி, துணிவான ஒரு முடிவுக்கு வந்த அந்த பெண்ணின் பெயர் பின்னியக்காள் (வயது 45).

பெண்ணை அடிமைப்படுத்தி வைத்துள்ள, ஆணாதிக்க-பார்ப்பன-சாதியமைப்பு சமூகம், அதை அனுமதித்து விடுமா? எதிர்ப்புகள் எழுந்தன. ஆணாதிக்க சாதி வெறியர்கள் இதைத் தடுக்க முயன்றபோது, உசிலம்பட்டி வட்டாட்சியர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழு, பெண்ணுக்கு பூசாரியாகும் உரிமையில்லை என்று கூறி, ஆண் பூசாரி ஒருவரையும் தேர்வு செய்தது. உள்ளூர் சாதி ஆதிக்க பெண்ணடிமைக்கு அரசு எந்திரமும், துணை போயிருப்பது தான் வெட்கக் கேடானது. நீதிபதி தமது தீர்ப்பில் இதைத் தவறாமல் சுட்டிக் காட்டியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அரசு ஊழியரான ஒரு தாசில்தாரே பிற்போக்குசக்திகளின் மூடத்தனமான கருத்துகளுக்கு துணை போயிருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டி, கண்டித்துள்ளார்.
“வணங்கப்படக்கூடிய கடவுள் - அம்மன் என்ற பெண் உருவத்தில் இருந்தும்கூட, ஒரு பெண் அர்ச்சகராக இருக்கக் கூடாது என்று கூறுவதுதான், துயரமாகும். வேத காலங்களில்கூட - பெண்கள், பூஜைகள், சடங்குகள் நடத்த அனுமதிக்கப்பட் டுள்ளார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளன. அதிர்ஷ்ட வசமாக, இந்த துர்க்கையம்மன் கோயில் ஆகம சா°திர வளையத்துக்குள் சிக்கிக் கொள்ளவில்லை. நாட்டின் தென் பகுதியிலுள்ள உள்ளூர் கலாச்சாரங்களின் அடையாளங்களான கிராமக் கோயில்கள் ‘மனு°மிருதி’களிலிருந்து விலகியே உள்ளன’ என்று நீதிபதி சமூகப் பார்வையோடு சுட்டிக் காட்டியுள்ள கருத்துக்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவைகளாகும்.

சமூகக் கண்ணோட்டத்தில் இக்கருத்துக்களைப் பதிவு செய்த நீதிபதி, சட்டப் பிரிவுகளை எடுத்துக் காட்டியிருக்கிறார். இத்தகைய உரிமைகளை பெண்களுக்கு வழங்குவதன் வழியாக மட்டுமே அரசியல் சட்டத்தின் பிரிவு 15 மற்றும் 51ய(ந) ஆகிய பிரிவுகள் செயல்பூர்வமாகிறது என்ற அர்த்தத்தைப் பெற முடியும். அரசியல் சட்டத்தின் 15வது பிரிவு பால் அடிப்படையில் குடிமக்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது என்று கூறுகிறது.சட்டப் பிரிவு 51ய(ந) பெண்களின் கவுரவத்தைக் குலைக்கக் கூடிய செயல்பாடுகளைக் கைவிடுதலை ஒவ்வொரு குடிமகனுக்குமான அடிப்படை கடமையாக வலியுறுத்துகிறது” என்று நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஆகமங்களுக்குள்ளும், மனுஸ்மிருதிக்குள்ளும் கோயில்கள் கொண்டு வரப்படும்போது, அங்கே அரசியல் சட்டம் வழங்கியுள்ள பெண்ணுரிமைகள் மீறப்படுவதை தீர்ப்பு சுட்டிக்காட்டியிருப்பதோடு ஆகமங்களும், மனுஸ்மிருதிகளும் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானவையே என்பதை, இத் தீர்ப்பு துணிவுடன் பிரகடனப்படுத்தியிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பெண் அர்ச்சகராகப் பதவியைத் தொடருவதற்கு மாவட்ட ஆட்சியாளர் உரியப் பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என்றும், நீதிபதி கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார்.


ஆகமங்களுக்கு உட்படாத கிராம கோயில்களுக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், ஆகம கோயில்களுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்பு கிறோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கலைஞர் கொண்டு வந்தபோதே, கழகம் இந்தக் கருத்தை சுட்டிக் காட்டியுள்ளதை குறிப்பிட விரும்புகிறோம். தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை கோயில்களில் பெண்கள் ஊழியர்களாக பணியாற்றுவதற்கே தடை விதித்திருந்தது. மாநில அரசு தேர்வாணையம் இந்து கோயில் நிர்வாகத்துக்கான ஊழியர்கள் தேர்வில் பெண்கள், விண்ணப்பிக்கக் கூடாது என்று விளம்பரம் செய்திருந்ததை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையைத் தகர்த்தது. அதற்குப் பிறகு தான் கோயில் நிர்வாகங்களில், பெண்கள், பணியாற்றும் உரிமை கிடைத்தது. இப்போது, நீதிபதி கே. சந்துரு வழங்கியுள்ள தீர்ப்பு ஆகமக் கோயில்களுக்கும் விரிவாகும் போதுதான் பெண்கள் மீது மதம் விதித்து வரும் தடைகளைத் தகர்க்க முடியும். ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும்’ என்ற உரிமை கோரிக்கை ஆண்களுக்கானதாக மட்டுமே நின்று விட்டால், அது முழுமையான உரிமைக்கான கோரிக்கையாகவும் இருக்க முடியாது என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

ஏன் இந்த அவலமோ!

பெரியார் திராவிடர் கழகம் 27 “குடிஅரசு” தொகுப்புகளை வெளியிடுவதை ‘விடுதலை’யில் அதன் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் (ஆகஸ்டு 24) இவ்வாறு குறை கூறி இருந்தார்.“ஆயிரம் ஆயிரம் பக்கங்களாக தொகுதிகளை வெளியிடுவதால் யாருக்குப் பயன்? பணம் கொடுத்து வாங்கும் சக்தி உள்ளவர்களின் அலமாரிகளில் அழகு செய்யும். சாதாரண மக்களுக்குச் சென்றடையாது.”இப்படி எழுதி இரு வாரங்கள் மட்டுமே ஓடின. செப்டம்பர் 7 ஆம் தேதி விடுதலையில் இப்படி ஒரு விளம்பரம்:

“பெரியார் களஞ்சியம் வாங்குவோருக்கு அழகிய பை அன்பளிப்பு. 31 தொகுதிகள் 10,000-க்கும் அதிகமான பக்கங்கள். ரூ.2500 மட்டுமே!” போச்சுடா! ஆயிரம் ஆயிரம் பக்கங்கள் வெளியிடுவதால் யாருக்குப் பயன்? என்று எழுதியவர்கள், இப்போது, முகத்தில் கரி பூசிக் கொள்ள வேண்டியதுதான். வீரமணியை நம்பி, அவர் எடுக்கும் முடிவுகளுக்கு எல்லாம் விரிவுரைகள் தரத் தொடங்கினால், இப்படிப்பட்ட விபத்துகளைத் தான் எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை எழுத்தாளர்கள் புரிந்து கொள்வது நல்லது. இனி, அடுத்து என்ன?


“வாராது வந்த மாமணியாய் - தந்தை பெரியாருக்குக் கிடைத்த - அந்தத் தமிழர் தலைவர்தான் ஒரே மூச்சில், 10000க்கும் மேற்பட்ட பக்கங்களில் 31 தொகுதிகளை அச்சிட்டு, அகிலத்துக்கும் பரப்பி, அதுவும் அடக்கவிலை ரூ.2500-க்கே வழங்கி சாதனை படைக்கிறார் என்பதால், துரோகிகள் வயிறு எரிகிறார்கள்” என்று அடுத்த கட்டுரையில் இவரே எழுத வேண்டியிருக்கும். எனவே வீரமணியின் விரிவுரையாளர்கள் அவரை நம்பி, வாதங்களை முன் வைக்காதிருப்பதே சாலச் சிறந்தது! இல்லையேல் இந்த அவலம் தான்!

மயிலாடுதுறையில் தொடர் பிரச்சார எழுச்சி

மயிலாடுதுறை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மூடநம்பிக்கை ஒழிப்பு - பகுத்தறிவு விளக்க தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் ஆகஸ்டு 18, 19, 20 ஆகிய நாட்கள் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது.

எழுச்சியாக நடைபெற்ற தொடர் பிரச் சாரக் கூட்டங்கள் அனைத்திற்கும் பெரியார் தி.க. மாவட்ட துணைத் தலைவர் இரசீத்கான் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் நா. இளையராசா, மாவட்ட செயலாளர் தெ. மகேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து கூட்டங்களிலும் முதல் நிகழ்ச்சி யாக ஏகலைவன் அன்பு இன எழுச்சிப் பாடல்கள் பாடினார். பின்பு சிற்பி இராசன், ‘மந்திரமல்ல தந்திரமே’ எனும் பகுத்தறிவு விளக்க நிகழ்ச்சியை நடத்தினார். இதனை அடுத்து பெரியார் தி.க. தலைமை கழக பேச்சாளர் நங்கவள்ளி அன்பு எழுச்சியுரை யாற்றினார்.

18.8.08 அன்று மாலை 4 மணிக்கு கொற்கை என்ற கிராமத்தில் பிரச்சாரக் கூட்டம் தொடங்கியது. பின்பு மாலை 6 மணிக்கு ஆனதாண்டவபுரத்தில் எழுச்சியாக நடைபெற்றது. அப்பகுதி தோழர்களான வினோத், ஸ்ரீதர், பகலவன் ஆகியோர் காலை முதல் பெரியார் இன எழுச்சிப் பாடல்களை ஒலிக்கச் செய்தனர். பின்பு கூட்டத்தின் இறுதியில் கழக கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகே இரவு 8 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 10 மணி வரை நடைபெற்றது. நிகழ்ச்சியை பெரும் திரளான மக்கள் கண்டு களித்து வரவேற்றனர்.


19.8.08 அன்று மாலை 4 மணிக்கு மங்கை நல்லூர் கடைவீதியில் பிரச்சார கூட்டம் துவங்கி 6 மணி அளவில் எலந்தங்குடி பகுதி யில் கழக கொடியேற்றி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இரவு 8 மணிக்கு கோடங் குடி கிராம பகுதியில் பிரச்சாரக் கூட்டம் தொடங்கி 10 மணியளவில் முடிவடைந்தது. இறுதி நாள் நிகழ்ச்சியாக 20.8.08 அன்று மாலை குத்தாலம் கடைவீதியில் 4 மணிக்கு ஆரம்பித்து 6 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. பெரும் திரளான மக்கள் கண்டு களித்தனர். பின்னர் 6.30 மணி அளவில் மாப்படுகை கிராம பகுதியில் பிரச்சாரம் துவங்கி 8 மணி வரை நடந்தது. இறுதியாக ரயிலடி கடைவிதியில் 8.30 மணியளவில் துவங்கி 10 மணி வரை நடைபெற்றது.
மூன்று நாள் நிகழ்ச்சியிலும் புதிய பகுதி களில் கழகத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது. தொடர் பிரச்சாரத்தின் மூலமாக பெரியார் திராவிடர் கழகத்தின் செயல் பாட்டினை நங்கவள்ளி அன்பு சிறப்பாக விளக்கினார். மூடநம்பிக்கைகளை தோலு ரிக்கும் நிகழ்ச்சிகளை சிற்பி ராசன் விளக்கி செய்து காட்டினார். கழகத் தோழர்கள் மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் இருசக்கர வாகனங்களில் முழக்கங்களோடும் கொடி களை ஏந்தி வந்தது எழுச்சியாக இருந்தது.மூன்று நாள் நிகழ்வுகளிலும் பங்கேற்ற தோழர்கள்: நகர செயலாளர் ஏகலைவன் அன்பு, நகர தலைவர் நாஞ்சில் சங்கர், நகர துணை தலைவர் ராஜா, நகர துணைச் செயலாளர் முகிலன், முத்தழகன், உதயகுமார், விஜி, ஒன்றியத் தலைவர் உ. ஜீவா, ஒன்றிய செயலாளர் இயற்கை, சந்துரு, வினோத், பகலவன், ஸ்ரீதர், ராஜா, பொன்னுதுரை, முரளி, சதீஷ் மற்றும் தோழர்கள் மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.

0 comments: